திருக்குறள் - அறிவு
சில தினங்களுக்கு முன்னால், அறிவுடைய எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடையரேனும் இலர் என்ற குறளின் அர்த்தம் பற்றி சிந்தித்தோம்.
அறிவு என்பது என்ன ? அறிவு எப்படி வருகிறது? அறிவைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எழுவது இயல்பு.
அறிவு யாருக்குத்தான் வேண்டாம் ? அறிவில்லாமல் முட்டாளாக இருக்க யாருக்கு விருப்பம் இருக்கும் ?
எனவே அறிவு என்றால் என்ன, அதை எப்படி அடைவது என்பது பற்றி சிந்திப்போம்.
முதலில், கற்பதனால் அறிவு வளரும் என்று பார்த்தோம்.
தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு
என்று பார்த்தோம்.
தோண்ட தோண்ட நீர் வருவது போல, படிக்க படிக்க அறிவு வளரும்.
சரி,எதைப் படிப்பது ? படித்தால் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே ? ஆளுக்கு ஒரு வழி சொல்கிறார்கள்.
ஆன்மீகம் ஒன்று சொல்கிறது. அறிவியல் இன்னொன்று சொல்கிறது.
எதை எடுத்துக் கொள்வது.
ஆன்மீகத்திலும் எத்தனையோ பிரிவுகள், ஒவ்வொரு பிரிவும் ஒன்றைச் சொல்கிறது.
என் கடவுள் தான் பெரியவர், என் வழிதான் ஒரே வழி, நான் கண்டதே உண்மை, மற்றதெல்லாம் பொய், என் கடவுள் தான் முக்தி தருவார், என்று ஆளாளுக்கு கொடி பிடிக்கிறார்கள்.
அறிவியலோ , நேற்று ஒன்று சொன்னது. இன்று அதை மாற்றிச் சொல்கிறது. நாளை என்ன சொல்லுமோ, தெரியாது.
நாம் நடுவில் குழம்பிப் போய் நிற்கிறோம்.
சரி, யாரிடமாவது போய் கேட்கலாம் என்றால், யார் உண்மையானவர் என்று தெரியவில்லை. அப்படியே ஒருவர் நல்லவராக இருந்தாலும், அவருக்கு எல்லாம் தெரியுமா என்பதும் சந்தேகமே.
என்னதான் செய்வது ?
வள்ளுவர் சொல்லிவைத்து விட்டுப் போய் இருக்கிறார்.
"யார் என்ன சொன்னலாலும் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு இருக்காம சொன்னதில் உள்ள உண்மை என்ன என்று தெரிந்து கொள்வது அறிவு" என்கிறார்.
பாடல்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பொருள்
எப்பொருள் = எந்தப் பொருளை
யார்யார்வாய்க் = யாரிடம் இருந்து
கேட்பினும் = கேட்டாலும்
அப்பொருள் = அந்தப் பொருளின்
மெய்ப்பொருள் = உண்மையான பொருளை
காண்பது = காண்பது
அறிவு. = அறிவு
என்ன இது சரியான கதையா இருக்கே. எங்களுக்கு அறிவு எப்படி வரும் என்று கேட்டால், எல்லாவற்றிற்கும் உண்மை எது என்று எங்களையே கண்டு பிடிக்கச் சொன்னால் எப்படி. அது தெரிந்தால் நாங்க ஏன் இப்படி இருக்கோம் ?
ஒரு ஒரு படியாக வருவோம்.
அது என்ன "யார் யார் வாய்"
மனிதர்ளுக்கு முக்குணங்கள் மாறி மாறி வருவது இயல்பு.
சாத்வீகம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்கள் நமக்குள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.
அப்படி மாறி மாறி வரும்போது நண்பர்களும், உறவினர்களும் தவறான ஒன்றை நமக்குச் சொல்லி விடலாம், நம் பகைவர்கள் நமக்கு நல்லதைச் சொல்லிவிடலாம், உயர்ந்தவர்கள் வாயில் தாழ்ந்த கருத்துகளும், தாழ்ந்தவர் வாயில் இருந்து உயர்ந்த கருத்துகளும் வரலாம்.
யாரிடம் இருந்து எப்போது எது வரும் என்று தெரியாது.
எதையும், அது எப்போதும் சரியாக இருக்கும் என்றும் நினைக்கவும் கூடாது. அது போல, சிலர் சொல்லுவது எப்போதும் தவறாகவே இருக்கும் என்றும் நினைக்கக் கூடாது.
அது ஆளாக இருந்தாலும் சரி, புத்தகமாக இருந்தாலும் சரி, எதுவானாலும் சொன்னது யார் என்று பார்க்கக் கூடாது. என்ன சொன்னார்கள் என்று பார்க வேண்டும்.
வேதம், கீதை, பைபிள், குரான், தேவாரம், திருவாகம், பிரபந்தம், அறிவியல், கணிதம், என்று யார் எதில் என்ன சொன்னாலும், அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது.
சிந்திக்க வேண்டும். என்ன சொல்கிறார்கள், அதன் அர்த்தம் என்ன, அது சரிதானா என்று உரசிப் பார்க்க வேண்டும்.
கடவுளே நேரில் வந்து சொன்னாலும், அவர் சொன்னதின் மெய் பொருள் என்ன என்று அரிய வேண்டும்.
"அப்பொருள் மெய் பொருள்" என்றால் என்ன ?
நாம் படிப்பது, கேட்பது எல்லாமே நமக்குத் தெரிந்தவற்றின் மூலமாகத் தான்.
புதிதாக ஒரு கருத்தை படித்தாலோ, கேட்டாலோ நமக்கு அது பற்றி ஏற்கனவே ஒரு அப்பிராயம் இருக்கும். நம் மனதில் உள்ளதோடு புதிய கருத்தை நாம் ஒப்பிட்டுப் பார்போம். நமக்கு வசதியாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம். இல்லை என்றால் தூக்கி எறிந்து விடுவோம்.
நமக்குத் தெரிந்தவற்றை முதலில் தூக்கி ஒரு ஓரத்தில் வைத்து விட வேண்டும்.
சொல்லப்படுவது என்ன என்று கேட்க வேண்டும். அதை ஆராய வேண்டும்
அது உண்மை என்றால், அது நமக்கு ஏற்கனவே இருக்கும் எண்ணங்களுக்கு எதிரானது என்றால், நமது எண்ணங்களை மாற்றிக் கொள்ளவேண்டுமே அல்லாது, புதிய கருத்துகளை விட்டு விடக் கூடாது.
அது தான் அறிவு வளரும் வழி.
நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று சாகும் வரை சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது.
யார் எதைச் சொன்னாலும், ஆராய வேண்டும், சிந்திக்க வேண்டும், கேள்வி கேட்க வேண்டும்...
அது அறிவு வளர்வதின் முதல் படி.....
அடுத்த படி என்ன தெரியுமா ?
என்ன என்று அறிய ஆவலாக இருக்கிறோம்.
ReplyDelete