Pages

Monday, July 8, 2019

கம்ப இராமாயணம் - தழல் எடுத்தான் மலை எடுத்தான்

கம்ப இராமாயணம் - தழல் எடுத்தான் மலை எடுத்தான் 


இலக்குவனால் மூக்கும், காதும், முலையும் அறுபட்ட சூர்ப்பனகை, வலியில் , அவமானத்தில் துடிக்கிறாள்.

துன்பம் என்று வரும்போது நமக்கு யார் துணை செய்வார்கள் என்று நினைப்பது இயல்பு.

சூர்ப்பனகையின் தமையர்கள் யார் ? இராவணன், கும்பகர்ணன், வீடணன். பெரிய பலசாலிகள்.

இராவணா, என் நிலையைப் பார் என்று கதறி அழுகிறாள்.

ஒரு புறம் சூர்ப்பனகையின் அவலம். இன்னோரு புறம் கம்பனின் அற்புதமான பாடல்கள். பாடலை இரசித்து மகிழவா அல்லது சூர்ப்பனகையின் துன்பம் கண்டு வருந்தவா என்று தெரியாமல் நம்மை குழப்பும் பாடல்கள். பாடல்கள் அத்தனையும் தேன்.

துன்பத்தைக் கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கும் பாடல்கள்.

அழுது, இராவணனை கூப்பிட்டாள் என்ற ஒரு வரியைத் தவிர அந்த பாடல்களில் ஒன்றும் இல்லை. ஆனால், அவள் கூப்பிட்ட விதம்..அருமையிலும் அருமை.

வாசகர்களுக்கு பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை, அவற்றை இரசிக்க.  இல்லை என்றால், விட்டு விட்டு மேலே போய் விடலாம். உங்கள் எண்ணத்தை  தெரிவியுங்கள்.

சரி, பாடலுக்கு வருவோம்....


"இராவணா , இந்த நிலத்தில் நீ நிலைத்து இருக்கும் போது, இந்த தவ வேடம் பூண்ட மானிடர்கள் கையில் வில்லை எடுத்துக் கொண்டு அலைவது சரியா? உன் எதிரில் தேவர்கள் கூட நிமிர்ந்து பார்க்க பயப்படுவார்களே. நீ யார், அனலை கையில் கொண்ட சிவனின் மலையை கையில் எடுக்க முயன்ற பலசாலி ஆயிற்றே ... உன் தங்கையின் நிலையை பார்க்க வரமாட்டாயா...வா "

என்று அழைக்கிறாள்.

"எடுத்து" என்ற சொல்லை கம்பன் எப்படி எடுத்தாழ்கிறான் (:) )என்று பாருங்கள்.

பாடல்

'நிலை எடுத்து, நெடு நிலத்து 
     நீ இருக்க, தாபதர்கள் 
சிலை எடுத்துத் திரியும்இது சிறிது 
     அன்றோ? தேவர் எதிர்
தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! 
     தழல் எடுத்தான் 
மலை எடுத்த தனி மலையே! 
     இவை காண வாராயோ?

பொருள்

'நிலை எடுத்து = நிலைத்து நிற்க

நெடு நிலத்து  = பெரிய நிலத்தில்

நீ இருக்க = நீ (இராவணன்) இருக்க.  நெடு நிலத்து நீ நிலை எடுத்து இருக்க என்று வாசிக்க வேண்டும்.

தாபதர்கள்  = தவக் கோலம் கொண்டவர்கள்

சிலை எடுத்துத் = கையில் வில்லை எடுத்து

திரியும் இது = திரிகின்ற இந்த நிலை

சிறிது அன்றோ?  = சிறுமை அல்லவா?

தேவர் = தேவர்கள்

எதிர் = (உன்) எதிரில்

தலையெடுத்து = தலை தூக்கி

விழியாமைச் = விழித்துப் பார்க்காமை

சமைப்பதே! = இருப்பதே

தழல் எடுத்தான்  = கையில் தீயைக் கொண்ட (சிவனின்)

மலை எடுத்த = கைலாய மலையை கையில் எடுத்த

தனி மலையே!  = ஒப்பற்ற மலை போல் வலிமை உடையவனே

இவை காண வாராயோ? = இந்த கொடுமையை காண வர மாட்டாயா ?


நிலை எடுத்து
சிலை எடுத்துத்
தலையெடுத்து
தழல் எடுத்து
மலை எடுத்து

தமிழ்  சொற்கள் கம்பனிடம் கை கட்டி சேவகம் செய்தன. என்னை எடுத்துக் கொள் , என்னை எடுத்துக் கொள் என்று அவன் முன் வரிசையில் நின்றன.

சூர்ப்பனகையின் புலம்பலில் இத்தனை தமிழ் சுவை.

கொஞ்சம் இலக்கணம் படிப்போமா ?

"மலை எடுத்த தனி மலையே " என்று இராவணனை குறிப்பிடுகிறாள்.

மலை போன்ற உறுதியானவன், வலிமையானவன் இராவணன் என்று சொல்ல வந்தாள். அவனையே மலை என்று சொல்லி விட்டாள்.

இதற்கு "உவமை ஆகு பெயர்" என்று இலக்கணத்தில் பெயர்.

அது என்ன ஆகு பெயர்.

ஒன்றிற்கு ஆகி வரும் பெயர்.

ஒன்றின் பெயர் இன்னொன்றுக்கு ஆகி வருவது ஆகு பெயர் எனப்படும்.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

"அறம் பற்றி அறிய வேண்டும் என்றால் வள்ளுவனைப் படி"

என்று சொன்னால், வள்ளுவரை எப்படி படிக்க முடியும். அவர்தான் இல்லையே. இருந்தாலும், இரு ஆளை எப்படி படிக்க முடியும்?

வள்ளுவனை படி என்றால் அவர் எழுதிய திருக்குறளைப் படி என்று அர்த்தம்.

இதற்கு கர்த்தாவாகு பெயர் என்று அர்த்தம்.

திருக்குறளின் கர்த்தாவான வள்ளுவர், அந்த திருக்குறளுக்கு ஆகி வந்தமையால் அது கர்த்தாவாகு பெயர் .

"அடுப்புக்கு பக்கத்தில நெய்யை வச்சிருக்க பாரு. அந்த நெய்யை கொஞ்சம் மாத்தி அந்தப் பக்கம் வை."

 என்று சொன்னால், நெய்யை தள்ளி வை என்று அர்த்தம் அல்ல.  நெய் உள்ள பாத்திரத்தை  தள்ளி வை என்று அர்த்தம். அதை  தானியாகு பெயர் என்று சொல்லுவார்கள். தானி என்றால் ஸ்தானம் அல்லது இடம். நெய் இருக்கும் இடமான அந்தப் பாத்திரத்துக்கு நெய் என்று சொல் ஆகி வந்ததால் அதற்கு தானியாகு என்று  பெயர்.


தமிழ் இலக்கணம் மிக எளிமையானது. வாழ்வோடு ஒட்டி வருவது. அன்றாடம் நடை முறையில் நாம் கையாள்வது. படிக்க படிக்க மிக சுவையானது. 'அட, இதற்கு இப்படி ஒரு பெயர் இருக்கா ' என்று ஆச்சரியப் பட வைக்கும்.

இப்படி இன்னும் கொஞ்சம் இருக்கு. தேடுங்கள், கண்டடைவீர்கள்.


மேலும் இரசிப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_8.html

3 comments:

  1. கம்பனை உருசிக்கத் தந்தது மட்டுமல்லாது , தமிழிலக்கணத்தையும் தொட்டுக்காட்டி எம் உள்ளம் நிறைந்த சுவை தந்தீர்கள். நன்றி !

    ReplyDelete
  2. கம்பர் எப்படித் தமிழ் சொற்களை எடுத்து விளையாடியிருக்கிறார்!

    எனக்குப் பிடித்த இரண்டு வரிகள்: "தழல் எடுத்தான் மலை எடுத்த தனி மலையே!"

    Messi காற்பந்தில் விளையாடுவது போல, இளையராஜா இசையில் விளையாடுவது போல, Federer டென்னிஸில் விளையாடுவது போல, கம்பர் தமிழில் "பூந்து விளையாடிட்டாரு!"

    ReplyDelete