கம்ப இராமாயணம் - கற்பின் கனலி
இராமயணத்தில் சில சொற் தொடர்கள் மிக அருமையாக அமைந்து மீண்டும் மீண்டும் நினைத்து இன்புறத் தக்கதாக இருக்கும். "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" போன்ற சொற் தொடர்கள்.
தன்னை மணந்து கொள்ளும்படி இராமனை எத்தனையோ வழிகளில் வாதம் செய்து அவனை ஒத்துக் கொள்ளும்படி செய்ய முயற்சி செய்தாள் சூர்ப்பனகை. இராமன் மசியவில்லை. சூர்பனகையைப் பார்த்து ஏளனம் செய்கிறான். முதலில் "உன் அண்ணன் வந்து தந்தால் ஏற்றுக் கொள்வேன்" என்று சொல்லிவிட்டு பின் அவளைப் பார்த்து ஏளனம் செய்கிறான்.
அந்த சமயத்தில் சீதை பரணசாலையில் இருந்து வெளியே வருகிறாள்.
என்ன வெளியே சத்தம், யாரிடம் இராமன் பேசிக் கொண்டிருக்கிறான் என்று பார்க்க வந்திருக்கலாம்.
சீதையின் அழகைக் கண்ட சூற்பனைகை வியக்கிறாள்.
சூர்ப்பனகையின் கூற்றுக்கு முன், கம்பன் முந்திக் கொண்டு அவன் பங்குக்கு சீதையின் வருகையை அறிவிக்கிறான்.
"காமத் தீ உடலில் உள்ள தசை எல்லாம் சுட, பெரிய வாயை உடைய, உணர்வு இல்லாத சூர்ப்பனகை கண்டாள். எதைக் கண்டாள் ? வானத்தில் உள்ள சுடர் வெள்ளம் போல் வந்ததைக் கண்டாள். அரக்கர் குலத்தை அழிக்க வந்த கற்பின் கனலியை கண்டாள் "
என்கிறான் கம்பன்.
பாடல்
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு
இலி, உருவில் நாறும்
வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து
இடை வயங்க, நோக்கி,
மீன் சுடர் விண்ணும் மண்ணும்
விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியைக்
கண்ணின் கண்டாள்.
பொருள்
ஊன் சுட = சதைகள் சுட. காமத்தால் உடல் சுடுகிறது.
உணங்கு = திறந்த
பேழ் = பெரிய
வாய் = வாயை உடைய
உணர்வு இலி = உணர்வு இல்லாதவள்
உருவில் = உருவத்தில்
நாறும் = மணம் வீசும். அந்தக் காலத்தில் நாறும் என்றால் மணம் வீசும் என்று பொருள். நாளடைவில் அது மாறிவிட்டது.
வான் = வானத்தில் உள்ள
சுடர்ச் = சுடர் விடும்
சோதி = சோதி
வெள்ளம் வந்து = வெள்ளம் போல் வந்து
இடை வயங்க = ஒளி வீசும்
நோக்கி = நோக்கி
மீன் = விண்மீன்கள்
சுடர் = சந்திரன்
விண்ணும் மண்ணும் = வானும் மண்ணும்
விரிந்த = விரிந்த
போர் அரக்கர் = போர் செய்யும் அரக்கர்கள்
என்னும் = என்ற
கான் = கானகம்
சுட முளைத்த = எரிக்க பிறந்த
கற்பின் கனலியைக் = கற்பின் கனலியை
கண்ணின் கண்டாள். = கண்ணின் கண்டாள்
அரக்கர் குலத்தை எரிக்க பிறந்த கற்பின் கனலி என்கிறான் கம்பன்.
சூர்பனகையை குறிப்பிடும்போது "உணர்விலி " என்கிறான்.
இந்த வார்த்தையை பற்றி நிறைய நேரம் சிந்தித்தேன்.
உணர்வு இல்லாமல் எப்படி இருக்க முடியும்? இராமன் மேல் அவ்வளவு காதல் என்ற உணர்வு இருந்ததே? காம உணர்வு உடல் எல்லாம் சுட்டது என்றானே கம்பன். பின் எப்படி உணர்விலி ?
உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இருப்பதைத்தான் கம்பன் உணர்விலி என்கிறான்.
இராமனை மணக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு முறை இருக்கிறது அல்லவா? பார்த்த முதல் நாளே, "என்னை திருமணம் செய்து கொள்கிறாயா" என்று ஆரம்பிக்கிறாள்.
ஒரு வரைமுறை இல்லாமல் அவள் உணர்ச்சிகள் தறி கெட்டு ஓடுகின்றன.
எனவே, அவளை உணர்விலி என்கிறான் கம்பன்.
சிந்திப்போம். நம் உணர்வுகளை நாம் சரியாக வெளிப்படுத்துகிறோமா?
மென்மையாக, இனிமையாக, பிறர் மனம் புண்படாமல், நேரம் காலம் அறிந்து வெளிப்படுத்துகிறோமா ?
அல்லது, சூர்ப்பனகை மாதிரி மனதில் தோன்றிய உணர்ச்சிகளை வந்த நேரத்தில் அப்படியே போட்டு உடைக்கிறோமா?
சிந்திப்போம்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_18.html

No comments:
Post a Comment