Pages

Sunday, May 5, 2019

கம்ப இராமாயணம் - எழுதரு மேனியாய்

கம்ப இராமாயணம் - எழுதரு மேனியாய் 


தன் காதலை சொன்ன பின்னும் அமைதியாக நிற்கும் இராமனை கண்டு சூர்பனகைக்கு குழப்பம் வருகிறது. அவன் என்னை விரும்புகிறானா இல்லை விரும்பவில்லையா என்று சந்தேகம் கொள்கிறாள்.

சரி, இன்னும் கொஞ்சம் பேச்சு கொடுப்போம் என்று பேசுகிறாள்.

"ஓவியத்தில் எழுத முடியாத அளவுக்கு அழகானவனே...நீ இங்கு எதற்கு வந்தாய் என்று நான் அறியவில்லை. இங்கே வாழும் முற்றும் துறந்த முனிவர்களிடம் அவர்கள் சொல்லும் செயலை செய்து நான் வாழ்கிறேன். என் பெண்மைக்கு ஒரு பங்கமும் வரவில்லை. என் இளமை அப்படியே இருக்கிறது, ஒரு பயனும் இன்றி. என் வாழ் நாட்கள் அப்படியே வீணாக கழிந்து கொண்டு இருக்கின்றன"

என்றாள்.

பாடல்


‘எழுதரு மேனியாய்! ஈண்டு
    எய்தியது அறிந்திலாதேன்,
முழுது உணர்முனிவர் ஏவல்
    செய் தொழில் முறையின் முற்றிப்
பழுது அறு பெண்மையோடும்
    இளமையும் பயனின்று ஏகப்
பொழுதொடு நாளும் வாளா
    கழிந்தன போலும் ‘என்றாள்.

பொருள்

‘எழுதரு =  ஓவியத்தில் எழுதுவதற்கு அருமையான. கடினமான

 மேனியாய்! = மேனியை உடையவனே

ஈண்டு = இங்கு

எய்தியது = (நீ) வந்தது

அறிந்திலாதேன், = (ஏன் என்று) அறிய மாட்டேன் . எனக்குத் தெரியாது.

முழுது உணர்முனிவர் = முழுவதும் உணர்ந்த முனிவர்கள்

ஏவல் செய் தொழில் = அவர்கள் ஏவிய வேலையை

முறையின் முற்றிப் = முறைப்படி முழுவதும் செய்வேன்

பழுது அறு பெண்மையோடும் = குற்றம் இல்லாத பெண்மையோடும்

இளமையும் = என் இளமையும்

பயனின்று ஏகப் = பயனின்று போக

பொழுதொடு = சிறு பொழுதோடு

நாளும் = ஒவ்வொரு நாளும்

வாளா = வீணாக

கழிந்தன போலும் ‘என்றாள். = கழிந்து விட்டது போல என்றாள்


அது என்ன பொழுதொடு நாளும் ?

கொஞ்சம் இலக்கணம் படிப்போமா ?

தமிழர்கள் காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள்.

பெரும் பொழுது என்றும் சிறு பொழுது என்றும்.

பெரும் பொழுது என்றால் ஆண்டின் பகுதிகள்.

கார்காலம் - ஆவணி, புரட்டாசி
குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனிக் காலம் - மார்கழி, தை
பின் பனிக் காலம் - மாசி பங்குனி
இள வேனில் - சித்திரை, வைகாசி
முது வேனில் - ஆனி , ஆடி

இவற்றை பெரும் பொழுது என்று குறித்தார்கள்.

ஒரு நாளின் சிறு பகுதிகளை சிறு பொழுது என்று வரையறுத்தார்கள்


வைகறை = இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
காலை = 6 am முதல்  10 am  வரை
நண்பகல் = 10 am   முதல் 2 pm வரை
எற்பாடு = 2 pm  முதல் 6 pm வரை
மாலை = 6 pm முதல் 10 pm வரை
யாமம் = 10 pm முதல் அதி காலை 2 am வரை

இவற்றிற்கு சிறு பொழுதுகள் என்று பெயர்.

நம்முடைய மனமும் புத்தியும் சத்வம், ராஜஸம், தாமசம் என்று முக்குணங்களில் மாறி மாறி இயங்கும் தன்மை படைத்தவை. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு குணத்தில் இருக்கும்.

வைகறை என்று சொல்லப் படும் இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரையில் உள்ள நேரம் சத்வ குணம் ஓங்கி நிற்கும் காலம் என்று சொல்கிறார்கள்.

எனவே தான், பூஜை, படிப்பது என்ற நல்ல காரியங்களை அந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று விதித்தார்கள்.

திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி எல்லாம் இந்த நேரத்தில் தான்  பாடப்படும்.

நான்கு மணிக்கு எழுந்து படித்துப் பாருங்கள். மனதில் அப்படியே உட்காரும்.

காலத்துக்கும் மனித மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதை உன்னித்து கவனித்து, எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் வரையறுத்து தந்திருக்கிறார்கள்.  நேரம் இருப்பின், அது பற்றி பின் ஒரு நாள் விரிவாக சிந்திப்போம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

சூர்ப்பனகை சொல்கிறாள்

பொழுதும் நாளும் கழிந்தது என்று.

காலை போய் இரவாய் , கார் காலம் போய் வேனில் காலமாய் நாட்கள் உருண்டோடி விட்டன ..என் இளமை பாழாய் போகிறது என்று உருகுகிறாள்.

ஒரு பெண் காமத்தில் தவிக்கிறாள். வாய் விட்டுச் சொல்கிறாள்.

இராமன் என்ன செய்திருக்க வேண்டும்?

சிந்தித்துக் கொண்டிருங்கள்.....

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_5.html




1 comment:

  1. வைரமுத்துவின் அருமையான "அழகு மலர் ஆட" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. வீணாகும் பெண்மையை வடிந்து கொடுக்கும் பாடல்.

    ReplyDelete