Pages

Monday, April 15, 2019

அபிராமி அந்தாதி - எந்தன் விழுத் துணையே

அபிராமி அந்தாதி - எந்தன் விழுத் துணையே


பையன்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரி அது.  அவர்கள் முதன் முதலாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். மனதுக்குள் ஆயிரம் மின்னல். விட்ட குறை தொட்ட குறையாக எங்கேயோ எப்போதோ தொடங்கிய சொந்தம் இந்தப் பிறவியிலும் தொடர்கிறதோ என்று இருவர் மனத்திலும் ஒரு மெல்லிய உணர்வு.

பேச்சு எல்லாம் இல்லை. எல்லாம் கண் பார்வைதான். அதில் ஆயிரம் கவிதைகள்.

தொடாமல் பேசாமல் அவர்கள் காதல் நாளொரு வண்ணமாய் வளர்கிறது.

அவனுக்கு உள்ளுக்குள் ஒரு சந்தேகம்...."அவள் உண்மையிலேயே என்னை விருப்புகிறாளா அல்லது நான் தான் ஏதோ நினைத்துக் கொண்டு அலைகிறேனா " என்று. நேரே போய் கேட்டு விட்டால் என்ன? ஒரு வேளை "அப்படி எல்லாம் இல்லை " என்று சொல்லி விட்டால் ? அந்தப் பயத்திலேயே ஒவ்வொரு நாளும் கழிகிறது.

ஒவ்வொரு நாளும் அவள் வரும் வழி பார்த்து காத்திருப்பான். தூரத்தில் அவள் வருவது தெரிந்தால் அவன் மனதில் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் ஒரு சேர மலரும். அவள் அருகில் வர வர அவன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.


கண்ணை மூடி அபிராமியை நினைக்கிறார் அபிராமி பட்டர்.

அவள் முகம், அவள் கண், அவள் உதடு, அவள் நெற்றி ஒவ்வொன்றாக அவர் மனக்கண்ணில் வந்து போகிறது. அவளின் ஒவ்வொரு அவயவமும் அவ்வளவு அழகு. அவ்வளவு பிரகாசம்.

பாடல்

‘‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழத்துணையே’’ 


பொருள்


‘‘உதிக்கின்ற செங்கதிர் = உதிக்கின்ற சூரியன்.

உதித்தல் என்றால் இதுவரை மறைந்து இருந்தது, தெரியாமல் இருந்தது, இப்போது தோன்றுவதற்கு உதித்தல் என்று பெயர்.

சூரியன் இன்று தோன்றவில்லை. அது என்றுமே உள்ளது. இரவில் தெரியாமல் இருந்தது, இப்போது உதித்தது.

"ஒரு திரு முருகன் வந்து அங்கு உதித்தனன்" என்பார் கச்சியப்பர் கந்த புராணத்தில்.


அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்,
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகி,
கருணை கூர் முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே,
ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு, உதித்தனன் உலகமுய்ய.

இறைவன் என்றும் உள்ளவன். அவன் தோன்றாத தன்மையன். எனவே தான் முருகன் உதித்தான் என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

சூரியன் ஒளி போல் பிரகாசமாய் இருந்தது...எது ?

 உச்சித் திலகம்  = அவளுடைய உச்சியில் வைத்த திலகம்

 உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் = உணர்வு உடையோர் மதிக்கின்ற மாணிக்கம்.

அறிவுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்று சொல்லி இருக்கலாம் தானே. அறிவு, மேலும் மேலும் குழப்பத்தையே தரும். உணர்வு அப்படி அல்ல. அதில் ரொம்ப குழப்பம் இல்லை.


 மாதுளம் போது = மாதுளை மொட்டு

மலர்கமலை = தாமரை மலர்

துதிக்கின்ற மின் கொடி =   வணங்கத்தக்க மின்னல் போன்ற கொடி

எவ்வளவு சிக்கல்கள், குழப்பங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒரே நொடியில் தீர்த்து வைப்பவள். மின்னல் அடிக்கும் நேரத்தில். எனவே மின் கொடி

மென்கடிக் = மென்மையான வாசனை கலந்த

குங்கும தோயமென்ன =குங்கும நீர் போல

விதிக்கின்ற மேனி = விளங்குகின்ற மேனி

அபிராமி  = அபிராமி

என்தன் = என்னுடைய

விழுத்துணையே’’ = சிறந்த  துணையே


உதிக்கின்ற செங்கதிர் 
உச்சித் திலகம் 
மதிக்கின்ற மாணிக்கம் 
மாதுளம் பூ 
குங்குமம் 

எல்லாம் சிவப்பு மயம். அவள் சிவந்த மேனியள். 

அம்பாளை பலர் பச்சை நிறம் என்று சொல்லுவார்கள், கறுப்பு நிறம் என்று சொல்லுவார்கள். 

பட்டர் சிவந்த மேனியாக பாக்கிறார். கண்ணை ஒரு நிமிடம் மூடிப் பாருங்கள். 

சிவப்பும், ரோஸ் கலரும் கண்ணுக்குள் குழைந்து ஓடுவதை காண்பீர்கள். 

அப்படிப்பட்ட அவள், என்னுடையவள். எனக்கு வழி காட்டுபவள் என்கிறார் பட்டர்.

"விதிக்கின்ற மேனி, அபிராமி, "எந்தன்" விழுத் துணையே"

என்னுடைய துணை அவள் என்று சொந்தம் கொண்டாடுகிறார். 

"விதிக்கின்ற மேனி , அபிராமி, "நமக்கு" விழுத் துணையே"

என்று சொல்லவில்லை. 

அவ்வளவு அன்யோன்யம்.



2 comments:

  1. அபிராமி அந்தாதியில் எப்போதும் ஒரு அன்னியோன்னியம் இழையோடி நிற்கிறது. தந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  2. மலர்கமலை
    துதிக்கின்ற மின் கொடி என்றால் தாமரை மலரில் இருக்கும் திருமகள், அவள் துதிக்கும் என்று பொருள். இந்தப் பதங்களைப் பிரித்துப் பொருள் சொல்லக் கூடாது.

    ReplyDelete