Pages

Sunday, June 16, 2019

சிலப்பதிகாரம் - பதி எழு அறியா பழங்குடி

சிலப்பதிகாரம் - பதி எழு அறியா பழங்குடி 


இயற்கையை போற்றிய பின், இளங்கோ கதை தொடங்கும் புகார் நகரின் சிறப்பைப் பற்றி கூற வருகிறார்.

ஒரு நாடு சிறந்த நாடு என்பதை எதை வைத்து வரையறுக்கலாம்?

வள்ளுவர், சிறந்த நாடு எது என்று 10 குறள் எழுதி இருக்கிறார்.  அதில் ஒன்று

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 
சேராது இயல்வது நாடு.

பெரிய பசியும், தீரா பிணியும், பகைமையும் இல்லாமல் இருப்பது நல்ல நாடு என்று கூறுகிறார்.


அயோத்தியின் சிறப்பைப் பற்றி கூற வந்த கம்பர் இவ்வாறு கூறுகிறார்.

வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
    மடை எலாம் பணிலம்; மாநீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக்
    குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப்
    பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரம்பு எலாம் செந்தேன்; சந்தக்
    கா எலாம் களி வண்டு ஈட்டம்.

இப்படி ஒரு நாட்டின் சிறப்பை பல விதங்களில் வர்ணிக்கலாம்.

எல்லோரையும் தூக்கிச் சாப்பிடும் படி இளங்கோ அடிகள் புகார் நகரை வர்ணிக்கிறார்.

அவர் வர்ணிப்பது ஒரு புறம் இருக்கட்டும்.

இதை வாசிக்கும் பலர், சொந்த நாட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொந்த  மாநிலத்தை விட்டு வேறு இடத்தில் வசிக்கலாம் .

ஏன், உங்கள் சொந்த இடத்தை விட்டு விட்டு வந்தீர்கள்?

நல்ல வேலை வாய்ப்பு, உயர்ந்த சம்பளம்,  வாழ்க்கைத் தரம், அமைதியான சூழ்நிலை, குறைந்த வருமான வரி,  குழந்தைகளின் மேல் படிப்பு, இனிய தட்பவெப்பம்,  என்று பல காரணம்  சொல்லலாம்.

இவை எல்லாம் இல்லாததால் தானே பிறந்து வளர்ந்து மண்ணை விட்டு வெளியேறினீர்கள். இவை அனைத்தும் சொந்த ஊரிலேயே இருந்திருந்தால் , நீங்கள் அங்கேயே  இருந்திருப்பீர்கள் அல்லவா? அப்படி இல்லாத ஊர் நல்ல ஊர் இல்லைதானே.

"என் ஊரைப் போல வருமா ?" என்று வெளி மாநிலத்தில், வெளி நாட்டில் போய் இருந்து  கொண்டு பேசுவது ஒரு ஏமாற்று வேலைதானே. நல்ல ஊர் என்றால் அதை ஏன் விட்டு விட்டு, அந்த அளவுக்கு நல்லா இல்லாத ஊருக்குப் போக வேண்டும்?

இளங்கோ அடிகள் சொல்கிறார்

"பதி எழு அறியா பழங்குடி" என்று.

அந்த ஊரில் (பூம்புகாரில்) உள்ள மக்கள் அந்த ஊரை விட்டு வெளியே போனதே கிடையாதாம்.   இப்ப மட்டும் அல்ல, காலம் காலமாக அங்கேயே இருக்கிறார்களாம்.

ஏன் என்றால்,  அந்த ஊரில் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. எதற்கு இன்னொரு ஊருக்குப் போக வேண்டும் ?

இப்போது சொல்லுங்கள், இதை விட ஒரு ஊரை சிறப்பாக வர்ணிக்க முடியுமா?


பாடல்

ஆங்கு, 
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும், 
பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்,
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின் 
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.
அதனால்,
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்,


பொருள்


ஆங்கு,  = அங்கே

பொதியில் ஆயினும் = பொதிய மலை ஆயினும்

இமயம் ஆயினும், = இமய மலை ஆயினும்

பதி  = இருக்கின்ற இடம்.  (பதி  என்றால் இடம். உயர்ந்த இடம், திருப்பதி)

எழு = எழுதல், எழுந்து வெளியே எங்கும் போவது

அறியாப் = அறியாத

பழங் குடி = பழைய குடி மக்கள்

கெழீஇய = நட்புடன்

பொது அறு = பொதுமை இல்லாத

சிறப்பின் = சிறப்பின். அந்த நாட்டுக்கு என்று சில சிறப்புகள் உண்டு.  பொதுவாக உள்ள சிறப்புகள் இல்லை, speical

புகாரே ஆயினும், = புகார் நகரே ஆயினும்

நடுக்கு இன்றி = நடுக்கம் இன்றி

நிலைஇய = நிலைத்து நிற்கும்

என்பது அல்லதை = என்பது தவிர வேறு எதையும்

ஒடுக்கம் கூறார் = அவற்றிற்கு முடிவு உண்டு என்று

உயர்ந்தோர் = உயர்ந்தவர்கள்

உண்மையின் = உண்மையின்

முடித்த கேள்வி = அனைத்து கேள்விகளுக்கும் விடையை

முழுது உணர்ந்தோரே. = முழுவதும் உணர்ந்தவர்கள்

அதனால், = அதனால்

நாக நீள் நகரொடு = நாகர் உலகுடனும்

நாக நாடு-அதனொடு = சுவர்க்கம் என்ற அதனுடனும்

போகம் = போகம்

நீள் புகழ் மன்னும் = நீண்ட புகழ் நிலைத்து நிற்கும்

புகார்-நகர் அது-தன்னில், = புகார் நகரத்தில்

எப்படி இருக்கு ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_16.html

3 comments:

  1. பதிவாசிரியர் சொல்வது உண்மை தான். எல்லாம் எம் ஊரில் இருக்கும் போது நாம் ஏன் திரைகடல் ஓட வேண்டும்? புலம்பெயர் குடிகளுக்குப் பின் உள்ள உளவியல் யதார்த்தம் என்னவென்றால் "சொர்க்கமே என்றாலும்... அது நம்மூரைப் போல வருமா?" என்கிற எண்ணமே நம்ம ஊரை விட்டுப் போன பிறகு தான் வருகிறது.
    எனவே "திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதும்" சரியே...!
    "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?" என்று ஏங்குவதும் சரியே...!
    என்ன ஒன்று. அந்த ஏக்கம் வந்ததும் நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணுக்கு வந்து இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய முற்படுங்கள்! அது தான் சரியான அறப்பாதை!

    ReplyDelete
  2. அந்த கால கட்டத்தை மனதில் கொண்டு புகாரின் பெருமையை அருமையாக சொல்லி இருக்கிறார்.அதை ரசிக்கலாம். ஆனால் நம்ம ஊர் என்ற அபிமானம் இருப்பதை தவிர தற்காலத்தில் திரும்ப வருவது சாத்திய கூறு அல்ல..
    ஒரு சின்ன உதவி..பாட்டில் வரும் வார்த்தைகளுக்கு தனி தனியாக அர்த்தம் கூறின பிறகு அதன்பொருளை ஓரிரு வரிகளில் சுருக்கமாக சொல்ல இயலுமா?

    ReplyDelete
  3. வெளியூருக்குப் பெயர்ந்தவர்கள், "நம்ம ஊரு இந்த ஊரு மாதிரி இல்லையே" என்னும் எண்ணத்தில் ஏங்குவது இயற்கைதானே?!

    கொஞ்சம் கடினமான பாடல்தான் (எனக்கு!)

    "வெளியூர் போகாமல் நட்போடு மக்கள் வாழ்வது", "நிலைத்து இருப்பது" என்ற இரண்டு சிறப்புகள் பாடலில் தெரிகின்றன. அவ்வளவுதானே? வேறு ஏதாவது புரியாமல் விட்டு விட்டேனா?

    ReplyDelete