Pages

Friday, June 14, 2019

சிலப்பதிகாரம் - இலக்கிய நோக்கம்

சிலப்பதிகாரம் -  இலக்கிய நோக்கம் 


ஒரு நூல் செய்வதானால் அதற்கு என்ன நோக்கம் இருக்க வேண்டும் என்று பவணந்தி முனிவர் நன்னூலில் கூறுகிறார்.

அவர் கூறுவது இருக்கட்டும். நம் இலக்கிய கர்த்தாக்களை கேட்டால் என்ன சொல்லுவார்கள் ?

"என் மனதில் தோன்றியதை பிறருடன் பகிர்ந்து கொள்ள"

"பேரும் புகழும் சம்பாதிக்க"

" பணம் சம்பாதிக்க"

"மொழியை வளர்க்க என்னால் ஆன சிறிய பங்களிப்பு"

"சிறுமை கண்டு பொங்க , அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க"

என்று காரணம் கூறுவார்கள்.

அவர்கள் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாம் எதற்கு புத்தகங்களை வாசிக்கிறோம் ?

பரீட்சையில் தேற, நல்ல மதிப்பெண்கள் வாங்க, நல்ல வேலை கிடைக்க, பொழுது போக, என்னதான் சொல்லி இருக்கு என்று அறிந்து கொள்ள என்று பல காரணங்கள் இருக்கலாம்.

இவை அனைத்துமே காரணங்கள் அல்ல என்கிறார் நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர்.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே"

ஒரு நூலை எழுதுவதற்கும், அதை படிப்பதற்கும் காரணம் அறம் , பொருள், இன்பம், வீடு இவற்றை அடையவே என்கிறார்.

நீங்கள் எதை வாசிக்கத் தொடங்கினாலும் இந்த நாலில் எது உங்களுக்கு கிடைக்கிறது  என்று அறிந்து கொண்டு வாசிக்க வேண்டும்.

மாத நாவல்கள் , டிவி சீரியல்கள், whatsapp துணுக்குகள் படிக்கும் போது "இன்பம்"  கிடைக்கிறதே...அதுவும் ஒரு பலன் என்றுதானே பவணந்தியார் கூறி இருக்கிறார்.  எனவே, அதில் தவறு என்ன என்று கேட்கலாம்.

அதையே இன்னும் கொஞ்சம் நீட்டிப்போம். கொள்ளை அடித்தால் பொருள் கிடைக்குமே,  அதுவும் ஒரு பலன் என்று தானே நன்னூல் சொல்கிறது? கொள்ளை அடிக்கலாமா ? ஒரு பெண்ணை கெடுப்பது ஒருவனுக்கு இன்பம் தரலாம்,  செய்யலாமா?

அதற்குத்தான் முதலில் அறத்தை வைத்தார்கள்.

அறம் என்றால் என்ன என்று அறிந்து கொண்டு அதன் படி பொருள் ஈட்ட வேண்டும்,  அதன் படி இன்பம் துய்க்க வேண்டும், அதன் படி வீடு பேற்றை அடைய வேண்டும்.

அறமே அனைத்துக்கும் அடிப்படை.

சிலப்பதிகாரம் மூன்று அறங்களை வலியுறுத்தி  சொல்கிறது.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"

"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"

"கற்புடைய பெண்ணை தெய்வமும் வணங்கும்"


இந்த மூன்று அறங்களை வைத்து பின்னப் பட்டதுதான் சிலப்பதிகாரம் என்ற  காப்பியம்.

சிலப்பதிகாரத்தில் வில்லன் என்று யாரும் இல்லை.  ஒரு இராவணன், ஒரு துரியோதனன் போன்ற  வில்லன்கள் யாரும் கிடையாது. கதாநாயனுக்கு  சண்டை போடும்  வாய்ப்பே இல்லை.

சண்டை போடும் அளவுக்கு அவன் வீரனும் அல்ல.

வீட்டை வெளியே அதிகம் வராத கதாநாயகி

"வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள்"

என்பார் இளங்கோ அடிகள்.

கதாநாயகன், கதாநாயகி, வில்லன் என்ற வழக்கமான பார்முலாவை உடைத்து எறிந்த  இலக்கியம் சிலப்பதிகாரம்.

நல்லது வெல்லும், தீமை அழியும் என்ற சித்தாந்தத்தையும் உடைத்து எறிகிறது  சிலப்பதிகாரம்.

கோவலன் ஒரு அப்பாவி. மனைவியின் சிலம்பை விற்க வந்தவனை போட்டு தள்ளி விட்டார்கள்.  அவனுக்கென்று யாரும் இல்லை.

ஒரு அனுமன், ஒரு கிருஷ்ணன் என்று யாரும் இல்லை.

அனாதையாக, முன் பின் தெரியாத ஊரில் வெட்டுப் பட்டு சாகிறான்.

இளங்கோவுக்கு இதெல்லாம் முக்கியம் இல்லை.

தான் சொல்ல வந்த அறத்தை வலியுறுத்துவது மட்டுமே அவருக்கு நோக்கமாக இருந்து இருக்கிறது.

அதை எப்படி செய்கிறார் என்று பார்க்க இருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_14.html

2 comments:

  1. சிறப்பு!

    "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"

    அதனால் தான் பேரறிஞர் அண்ணா 1967 ல் அமைச்சகப் பொறுப்பேற்கும் போது "தமிழக மக்கள் அவசரப்பட்டு எங்களுக்கு அதிகாரத்தை கொடுத்து விட்டார்கள்!" என்கிற பய உணர்ச்சியோடு முதலமைச்சர் பொறுப்பேற்கிறார்.

    ஆனால் இன்று "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் வெரும் கூத்தாகும்" என்பது தானே நாம் அன்றாடம் காணும் அறப்பிழைக் காட்சிகள்....?

    ReplyDelete
  2. சிலப்பதிகாரக் கதையைப் பற்றி இப்படி நான் எண்ணியதே இல்லை. அருமையான முன்னோட்டம். மேலும் படிக்க ஆவல்.

    மிக்க நன்றி.

    ReplyDelete