Pages

Wednesday, June 19, 2019

கம்ப இராமாயணம் - தலைவர் அவர்

கம்ப இராமாயணம் - தலைவர் அவர் 


சில பாடல்களை படிக்க படிக்க புதுப் புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றது.

இராமாயணத்தில், முதல் பாடல், கடவுள் வாழ்த்துப் பாடல். எத்தனையோ தரம் படித்து, கேட்டு, மனப்பாடம் ஆன வரிகள்தான். இதில், இனிமேல் என்ன இருக்கிறது மேலும் அறிய என்று நினைத்துக் கொண்டிருருந்தேன்.


முதலில் பாடலைப் பார்த்து விடுவோம்

பாடல்


உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

பொருள்


உலகம் யாவையும் = உலகம் அனைத்தையும்

தாம் உள = தம் மனதில் நினைத்த படி

ஆக்கலும் = படைக்கவும்

நிலை பெறுத்தலும் = நிலைபெறும்படி காக்கவும்

நீக்கலும் = பின் அவற்றை அழிக்கவும்

நீங்கலா = முடிவில்லா

அலகு இலா = அளவற்ற

விளையாட்டு உடையார் = அதை விளையாட்டாகச் செய்பவர்

அவர் = அவர்

தலைவர் = தலைவர்

அன்னவர்க்கே = அவருக்கே

சரண் நாங்களே = நாங்கள் சரணம் அடைகிறோம்

சொல்லுக்கு, அர்த்தம் என்னவோ அவ்வளவுதான்.

இதில் புதிதாக என்ன இருக்கிறது?

உலகை படைத்து, காத்து, அழிக்கும் அந்தக் கடவுளை நாங்கள் சரண் அடைகிறோம் என்கிறார்.

யோசித்துப் பார்க்கிறேன்.

நான் பிறந்தது என் விருப்பப் படி அல்ல.


இந்த நாட்டில், இந்த ஊரில், இந்த பெற்றோருக்கு இந்த வடிவில் பிறக்க வேண்டும் என்று  நான் விரும்பவில்லை. என் விருப்பம் இல்லாமல் என் பிறப்பு நிகழ்ந்தது.

சரி போகட்டும், என் விருப்பப்படி நான் வாழ முடிகிறதா?

என்ன பெரிய விருப்பப்படி வாழ்வது...நான் நினைத்தபடி காலையில் எழுந்திரிக்க முடியவில்லை. இத்தனைக்கும் அலாரம் வைத்து விட்டு படுக்கிறேன். இரவு படுக்கப் போகும்போது காலையில் ஐந்து மணிக்கு எழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுக்கிறேன். எல்லா நாளும் முடிவதில்லையே.  மனைவி/கணவன், பிள்ளைகள், நம் படிப்பு, வேலை, மேலதிகாரிகள்  என்று ஆயிரம் விஷயங்கள் என்னை மீறி நடந்து கொண்டே இருக்கிறது.

சரி, வாழ்வும் என் கையில் இல்லை.

சாவாவது என் கையில் இருக்கிறதா?

அது என்று தேதியும் தெரியாது, இடமும் தெரியாது.

எவ்வளவோ பேர், எவ்வளவோ துன்பத்தில் தவிக்கிறார்கள். சாவு வராதா  என்று ஏங்குகிறார்கள். அவர்கள் விருப்பப்படி அது வருவது இல்லை.

சரி, வேண்டாம் என்றால் வராமல் இருக்கிறதா? கல்யாணம் முடித்து, புது மனைவியோடு  தேனிலவு போன இடத்தில் விபத்தில் சிக்கி இறந்தவர்கள் எத்தனை பேர்.

வேண்டும் என்பவர்களுக்கு வருவது இல்லை.

வேண்டாம் என்பவர்களிடம் வந்து நிற்கிறது.

எனவே முடிவும் என் கையில் இல்லை.

நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், என் வாழ்க்கையை நான் முடிவு செய்கிறேன் என்று. எது என் கையில் இருக்கிறது?

இப்படி தொடக்கம், நடு , முடிவு என்று எதுவமே என் கையில் இல்லை.

என் கையில் இல்லை என்றால் வேறு யார் கையில் இருக்கிறது?

யார் இதை எல்லாம் செய்கிறார்கள் ?

நான் செய்யவில்லை.

ஒன்று அது தானாக நிகழ வேண்டும், அல்லது யாராவது செய்ய வேண்டும்.

கம்பர் நினைக்கிறார், கம்பரைப் போல படித்த பெரும் புலவர்கள் நினைத்தார்கள்,  இவற்றைச் செய்வபன் ஒருவன் இருக்கிறான்.

அவன் தான் தலைவன்.

"அவர் தலைவர்"

அவர் கடவுள் என்று சொல்லவிலை.

அவர் பெருமாள், சிவன், பிரம்மா , இயேசு, அல்லா என்று எந்த கடவுள் பெயரையும் அவர் சொல்லவில்லை.

இன்னும் போனால், "அவர் கடவுள்" என்று கூட சொல்லவில்லை.

"அவர் தலைவர்", என்று சொல்கிறார்.

"அன்னவர்க்கே சரண் நாங்களே"

அந்தத் தலைவருக்கு, நாங்கள் சரண் என்கிறார்.

இவற்றைஎல்லாம் செய்வது இயற்கை என்று சொல்கிறீர்களா? அந்த இயற்கை தான்  தலைவர். அந்த இயற்கையிடம்  நாங்கள் சரண் அடைகிறோம் என்கிறார்.

அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.  அதனிடம் ஏன் சரண் அடைய வேண்டும்?  அது ஒரு பக்கம் இருந்து விட்டுப் போகட்டுமே.

அதனிடம், அல்லது அந்தத் தலைவரிடம் ஏன் போய் சரண் அடைய வேண்டும்?

அதைச் சொல்லப் புகுந்தால், blog நீண்டு விடும்.

அதை, இன்னொரு நாள் சிந்திப்போமா...


https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_32.html

1 comment:

  1. நம் கையில் இல்லை என்பதால், இன்னொருவர் கையில் இருக்கிறது என்று ஏன் கொள்ள வேண்டும்?

    அப்படியே இன்னொருவர் கையில் இருந்தாலும், அவரை அல்லது அவளை அல்லது அதை ஏன் சரண் அடைய வேண்டும்?

    ReplyDelete