Pages

Thursday, July 25, 2019

குறுந்தொகை - குருகும் உண்டு

குறுந்தொகை - குருகும் உண்டு 



காதலில் பெண் மிக எச்சரியாகவே இருக்க வேண்டி இருக்கிறது. ஒரு இழை கோடு தாண்டினாலும், பெண் தான் அந்த பளுவை தூக்கிச் சுமக்க வேண்டி இருக்கிறது.

காதலும், ஊடலும், கூடலும் ஒரு அந்தரங்க அனுபவம். சாட்சிக்கு யாரையும் வைத்துக் கொண்டா காதலிக்கு முத்தம் கொடுக்க முடியும்?

ஆண் துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிளம்பி விடலாம். இயற்கை, பெண்ணுக்கு அதிகம் சுமையை தந்திருக்கிறது.


"கர்ப்பம் ஆனால் என்ன? வேண்டாம் என்றால் கலைத்து விட்டு போவது. இன்று மருத்துவம் எவ்வளவோ முன்னேறி விட்டது. கற்பு கத்திரிக்காய் எல்லாம் அந்தக் காலம்" என்று சொல்லுபவர்களும் இருக்கலாம். அவர்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

அறிவியலும், மருத்துவமும் எவ்வளவு வேகமாக முன்னேறினாலும், பண்பாடு, கலாச்சாரம் என்பவை அவ்வளவு சீக்கிரம் மாறிவிடுவது இல்லை.

எது நமது பண்பாடு, கலாச்சாரம் என்றால் நம் இலக்கியங்களை புரட்டி பார்த்தால் தெரியும். எப்படி நம் முன்னவர்கள் வாழ்ந்தார்கள்? எது அவர்களுக்கு முக்கியம் என்று பட்டது? எதை முதன்மை படுத்தி அவர்கள் வாழ்ந்தார்கள்  என்று நாம் அறியலாம்.

இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி.

"அவள் எவ்வளவோ மறுத்தால். அவன் எங்கே கேட்கிறான். அவளை வற்புறுத்தி சம்மதிக்க வைத்துவிட்டான். காரியம் முடிந்த பின், இப்போது அவளை அவ்வளவாக அவன் கவனிப்பது இல்லை. அல்லது, அவளுக்கு அப்படி ஒரு பயம் வந்திருக்கிறது. யோசிக்கிறாள்.அன்று நடந்த அந்த கூடலுக்கு, சாட்சி யாரும் இல்லை. அவன் அப்படி எல்லாம் எங்களுக்குள் ஒன்றும் இல்லை என்று பொய் சொன்னால், நான் என்ன செய்ய முடியும்?

யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. அந்த ஓடைக்கு பக்கத்தில், செடிகளுக்கு பின்னால் ஒரு குருகு (பறவை) ஒன்று அங்கு நடந்ததை பார்த்துக் கொண்டிருந்தது"

என்று சொல்கிறாள் தலைவி.

எவ்வளவு வெகுளி (innocent)


பாடல்

“யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”

பொருள்

“யாரும் இல்லை;  = யாரும் இல்லை

தானே கள்வன்; = அவன் தான் களவாணிப் பயல்

தான் அது பொய்ப்பின் = அவன் (அன்று அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று) பொய் சொன்னால்

யான் எவன் செய்கோ? = நான் என்ன செய்ய முடியும் ?

தினைத்தாள் அன்ன = திணையின் ஓலை போல

சிறுபசுங் கால = பசுமையான கால்களை கொண்ட

ஒழுகுநீர் = நீர் ஒழுகும்

ஆரல் = ஆரல் என்று ஒரு வகை மீனைப்

பார்க்கும் = பிடிக்க பார்த்து இருக்கும்

குருகும் உண்டு = குருகு (ஒரு வித நீர் பறவை). நாங்கள் மட்டும் தனித்து இருந்தோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை, ஒரு குருகும்  இருந்தது. குருகு"ம்".

தான் மணந்த ஞான்றே!” = அவன் என்னை சேர்ந்த நாளில்

பாடலில் பல நுண்ணிய உணர்ச்சிகள் பொதிந்து கிடக்கிறது.

அவனுக்கோ, அவளைக் கூடுவதில் ஆசை, ஆர்வம், பதற்றம். வேறு ஒன்றைப் பற்றியும் கவலை இல்லை. ஆனால், அவளோ பயப் படுகிறாள். யாரவது  வந்து விடுவார்களோ,  பார்த்து விடுவார்களோ என்று சுத்தி முத்தும் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். அப்படி பார்க்கும் போது , செடி மறைவில் உள்ள குருகு அவள் கண்ணில் படுகிறது. "சீ, இந்த குருகு நம்மையே பார்க்கிறதே" என்று  நாணுகிறாள்.

அப்புறம் நினைக்கிறாள். குருகுக்கு என்ன தெரியும். அது நம்மை ஒன்றும் பார்க்கவில்லை,  அது ஆரல் மீனை பிடிக்க காத்திருக்கிறது. என்னை ஒன்றும் இந்தக் கோலத்தில் அது பார்க்கவில்லை என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள்.


மேலும் அவள் மனதில் ஓடுகிறது, ஒருவேளை அந்த ஆரல் மீனின் கதிதானோ தனக்கும் என்று.

எல்லாம் முடிந்து விட்டது.

நாட்கள் கொஞ்சம் நகர்ந்து விட்டன.

"ஐயோ, அன்று நடந்ததற்கு ஒரு சாட்சியும் இல்லையே. அவன் மறுத்து விட்டால் நான்  என்ன செய்வேன்"

என்று ஒரு பெண்ணாக பரிதவிக்கிறாள்.  அவன் கள்வன், பொய் சொல்லிவிட்டால் நான் என்ன செய்வேன்  என்று மறுகுகிறாள்.

உதடு துடிக்க, சொல்லவும் முடியாமல், மனதுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியாமல், கண்ணில் நீர் தளும்ப "நான் என்ன செய்வேன்" என்று சொல்லி நிற்கும்  ஒரு இளம் பெண் நம் கண் முன்னே வருகிறது அல்லவா?

"பார்த்த சாட்சி யாரும் இல்லை, ஒரே ஒரு குருகுதான் இருந்தது அந்த இடத்தில்"  என்று சொல்லும் போது "ஐயோ, இந்த வெள்ளை மனம் கொண்ட பெண்ணை, அவன் கை விட்டு விடுவானோ" என்று நம் மனம் பதறுகிறது.

"கவலை படாதடா, அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காது. அவன் வருவான்" என்று அடி வயிறு கலங்க அவளுக்கு ஆறுதல் சொல்லக் தோன்றுகிறது.

சம்மதிக்காவிட்டால், அவன் அன்பை இழக்க நேரிடலாம். அவனுக்கு கோபம் வரும். "என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா...இவ்வளவுதானா உன் காதலின் வலிமை "  என்று அவன் அவளுடைய காதலை பந்தயம் வைக்கலாம்.

சம்மதித்து விட்டால், பின்னால் கை விட்டு விட்டால், எதிர் காலமே ஒரு கேள்விக் குறியாகிவிடும்.

பெண்ணுக்கு இரண்டு புறமும் சிக்கல்தான்.

பெண்ணின் நிலைமையை தெளிவாக படம் பிடிக்கும் அதே நேரத்தில் , மற்ற பெண்களுக்கும்   "எச்சரிக்கை ...இந்த நிலை உனக்கு வரலாம் " என்று பாடமும் சொல்கிறது இந்தப் பாடல்.

பாடலை ரசிப்போம். பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_25.html

3 comments:

  1. அருமையான விளக்கம்.ஒரு சின்ன பாடலில் இவ்வளவு அர்த்தம் உள்ளதா என பிரமிப்பூட்டுகிறது.

    ReplyDelete
  2. இந்தப் பாடலிலிருந்து கிடைக்கும் இன்னொரு செய்தி என்ன என்றால்... அந்தக் காலத்தில், தமிழ் பண்பாட்டில் கலியாணத்துக்கு முன் கூடுவதில்லை என்பதை இந்தப் பாடல் பொய்ப்பித்து விடுகிறது! தமிழகத்திலும் திருமணத்துக்கு முன் உடலுறவு நடந்தே இருக்கிறது!

    ReplyDelete
  3. நன்றி...... குருகு என்பது ஒரு கொக்கு வகை... வெளிரிய நிறம் கொண்ட இந்த குருகுகொக்கு என்பதையே பேச்சு வழக்கில் குருட்டுகொக்கு என மாற்றிவிட்டனர்.... வெண்கொக்கு போல இவை கூட்டமாக திரியாது....வீடுகளுக்கு அருகே கூட நின்று நீரில் பூச்சிகளை பிடிக்கும். சில நேரம் கிட்டே போகும் வரை பறக்காமல் நின்று ,பின்பு பறப்பதால் சிலர் இதற்கு பார்வை குறைபாடுள்ளது எனவும் நினைத்து, குருட்டு கொக்கு என்று அழைப்பதை தொடரலாம்.

    ReplyDelete