கம்ப இராமாயணம் - காமன் செய்யும் வன்மையை காத்தி
"உன்னிடம் ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது" என்று சூர்ப்பனகை இராமனிடம் கூறினாள். அதற்கு இராமன்
"என்ன வேண்டும் என்று சொல். முடிந்தால் செய்து தருகிறேன்" என்று கூறுகிறான்.
முன் பின் தெரியாத ஒரு இளம் பெண் வந்து உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது என்று சொன்னால், உடனே "சொல்லும், முடிந்தால் செய்து தருகிறேன்" என்று வாக்களிக்க வேண்டிய அவசியம் என்ன.
"என்ன காரியம்" என்று கேட்டு விட்டு, பின் செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாமே.
வந்த சூர்ப்பனகை சொல்கிறாள்.
அராக்கிதான் என்றாலும் அவளும் ஒரு பெண் தானே. பெண்ணுக்கு தன் உணர்ச்சிகளை வெளியே சொல்லத் தயக்கம் இருக்கும்தானே. நீட்டி முழக்கி சொல்லுகிறாள்.
"தாங்கள் கொண்ட காமத்தை தாங்களே உரைப்பது என்பது குல மகளிருக்கு ஏற்றது அல்ல. இருந்தும் ஏக்கம் தரும் அந்த நோய்க்கு என்ன செய்வேன். எனக்கு என்று யாரும் இல்லை. காமன் என்ற ஒருவன் என்னை ரொம்ப துன்பப் படுத்துகிறான். அவனிடம் இருந்து என்னை நீ காப்பாற்று" என்கிறாள்.
பாடல்
தாம் உறு காமத் தன்மை தாங்களே
உரைப்பது என்பது
ஆம் எனல் ஆவது அன்றால், அருங் குல
மகளிர்க்கு அம்மா!
ஏமுறும் உயிர்க்கு நோவேன்; என் செய்கேன்?
யாரும் இல்லேன்;
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக்
காத்தி' என்றாள்.
பொருள்
தாம் உறு = தாங்கள் உற்ற, தாங்கள் பெற்ற
காமத் தன்மை = காமத்தை
தாங்களே = அவர்களே
உரைப்பது என்பது = சொல்வது என்பது
ஆம் எனல் ஆவது = சரி என்று ஆவது
அன்றால் = இல்லை.
அருங் குல மகளிர்க்கு அம்மா! = சிறந்த குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு
ஏமுறும் = ஏக்கம் தரும்
உயிர்க்கு = உயிருக்கு
நோவேன் = துன்பப் படுகிறேன்
என் செய்கேன்? = என்ன செய்வேன் ?
யாரும் இல்லேன்; = துணை யாரும் இல்லை
காமன் என்று ஒருவன் = காமன் என்ற ஒருவன்
செய்யும் வன்மையைக் = செய்யும் வன்மையில் இருந்து
காத்தி' என்றாள். = என்ன காப்பாற்று என்றாள்
அந்தக் காலத்தில் மடலேறுதல் என்று ஒரு வழக்கம் இருந்தது.
ஒரு ஆணுக்கு ஒரு பெண் மேல் காதல் வந்து விட்டால், அதை அந்தப் பெண்ணின் தகப்பனோ, குடும்பமோ எதிர்த்தால், அந்தப் பையன் பனை ஓலையில் குதிரை மாதிரி செய்து, அதில் அமர்ந்து கொண்டு, ஊரில் உள்ள சின்ன பசங்களை கூப்பிட்டு அந்தக் குதிரையை இழுத்துக் கொண்டு போய் , தான் காதலித்த பெண்ணின் வீட்டு வாசலில் நிறுத்தி விடுவான். அந்த குதிரை மேல் அவன் அமர்ந்து கொள்வான்.
ஊருக்கே தெரிந்து விடும். இந்தப் பையன், அந்த வீட்டுப் பெண்ணை விரும்புகிறான் என்று. வேறு யார் அந்தப் பெண்ணை மணந்து கொள்வார்கள்? ஊரில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து, பஞ்சாயத்து பண்ணி, பையனையும் பெண்ணையும் சேர்த்து வைப்பார்கள்.
அதற்கு மடல் ஏறுதல் என்று பெயர்.
இந்த மடல் ஏறுதல் என்பது ஆண்கள்தான் செய்து இருக்கிறார்கள். எந்தப் பெண்ணும் அப்படி செய்தது இல்லை.
பெண்ணுக்கு மட்டும் ஆசை இருக்காதா ? இருக்கும். இருந்தும் அதை வெளியே காட்டிக் கொள்வது இல்லை.
இதைக் கண்டு வியக்கிறார் வள்ளுவர் ?
கடல் போல காமம் வந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கும் பெண்ணின் அடக்கம் மிகப் பெரியது என்கிறார்.
கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்
காமம் கடல் போன்றது என்கிறார் வள்ளுவர். மிகப் பெரியது. கடல் பொங்கி வந்தால் அதை கரை கட்டி தடுக்க முடியாது. இருந்தும் , இந்தப் பெண்கள் அந்த காமத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கும் பெரிய சிறப்பை உடையவர்கள் என்று அவர்களை பாராட்டுகிறார்.
நல்ல குல பெண்கள், தாங்களே தங்கள் காமத்தை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பது குறிப்பு.
இருந்தும், "நான் சொல்கிறேன். எனவே, நான் நல்ல குடியில் பிறக்கவில்லை என்று எண்ணிக் கொள்ளாதே. என்ன செய்வது, காமன் என்னை வருந்துகிறான்" என்கிறாள்.
தீயவர்களை எப்படி இனம் கண்டு கொள்வது?
அவர்கள் பார்க்க நன்றாக இருப்பார்கள். தேனொழுகப் பேசுவார்கள்.
அந்தப் பேச்சில் இருந்து அவர்களை கண்டு கொள்ளலாம்.
நல்லவர்கள் வாயில் சில சொற்கள் வரவே வராது. அப்படி வந்தால், அவர்கள் நல்லவர்கள் இல்லை என்று அறிந்து கொள்ளலாம். மறந்தும் கூட தீய வார்த்தைகள் அவர்கள் வாயில் இருந்து வராது.
ஆற்றில் வெள்ளம் வற்றி விட்டது. கால் வைக்க முடியவில்லை. சுட்டுக் பொசுக்கிறது. அந்த சமயத்தில் கூட, ஆற்று மண்ணை தோண்டினால் ஊற்று நீர் வரும். அது தாகம் தணிக்கும். அது போல, நல்லவர்கள் ஏழ்மை வயப் பட்டாலும், தங்களிடம் உதவி வேண்டும் என்று கேட்டு வந்தவர்களுக்கு "இல்லை" என்று சொல்ல மாட்டார்கள்.
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.
உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்யாதவன் , நல்ல குடியில் பிறந்தவன் அல்ல. அவன் வாயில் "இல்லை" என்ற சொல் வராது.
அது போல நல்ல குடியில் பிறந்த பெண்களுக்கு, தங்கள் காமத்தை வெளிப்படுத்தும் சொல் வராது. வந்தால், அவள் நல்ல குடியில் பிறந்தவள் அல்ல என்று தெரிந்து கொள்ளலாம்.
பண்பாட்டு பாடம்.
தீயவர்களை , அவர்கள் பேசும் பேச்சில் இருந்து தெரிந்து கொள்ளும் பாடம்.
மேலும் படிப்போம்.
கம்ப இராமாயண பாடல்கள் கம்பன் காலத்தை ஒட்டி அப்பொழுது உள்ள பழக்க வழக்கங்களை மனதில் கொண்டு எழுத பாட்டு இருக்கின்றன.அவைகளை நாமும் அப்படியே ரசிக்க வேண்டும்.மாறாக நிகழ் காலத்திற்கு அதில் உள்ள பாடங்களை முழுக்க ஒப்பிட்டு பார்க்க கூடாது அல்லவா?
ReplyDelete1. தன் காமத்தை வெளிப்படுத்துபவள் நல்ல குடிப் பெண் அல்ல என்பதெல்லாம் அந்தக் காலம்!
ReplyDelete2. ஏன் பெண்களுக்கு ஒரு நெறி, ஆண்களுக்கு ஒரு நெறி என்று வைத்திருந்தார்கள்? அது சரியா?