Pages

Sunday, June 23, 2019

சிலப்பதிகாரம் - படை வழங்குவது ஓர் பண்பு உண்டு

சிலப்பதிகாரம்  - படை வழங்குவது ஓர் பண்பு உண்டு 


கோவலனுக்கும் கண்ணகிக்கும் முதல் இரவு. அந்த அறையின் தோற்றத்தை விளக்கினார் அடிகளார்.

அடுத்தது, அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று சொல்கிரார்.

அவர்கள் எங்கே பேசினார்கள். கோவலன் தான் பேசுகிறான். கண்ணகியின் அழகில் மயங்கி, அவள் அழகைப்  புகழ்கிறான்.

கோவலன் , கண்ணகியிடம் சொல்கிறான் (கொஞ்சுகிறான்)

"இந்த சிவ பெருமான், பிறை நிலவை தலையில் சூடிக் கொண்டிருக்கிறார். அது அவருக்கு அழகாகத்தான் இருக்கிறது. எல்லோரும் அவரை வணங்கும்போது, அந்த பிறை நிலவையும் வணங்குகிறார்கள். ஆனால், அந்த பிறை நிலா அவருக்கு உரியது அல்ல. உன் நெற்றியில் இருந்து வந்தது அது. எனவே, அதை உனக்கு (கண்ணகிக்கு) அவர் தருவதுதான் ஞாயம்.

அரசர்கள் போருக்குச் செல்லும் முன், வீரர்களுக்கு ஆயுதங்களை வழங்குவார்கள். போரில் போராடி வெற்றி பெற வேண்டி. இந்த காமப் போரில் நீ வெல்ல அந்த மன்மதன், தன் கையில் இருந்த கரும்பு வில்லை உன் புருவமாக வளைத்து அனுப்பி வைத்திருக்கிறான் போலும் "


பாடல்


குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின், 
பெரியோன் தருக - திரு நுதல் ஆக என:
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்

பொருள்

குழவித் = குழவி என்றால் குழந்தை. இங்கே இளைய, அல்லது சிறிய. பிறை.

திங்கள் = நிலா

இமையவர் = தேவர்கள்

ஏத்த = போற்ற

அழகொடு = அழகாக

முடித்த = முடியில்

அருமைத்து ஆயினும் = அருமையாக இருந்தாலும்

உரிதின் = அதன் உரிமை

நின்னோடு = உன்னுடையது

உடன் பிறப்பு = (காரணம்) அது உன் உடன் பிறப்பு

உண்மையின் = உண்மையாக,

பெரியோன்  = சிவா பெருமான்

தருக = உனக்குத் தர வேண்டும்

திரு நுதல் ஆக என: = உன்னுடைய சிறந்த நெற்றியாக (நுதல் = நெற்றி)

அடையார் முனை = பகைவர்களை சந்திக்கும் இடம்

அகத்து = அந்த இடத்துக்கு

அமர் = போர்

மேம்படுநர்க்குப் = செய்யச் செல்வோருக்கு

படை = ஆயுதங்கள்

வழங்குவது = கொடுத்து  அனுப்புவது

ஓர் பண்பு உண்டு = ஒரு வழக்கம்

ஆகலின், = ஆகவே, அது போல

உருவிலாளன் = மன்மதன். மன்மதனுக்கு உருவம் கிடையாது. யார் கண்ணுக்கும் தெரிய மாட்டான், அவன் மனைவி இரதி தேவியைத் தவிர.

ஒரு = சிறந்த

பெரும் கருப்பு வில் = பெரிய கரும்பு வில்லை


பெண்களுக்கு நெற்றி சிறிதாக இருக்க வேண்டும் என்பது சாமுத்திரிகா இலட்சணங்களில் ஒன்று.

ஏன் ?

பெண்களுக்கு கருணை அதிகம். (அந்தக் கால பெண்களுக்கு). கருணை, கண் வழியேதான்  வெளிப்படும்.  அதற்கு கண்ணோட்டம் என்று பெயர்.

கண்ணோட்டம் என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்.

கருணை அதிகமானால், கண்கள் விரியும். கண்கள் விரிந்தால், நெற்றி சுருங்கும்.

அம்பாளுக்கு விசாலாட்சி என்று ஒரு பெயர் உண்டு.  விரிந்த, பெரிய கண்களை உடையவள் என்று அர்த்தம்.

கண்ணகியின் நெற்றி, பிறைச் சந்திரனைப் போல சிறியதாக இருந்ததாம்.

சீதையை,  குகனிடம் அறிமுகப் படுத்தும் போது இராமன் சொல்லுவான், "இந்த சிறந்த போன்ற  நெற்றியை உடைய சீதை உன் உறவினள்" என்று.

"நல் நுதலவள் நின் கேள்"


அன்னவன் உரை கேளா,
    அமலனும் உரை நேர்வான்,
என் உயிர் அனையாய் நீ;
    இளவல் உன் இளையான்; இந்
நல் நுதலவள் நின் கேள்;
    நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன்

    தொழில் உரிமையின் உள்ளேன் 


வர்ணனை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முதலிரவில், மனைவியை ,கணவன் புகழ்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. 

நாம், மற்றவைகளை எவ்வளவு புகழ்கிறோம் ? அவர்கள் நல்ல குணத்தை, அவர்கள் செய்த உதவியை, எவ்வளவு புகழ்கிறோம். 

மனைவியின் சமையலை, அவள் வேலை மெனக்கட்டு வீட்டை சுத்தமாக  வைக்க படும் பாட்டை, கணவனின் வெளி உலக சங்கடங்களை சமாளிக்கும் திறமையை, நண்பர்களின் உதவியை, கீழே வேலை செய்பவர்களின் பங்களிப்பை...இப்படி ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது, புகழ்ந்து சொல்ல. 

நாம் புகழ்கிறோமா?

குறை சொல்ல மட்டும் முதலில் வந்து விடுகிறோம். 

சாப்பாட்டில், ஒரு உப்புக் கல் கூடி விட்டால், தைய தக்கா என்று குதிக்கிறோம்.  சரியாக இருந்தால், நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்வது கிடையாது. 

மற்றவர்களை, மனம் விட்டு புகழ வேண்டும். போலியாக அல்ல. உண்மையாக. 

அவர்கள் சந்தோஷப் படுவார்கள். நமக்கு மேலும் உதவி செய்ய நினைப்பார்கள். 

உதாரணமாக, இந்த பிளாக் நன்றாக இருக்கிறது என்றால், நன்றாக இருக்கிறது  என்று ஒரு வார்த்தை சொல்லலாம். அடடா, இத்தனை பேர் நன்றாக இருக்கிறது என்று  சொல்கிறார்களே என்று மேலும் எழுத உற்சாகம் வரும்...:)

"யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. " என்பார் திருமூலர். 


யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. 

முயன்று பாருங்கள். 


4 comments:

  1. ஒரு காட்சிக்கு அப்புறம் ஒரு காட்சி வருவது போல, ஒரு சினிமா பார்ப்பது போல இருக்கிறது!

    ReplyDelete
  2. பாடல்களின் அழகையும் அர்த்தத்தையும் நன்றாக விளக்கிவிட்டு, வாசகர்களுக்கு மறைந்து உள்ள நல்ல கருத்துகளை நாம் அன்றாட வாழ்க்கையில் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை நாசூக்காக எடுத்து சொல்லும் வாகு அருமை.

    ReplyDelete
  3. //உதாரணமாக, இந்த பிளாக் நன்றாக இருக்கிறது என்றால், நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லலாம். அடடா, இத்தனை பேர் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்களே என்று மேலும் எழுத உற்சாகம் வரும்...:)//

    வெகு இயல்பான எதிர்பார்ப்பு. நீங்கள் சுட்டியது போல், நம்மில் எத்தனை பேர், எத்தனை பேரை எதெதெற்கெல்லாம் புகழ்கிறோம்? சொன்ன மாதிரி நாலு வரிக்கு மேல இருந்தாலே, ரொம்ப நீளம், நேரம் இல்லைனுட்டு போய்விடும் காலமிது.

    என்ன இருந்தாலும் சரி, எழுதுவதைத் தொடருங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. உஙகள் தமிழ்ப் பணி என்றென்றும் தொடர வேண்டும். இறைவன் உங்களை நன்றாகப் படைத்தனன் தமிழ் செய்யுமாறே! டாக்டர்.வே.காசிவிஸ்வநாதன் எம்.எஸ்.

    ReplyDelete