Pages

Tuesday, June 18, 2019

சிலப்பதிகாரம் - மண் தேய்த்த புகழினான்

சிலப்பதிகாரம் - மண் தேய்த்த புகழினான் 


கதாநாயகியான கண்ணகியை அறிமுகம் செய்த பின், அடுத்ததாக கதாநாயகனான கோவலனை அறிமுகம் செய்கிறார் இளங்கோ அடிகள்.

எப்படி கண்ணகியின் குலப் பெருமை சொல்லி அவளை அறிமுகம் செய்தாரோ, அதே போல் கோவலனின் குலப் பெருமை சொல்லி அவனையும் அறிமுகம் செய்கிறார்.

"பெரிய நிலம் முழுவதையும் ஆளும் அரசனை தலைமகனாக கொண்டு தனித்து உயர்ந்த குடிகளோடு உயர்ந்த செல்வந்தன், தனக்கு வரும் வருமானத்தை பிறர்க்கு அளிக்கும் மாசாத்துவான் என்பவன், அவனுடைய மகன், 18 வயதுடையவன், கோவலன் என்று அவன் பெயர்.

அந்த கோவலன் பெரும் புகழ் படைத்தவன். மன்மதன் போல் அழகானவன் "

என்று கோவலனை நமக்கு அறிமுகம் செய்கிறார் அடிகளார்.

பாடல்

ஆங்கு, 
பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த 
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்;
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்;
இரு நிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அகவையான்;
அவனும்-தான்,  
மண் தேய்த்த புகழினான்;மதி முக மடவார் தம் 
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டி,
‘கண்டு ஏத்தும் செவ்வேள்’ என்று இசை போக்கி, காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான்; கோவலன் என்பான் மன்னோ. 


பொருள்

ஆங்கு = அங்கே, புகார் நகரில், கண்ணகி இருந்த புகார் நகரில்

பெரு நிலம் = பெரிய நிலம்

முழுது ஆளும் = முழுவதையும் ஆளும்

பெருமகன் = மூத்தவன், தலைவன், அரசன்

தலைவைத்த = அவனை தலை மகனாகக் கொண்டு

ஒரு தனிக் குடிகளோடு = அவனோடு நெருங்கி வாழும் மிகச் சில குடி மக்களோடு

உயர்ந்து ஓங்கு செல்வத்தான் = நிறைந்த செல்வம் கொண்டவன்

வரு நிதி = வரு நிதி வினைத்தொகை. வந்த நிதி, வருகின்ற நிதி, வரப் போகும் நிதி

பிறர்க்கு = மற்றவர்களுக்கு

ஆர்த்தும் = கொடுத்தும்

மாசாத்துவான் என்பான் = மாசாத்துவான் என்பவன்

இரு நிதிக் கிழவன் = இரண்டு நிதிகளுக்கு தலைவன்

மகன் = அவனுடைய மகன்

ஈர்-எட்டு ஆண்டு அகவையான் = இரண்டு எட்டு, அதாவது 16 வயது

அவனும்-தான்,   = அவனும் தான்

மண் தேய்த்த புகழினான் = அவனுடைய புகழின் முன்னால் இந்த பூமி சிறிதாகத் தோன்றும்.

மதி = நிலவு

முக = முகம் . நிலவு போன்ற முகம்

மடவார் தம் = பெண்கள் தம்

பண் = இசை

தேய்த்த = தோற்கும் படி பேசும்

மொழியினார் = குரலைக் கொண்ட பெண்கள்

ஆயத்துப் = ஆராய்ந்து

பாராட்டி = பாராட்டி

கண்டு ஏத்தும் செவ்வேள்’ = கண்டு போற்றும் முருகன்

என்று = என்று

இசை போக்கி = புகழ் பெற்று

காதலால் = காதலால்

கொண்டு ஏத்தும் கிழமையான் = போற்றப் படும் தலைவன்

கோவலன் என்பான் மன்னோ.  = கோவலன் என்பார்கள்.


ஒரு சில சொற்களுக்கு கொஞ்சம் விரிவான பொருள் காண்போம்.

முதலில் கிழவன் என்ற சொல் இரண்டு இடத்தில் வருகிறது.


"இரு நிதிக் கிழவன்"

"காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான்"

ஒளவையையும் நாம் தமிழ் கிழவி என்கிறோம். அது மரியாதையா? அவ்வளவு  அறிவு கொண்ட ஒரு பெண்ணை, கிழவி என்று அவள் வயதை வைத்தா குறிப்பிடுவது?

கிழவன், கிழவி என்றால் உரிமை உள்ளவன், தலைவன் என்று பொருள்.

முருகனுக்கு குறிஞ்சிக் கிழவன் என்று பெயர்.  முருகன் கிழவனா? குறிஞ்சி நிலத்துக்கு  உரிமையானவன், தலைவன் என்று பொருள்.

அவ்வளவு ஏன் போக வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமை

திங்கள் கிழமை

செவ்வாய் கிழமை

என்று சொல்கிறோமே, கிழமை என்றால் என்ன அர்த்தம்?

ஞாயிற்றுக்கு (சூரியனுக்கு) உரிய நாள்

திங்களுக்கு (நிலா) உரிய நாள்

என்று அர்த்தம்.

கோவலனுக்கு 18 வயசு. அவனைப் போய் கிழவன் என்று சொல்ல முடியுமா?

சரி, அடுத்தது,

"இரு நிதி"

அது என்ன இரு நிதி?

நிதியில் மொத்தம் 9 வகையான நிதிகள் இருக்கின்றன என்று சொல்லுகிறார்கள்.

நவ நிதிகள்.

மற்றவற்றை விட்டு விடுவோம். இரு நிதி என்றால் சங்க நிதி, பதும நிதி என்ற இரண்டைக் குறிக்கும்.

இந்த இரண்டு நிதிகளும் குபேரனின் வசம் உள்ளவை. சங்க, பதும என்பவை குபேரனின் இரண்டு மனைவிகளை குறிக்கும் என்று சொல்பவர்களும் உண்டு.

குபேரன் இந்த இரண்டு செல்வத்தையும் தன்னுடைய இரண்டு மனைவிகளிடம் கொடுத்து  வைத்து இருக்கிறாராம்.

இதில் பதும நிதி என்றால் அறிவு, ஞானம்.

சங்க நிதி என்றால் பொருள் செல்வத்தையும் குறிக்கும்.

அறிவும், பொருள் செல்வமும் கோவலனின் தந்தையான மாசாத்துவானிடம் இருந்தது.

நாவுக்கரசர் தேவாரத்தில் சொல்லுவார்

"சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து , இந்த மண்ணுலகையும், விண்ணுலகையும் ஆளும் அரச பதவி தந்தாலும், அதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, சிவனடியார்களோடு  சேர்ந்து இருப்பதே எங்களுக்கு வேண்டியது"

என்கிறார்.


சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் மல்லோம்
மாதேவர்க் கேகாந்தர் அல்லா ராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.


பசு மாட்டின் தோலை உரித்து, அந்த மாமிசம் சாப்பிடுபவன், சிவனடியாராக இருந்தால், அவன் தான் எனக்கு கடவுள் என்கிறார்.

நாவுக்கரசர் பெரிய  புரட்சியாளர். ஒரு கீழ் சாதிக்காரனை, தொடுவது இருக்கட்டும், அவனோடு பேசுவது இருக்கட்டும், அவனை கடவுள் என்கிறார் . அவர்   இருந்த காலத்தில் ஜாதி கட்டுப்பாடுகள் எவ்வளவு இருந்திருக்கும்?


பாடலுக்கு மீண்டும் வருவோம்.

கோவலனின் புகழுக்கு முன்னால், இந்த பூமியே தேய்ந்து சிறிதாக தோன்றுமாம். அவ்வளவு புகழ்.

பெண்கள் எல்லாம் ஜொள்ளு விடும் அளவுக்கு அழகன்.

பெரிய செல்வந்தன்.

இராசாவுக்கு நெருங்கிய குடும்பம்.

16 வயசு.

கதாநாயகனையும் அறிமுகம் செய்தாயிற்று.

அடுத்து என்ன?

திருமணம்தான்.

16 வயது பையனுக்கும், 12 வயது பெண்ணுக்கும் திருமணம்.

அது எப்படி நடந்தது என்று பார்ப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_18.html

1 comment:

  1. என்ன ஒரு நல்ல பாடல்! இதுவரை நான் கேட்டதில்லை. கொடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete