Pages

Tuesday, April 9, 2019

கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்

கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள் 


சூர்ப்பனகையின் வாயிலாக இராமனை வர்ணித்துக் கொண்டே போகிறான் கம்பன். பாடல்கள் இன்னும் இருக்கின்றன. விட்டு விட்டு மேலே சொல்வோம்.

அரக்கி வடிவில் சென்றால் இராமனை மயக்க முடியாது என்று தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்.

பாடல் 



பஞ்சி ஒளிர்விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர்சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை எனஅன்னம் எனமின்னும்
வஞ்சி எனநஞ்சம் எனவஞ்ச மகள் வந்தாள்.

பொருள் 

சூர்பனகையின் பாதம் நடந்து நடந்து வருந்துகிறது

அது எவ்வளவு மெல்லிய பாதம் தெரியுமா?


பஞ்சி = பஞ்சு போன்ற

ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க = பல்லவம் அப்படினா தளிர்.அனுங்க என்றால் வருந்த. குளிர்ச்சியான தளிர்கள் வருந்துமாம். ஏன் ? தங்களை விட சூர்ப்பனகையின் பாதம் இவ்வளவு மென்மையாக இருக்கிறதே, நாம் அப்படி இல்லையே என்று வருந்துமாம். 

செஞ் செவிய = செக்க சிவந்த

கஞ்சம் நிகர் = தாமரை மலருக்கு நிகரான

சீறடியள் ஆகி = சிறிய அடி. சிறப்பான அடி. மெல்ல மெல்ல அடி எடுத்து வந்ததால் சிற்றடி

அம் சொல் இள மஞ்ஞை என = இனிமையாக அகவும் மயில் போல

அன்னம் என = மென்மையான அன்னம் போல

மின்னும் வஞ்சி என = மின்னும் வஞ்சிக் கொடி போல

நஞ்சம் என = விஷம் போல

வஞ்ச மகள் வந்தாள் = வஞ்சனையாக அந்தப் பெண் வந்தாள்

பஞ்சு போன்ற மென்மை. இளந்தளிரின் வெதுவெதுப்பான அந்த ஈரம். மயில் போல சாயல். தாமரை மலர் போல சிவப்பு. அன்னம் போன்ற தூய்மை. இத்தனையும் இருக்கிறது. ஆனால், நிஜம் இல்லை. வஞ்ச மகள் வந்தாள். 

பாடலை கொஞ்சம் வாய் விட்டு வாசித்துப் பாருங்கள். 

ஒவ்வொரு வரி முடிவிலும் ஒரு சின்ன jerk இருக்கும். 

...பல்லவம் அனுங்க 
...சீரடியள் ஆகி 
...அன்னம் என மின்னும் 
...வஞ்ச மகள் வந்தாள் 

சூர்ப்பனகை தளுக்கி மிளுக்கி நடந்து வருகிறாள். பாட்டின் சந்தம் அப்படி அசைகிறது. 

கம்பனின் பாட்டும், சந்த நயமும் ஒரு புறம் இருக்கட்டும். 

சூர்ப்பனகை உரு மாறி வருகிறாள். 

இராவணன் கபட சாமியார் போல் உரு மாறி சீதையை தூக்கிச் செல்கிறான் 

மாரீசன் பொன் மான் போல் உருமாறி இராம இலக்குவர்களை ஏமாற்றி சீதையை அபகரிக்க உதவுகிறான். 

இராவணன், மாயா ஜனகன் உருவம் எடுத்து வருகிறான் 

கந்த புராணத்தில்,சூர பத்மன் இரும்பாலான மாமர உருவில் வருகிறான். 

அரக்கர்கள் தான் உரு மாறுகிறார்கள். 

இராமன் உரு மாறியதாகவோ,  இலக்குவன் உரு மாறியதாகவோ எங்கும் வரவில்லை. 

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று காட்டுபவர்கள் அரக்கர்கள். 

உள்ளும் புறமும் ஒன்றாக இருப்பவர்கள் அரக்கர்கள் அல்லாதவர்கள். 

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்   வள்ளலார் 


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான
பேய் பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே

என்பது திருவருட்பா.

நாம் எவ்வளவு பெரிய அரக்கர்களாக இருக்கிறோம் என்று யோசித்துப் பார்ப்போம்.

நம்மைச் சுற்றி எத்தனை அரக்கர்கள் என்று சிந்தித்துப் பார்ப்போம். 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் 
ஐந்தும் அகத்தே நகும்

வஞ்ச மனம் கொண்டது பிறருக்குத் தெரியாவிட்டாலும், தன் மனம் அறியும் அல்லவா. அது, அப்படி வஞ்ச மனம் கொண்டவனைப் பார்த்து உள்ளுக்குள் சிறிக்குமாம். 

வள்ளுவர் சொல்கிறார். 

உள்ளும் புறமும் ஒன்றாக வைக்க முயற்சி செய்வோம். 

மனம் வாக்கு செயல் மூன்றும் ஒன்ற வேண்டும். 

அப்படி பிரிந்து இருந்தவர்கள் அரக்கர்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_9.html

2 comments:

  1. பாடலின் சந்ததிற்கு ஏற்ப அவள் நடையின் அழகை நம்மால் ஊகிக்க முடிகிறது.அவள் வஞ்சம் தெரியுமாதலால் சிரிப்பும் வருகிறது.
    ஆனால் கூடவே ஒரு பயங்கர கேள்வியை எழுப்பிவிட்டீர்கள். நம்மை சுற்றி உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்களை எண்ணி பார்க்க
    சொன்னீர்கள். .

    ReplyDelete
  2. பாடலில் சுவை படித்தாலே நாவில் இனிக்கிறது. நன்றி.

    ReplyDelete