Pages

Wednesday, July 10, 2019

கம்ப இராமாயணம் - யான் பட்ட பழி வந்து பாராயோ ?

கம்ப இராமாயணம் - யான் பட்ட பழி வந்து பாராயோ ?


இலக்குவனால் மூக்கும், காதும், மார்பும் துண்டிக்கப்பட்ட சூர்ப்பனகை தன் அண்ணன் இராவணனை கூவி அழைக்கிறாள். "அண்ணா, உன் தங்கையின் நிலையை பார்த்தாயா" என்று கேவுகிறாள்.

இராவணனின் பெருமைகளை சொல்லி, அப்பேற்பட்ட உன் தங்கையின் நிலையைப் பார் என்கிறாள்.

"யானைகளுக்கு அரசனான ஐராவதத்தின் மீது ஏறி சண்டைக்கு வந்த இந்திரனை போரிட்டு அவனை புறம் காணச் செய்தாய். அவன் புற முதுகை கண்ட நீ உன் தங்கையின் அவல நிலையை பார்க்க மாட்டாயா?" என்று புலம்புகிறாள்.

பாடல்

ஆர்த்து, ஆனைக்கு அரசு உந்தி,
    அமரர் கணத்தொடும் அடர்ந்த
போர்த் தானை இந்திரனைப் பொருது,
    அவனைப் போர் தொலைத்து,
வேர்த்தானை, உயிர் கொண்டு
    மீண்டானை, வெரிந் பண்டு
பார்த்தானே! யான் பட்ட
    பழி வந்து பாராயோ?

பொருள்

ஆர்த்து = போரிட்டு

ஆனைக்கு அரசு = யானைகளுக்கு அரசனான ஐராவதத்தினை

உந்தி = அதன் மேல் ஏறி வந்து

அமரர் = தேவர்கள்

கணத்தொடும் = படையோடும்

அடர்ந்த = சண்டையிட்ட

போர்த்  = போரின்

தானை = தலைவன்

இந்திரனைப் பொருது = இந்திரனோடு போரிட்டு

அவனைப் போர் தொலைத்து = அவனை போரில் வென்று

வேர்த்தானை = அவன் வேர்த்து விறுவிறுக்க

உயிர் கொண்டு = உயிர் பிழைத்தோம் என்று

மீண்டானை = போரில் இருந்து தப்பி மீண்டு வந்தவனை

வெரிந் = புறமுதுகு

பண்டு = அன்றொரு நாளில்

பார்த்தானே!  = பார்த்தாயே

யான் பட்ட = நான் பட்ட

பழி வந்து பாராயோ? = பழியினை வந்து பார்க்க மாட்டாயா ?


ஆர்த்த என்றால் பேரொலி , சண்டை, யுத்தம், பெருகி வருதல் என்று பொருள்.

ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய். 

என்பார் மணிவாசகர். பேரலை, சுனாமி போல் வரும் பிறவிகள், ஒன்றன் பின் ஒன்றாக .

ஆர்த்த பிறவி
ஆர்த்தாடும் தீர்த்தன்
வார் கலைகள் ஆர்ப்ப
குழல் மேல் வண்டு ஆர்ப்ப

தமிழில் ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டால் அது நம்மை எங்கெங்கோ கொண்டு செல்லும்.

படகு சவாரி போல. அங்கே ஒரு தென்னை மரம், இங்கே கொஞ்சம் வீடுகள், அங்கே ஒரு   பண்ணை, திட்டு திட்டாய் தாமரை பூக்கள் என்று காட்சி மாறிக் கொண்டே வருவது போல , வார்த்தை என்ற படகில் ஏறி விட்டால் அது நம்மை  காலம் என்ற நதியில் எங்கெங்கோ கொண்டு செல்லும்.

இலக்குவன் அப்படி செய்த போது , நேரே சூர்ப்பனகை இலங்கை சென்றாள் என்று  சொல்லி விட்டு கதையை நகர்த்தி இருக்கலாம்.

வேலை மெனக்கெட்டு இராவணனின் புகழ் பாடுகிறான் கம்பன். நிறுத்தி நிதானமாக.

காரணம் என்ன?

நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அறம் பிழைத்தால் அந்த அறமே உன்னை தண்டிக்கும்  என்று காட்டவே, இராவணன் எவ்வளவு பெரிய ஆள் என்று காட்டுகிறான்.

ஐராவதம் என்ற அந்த யானைக்கு ஆயிரம் தந்தம் இருக்குமாம். ஆயிரம் தந்தம் என்றால்  அது எவ்வளவு பெரிய யானை என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அந்த யானையை ஒருவன் ஓட்டுகிறான் என்றால் அவன் எவ்வளவு பெரிய பலசாலியாக இருக்க வேண்டும்.

அப்படிபட்ட பல சாலியை ஒருவன் போரில் தோற்கடித்து ஓட ஓட விரட்டுகிறான் என்றால்  அப்படி விரட்டியவன் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும்? 

அவன் தான் இராவணன்.

மிகப் பெரிய பராக்கிரமம். வீரம்.

எல்லாம் போனது, மாற்றான் மனைவியை மோகித்த ஒரே காரணத்தால்.

தேவர்களை சிறை வைத்தது அல்ல அவன் செய்த தவறு.

இராமனின் மனைவியை கவர்ந்து சென்றது, அவன் செய்த பிழை.

அந்தப் பிழை, அப்பேற்பட்ட இராவணனை வேரோடு சாய்த்தது.

அவனுடைய தவம், வீரம், செல்வம், புகழ், குலம், படை, அனைத்தையும் புரட்டிப் போட்டது  அறம்.

இராமாயணம் போன்ற காப்பியங்களை சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்தால், இவை மனதில் எளிதில் பதியும்.

கதையாக மட்டும் அல்ல, ஒரு வாழ்க்கை நெறியாகச் சொல்லித் தர வேண்டும்.

பாட்டியை ஏமாற்றிய காக்கா, காக்காவை ஏமாற்றிய நரி என்று கதை சொல்லிக்  கொடுக்கிறோம். ஏமாற்றுவது தவறில்லை என்று சொல்லி சொல்லி வளர்க்கிறோம்.

அவர்கள் வளர்ந்த பின் ,  வேறு என்ன செய்வார்கள்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_10.html

1 comment:

  1. "பார்த்தான்" "பாராயோ" என்ற இரட்டைச் சொற்களின் juxtaposition அற்புதம்.

    கம்பராமாயணத்தில் இப்படி எல்லாம் சூர்ப்பனகையின் துன்பத்தைக்கூடக் காட்டும் பாடல்கள் இருக்கின்றன என்பதே பொதுவாகத் தெரியாது. அவைகளை எடுத்து நாங்கள் சுவைக்கத் தந்ததற்கு நன்றி.

    ReplyDelete