Pages

Wednesday, May 29, 2019

கம்ப இராமாயணம் - என்னை நீ இகழ்வது என்னே

கம்ப இராமாயணம் - என்னை நீ இகழ்வது என்னே



தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பனகை, இராமனை வேண்டுகிறாள். அவளோடு சிறிது நேரம் பேச்சுக் கொடுத்துவிட்டு, முடிவில் மணக்க முடியாது என்று இராமன் கூறி விடுகிறான். அப்போது அங்கே சீதை வருகிறாள். சீதையின் அழகை உள்ளுக்குள் வியந்தாலும், வெளிக்கு அவள் மேல் கோபம் கொள்ளுகிறாள்.

அது மட்டும் அல்ல, தன்னைத்தானே சூர்ப்பனகை புகழ்ந்து கொள்கிறாள்.

"மூவரும் தேவரும் என்னை அடைய தவம் கிடக்கிறார்கள். நீ என்னடா என்றால் என்னை இகழ்வது மட்டும் அல்ல, இந்த பொறுமை இல்லாத கள்வியான சீதையை விரும்புகிறாய்"

என்று இராமனிடம் கூறுகிறாள்.


பாடல்

பொற்புடை அரக்கி, 'பூவில்,
     புனலினில், பொருப்பில், வாழும்
அற்புடை உள்ளத்தாரும், அனங்கனும்,
     அமரர் மற்றும்,
எற் பெறத் தவம் செய்கின்றார்; என்னை
     நீ இகழ்வது என்னே,
நல் பொறை நெஞ்சில் இல்லாக்
     கள்வியை நச்சி?' என்றாள்.


பொருள்

பொற்புடை அரக்கி = அழகிய வடிவம் கொண்ட அரக்கி (சூர்ப்பனகை)

'பூவில் = தாமரை மலரில் (வாழும் பிரம்மாவும்)

புனலினில் = நீரில், அதாவது பாற்கடலில் வாழும் திருமாலும்

பொருப்பில் = மலையில், அதாவது கைலை மலையில் வாழும் சிவனும்

 வாழும் = வாழும் மும்மூர்த்திகளும்

அற்புடை = அன்பு உடைய

உள்ளத்தாரும் = உள்ளம் உடையவர்களும்

அனங்கனும்,  = மன்மதனும்

அமரர் மற்றும் = மற்றும் உள்ள தேவர்கள் யாவரும்

எற் பெறத் = என்னைப் பெற

தவம் செய்கின்றார்; = தவம் செய்கிறார்கள்

என்னை  நீ இகழ்வது என்னே = என்னை நீ ஏன் பழிக்கிறாய்

நல் = நல்ல

பொறை  = பொறுமை

நெஞ்சில் இல்லாக்  = மனதில் இல்லாத

கள்வியை  = கள்ளத்தனம் கொண்ட இந்த சீதையை

நச்சி?' = விரும்பி

என்றாள். = என்றாள்

இங்கே முக்கியமாக இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

முதலாவது, சீதை மிக மோசமானவள் என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்லுவது?  சீதை பொறுமை இல்லாதவள் என்கிறாள் சூர்ப்பனகை. ஆகப் பெரிய  தீய குணம் பொறுமை இல்லாமை என்பது கம்பனின் வாக்கு.

பொறுமை பற்றி திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னை கடப்பாரை, மண்வெட்டி முதலியவற்றால் தோண்டுபவர்களையும் பொறுமையுடன் தாங்கும்  நில மகளை போல தம்மை இகழ்பவர்களை பொறுத்துக் கொள்வது ஆகச் சிறந்தது என்கிறார்.

சாப்பிடாமல் விரதம் இருந்து செய்யும் தவத்தை விட, பிறர் சொன்ன கடும் சொற்களை பொறுத்துக் கொள்வது  பெரியது என்கிறார்.

யோசித்துப் பாருங்கள், நம்மை ஒருவர் ஏதாவது தவறாக சொல்லி விட்டால், நமக்கு எவ்வளவு கோபம் வருகிறது. தவறு என்ன தவறு, உண்மையையே சொன்னாலும்,  அது நமக்கு பிடிக்கவில்லை என்றால், கோபம் வருகிறது அல்லவா?

அது மனைவியாக இருக்கட்டும், கணவனாக இருக்கட்டும், பிள்ளைகளாக இருக்கட்டும், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம், வேலை பார்க்கும் இடத்தில் யாரவது  நமக்கு பிடிக்காத ஒன்றைச் சொன்னால் பொறுமையாக கேட்க முடியுமா நம்மால்?

கேட்க வேண்டும். உண்மையோ பொய்யோ. சரியோ தவறோ. பொறுமையை கை விடாமல்  கேட்க வேண்டும். அவர்கள் சொன்னது தவறாகவே இருந்தாலும், அவர்களை பொறுக்கும் (சகிக்கும்) குணம் வேண்டும். அது ஒரு மிகச் சிறந்த  குணம் என்கிறார் வள்ளுவர்.

அதையே கம்பனும் தன் காவியத்தில் கொண்டு வந்து சேர்கிறான்.

சூர்ப்பனகை வாயில் இருந்து பெரிய அறத்தை சொல்கிறான் கம்பன்.

அடுத்தது, தற்புகழ்ச்சி.

தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறாள் சூர்ப்பனகை.

மூவரும் தேவரும், மன்மதனும் என்னை வேண்டி தவம் கிடக்கிறார்கள் என்கிறாள்.

அளவுக்கு மீறி தன்னை நினைத்துக் கொள்வதும் ஒரு அரக்க குணமே.

பணிவு வேண்டும்.

அடக்கம் வேண்டும்.

அடக்கம் அமரருள் உய்க்கும் என்பார் வள்ளுவப் பெருந்தகை.

அடக்கம் என்பது ஒரு சொத்து மாதிரி என்கிறார். நிலம், வீடு, பணம், நகை, வண்டி, வாகனம் போல அடக்கமும் ஒரு சொத்து என்கிறார்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வற்கே செல்வம் தகைத்து

என்பார் வள்ளுவப் பேராசான்.

சிந்தித்துப் பாருங்கள்.

உங்களிடம் எவ்வளவு பொறுமை இருக்கிறது. எப்போது பொறுமை தவறுகிறது. ஏன் தவறுகிறது. எப்படி பொறுமையாக இருப்பது என்றும்...

உங்களை நீங்கள் பெரிய ஆளாக நினைத்துக் கொண்டிருந்தால் , அது பற்றியும் சிந்தியுங்கள்.

இராமாயணம் படிப்பது கதை படிப்பது போல அல்ல.

அதில் பொதிந்து கிடக்கும் நல்ல விஷயங்களை நம் வாழ்வில் கடை பிடிக்க வேண்டும்.

வாழ்வு சிறக்க அதுவும் ஒரு வழி.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_29.html



1 comment:

  1. சூர்ப்பனகையை விரட்டிய பின்னும், அவள் இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறாளா?!

    ReplyDelete