Pages

Sunday, August 4, 2019

கம்ப இராமாயணம் - புலவியினும் வணங்காத

கம்ப இராமாயணம் - புலவியினும் வணங்காத 


கணவன் மனைவி உறவு என்பது சிக்கலானது. எதிர்பார்புகளும், ஏமாற்றங்களும், சலிப்புகளும், உரசல்களும் நிறைந்தது.

யார் சரி, யார் தவறு என்ற வாக்குவாதம் நிறைந்தது.

பெரும்பாலோனோர், வாக்குவாதம் என்று வரும்போது தாங்கள் அதில் வெற்றி பெற வேண்டும் என்று முனைந்து வாதாடுவார்கள். முடிவில் வெற்றியும் பெற்று விடுவார்கள். ஆனால், அதில் அவர்கள் இழப்பது தங்கள் துணையின் அன்பை, பாசத்தை, நேசத்தை. தோற்றவர் அதில் எளிதில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். தோல்வி வலி தரக் கூடியது. அந்த வலிக்கு அவர்கள் தேடும் மருந்து, தங்களை தோற்கடித்தவர்களை துன்பத்தில் ஆழ்த்த நினைப்பதுதான்.

"நான் சொன்னது தப்பு என்று சொன்னாய் அல்லவா, என் கூட பேசாதே" என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கலாம்.

"...நான் இந்த வீட்டின் தலைவன், நான் செய்வதில் குறை சொன்னாய் அல்லவா, இரு, நான் யார் என்று காட்டுகிறேன்...இந்த வருடம் வெளி நாடு கூட்டிப் போவதாய் இருந்தேன், அதை cancel செய்து விடுகிறேன்...வலி என்றால் உனக்கும் அப்போதுதான் தெரியும்.."

இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு மௌன போரில் ஈடுப் படுவார்கள்.

சரி, அதற்காக மற்றவர் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டுக் கொண்டு அடிமை  மாதிரி இருக்க வேண்டுமா ? அதுக்கு வேற ஆளைப் பார்க்க வேண்டும் என்று   கோபம் கொள்ளலாம்.

இறுதியில் வாதத்தில் வென்று, உறவில் தோற்பதாகவே முடிகிறது வாழ்க்கை.

அப்ப என்னதான் வழி.

இப்படி செய் என்று சொன்னால், சொன்னவரோடு வம்புக்கு போவோம்.

எனவே, கம்பன் சொல்லாமல் ஒரு அறிவுரை சொல்கிறான்.

"இப்படி செய், அப்படி செய்யாதே என்று சொல்லாமல், அரக்கர்கள் இப்படி செய்வார்கள்" என்கிறான்.

சில சுவர்களில் எழுதி வைத்திருப்பார்கள் "முட்டாள்கள் இங்கே சிறு நீர் கழிப்பார்கள்" என்று.

கணவன், மனைவிக்கு இடையில் சச்சரவு வந்தால் யார் விட்டு கொடுக்க வேண்டும் ?

இராவணன், விட்டு கொடுக்க மாட்டான் என்கிறான் கம்பன்.

படுக்கை அறையிலும் தலை வணங்காதவன் அவன் என்கிறான் கம்பன்.

பாடல்

புலியின் அதள் உடையானும், பொன்னாடை
     புனைந்தானும், பூவினானும் 
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு 
     யாவர், இனி நாட்டல் ஆவார்? 
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் 
     தோள், சேயரிக் கண், வென்றி மாதர் 
வலிய நெடும் புலவியினும் வணங்காத 
     மகுட நிரை வயங்க மன்னோ.

பொருள்

புலியின் = புலியின்

அதள் = தோல்

உடையானும் = உடையவனுமான சிவனும்

பொன்னாடை = பொன் ஆடை

புனைந்தானும் = அணிந்தவனும், திருமாலும்

பூவினானும்  = தாமரை பூவில் இருக்கும் பிரமனும்

நலியும் = நலிவடையச் செய்யும்

வலத்தார் = வல்லமை பொருந்தியவர்

அல்லர் = அல்லர்

தேவரின்  = (அப்படி என்றால் மற்ற) தேவர்களில்

இங்கு = இங்கு

யாவர், = யார்

இனி நாட்டல் ஆவார்?  = இனி அதை நாட்ட (செய்ய) முடியும் ?

மெலியும் இடை = நாளும் மெலிந்து கொண்டே இருக்கும் இடை

தடிக்கும் முலை = அளவில் பெருத்த முலை

வேய் = மூங்கில்

இளந் = இளமையான

தோள், = தோள்கள்

சேயரிக் = சிவந்த வரி ஓடிய

கண் = கண்கள்

வென்றி மாதர்  = வெற்றி பெரும் பெண்கள்

வலிய = வலிமையான

நெடும் = நீண்ட

புலவியினும் = கலவியிலும்

வணங்காத  = வணங்காத

மகுட நிரை  = மகுடங்கள் நிறைந்த

வயங்க = ஒளிவீசும்

மன்னோ. = அசைச் சொற்கள்

படுக்கை அறையில், பெண்களிடம் கூட தலை வணங்காதவன் இராவணன் என்றால்  என்ன அர்த்தம்?

அவன் அரக்கன். தலை வணங்க மாட்டான். நீ அரக்கனா என்று நம்மை கேட்காமல் கேட்கிறான் கம்பன்.

நாம் அரக்கர்கள் இல்லை என்பதால், தனிமையில் பெண்ணிடம் வணங்கு என்று சொல்லாமல் சொல்கிறான்.

"பாகு கனி மொழி, மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா" என்பார் அருணகிரிநாதர்.

பெண், பெண்ணாக இருக்கும் வரை, ஆண் அவளிடம் வணங்குவதை பெருமையாக  கருதுவான்.

என்று பெண்கள், நாங்கள் பெண்கள் மாதிரி இல்லை, நாங்களும் ஆண்கள் மாதிரித்தான் என்று  ஆரம்பித்தார்களோ, ஆண்களும், இந்த வணங்குவதை விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

மல்லிகைப் பூ மென்மையாக இருக்கும் வரை, அதை தலையில் வைத்து கொண்டாடுவார்கள்.

நான் ஏன் மென்மையாக இருக்க வேண்டும், நானும் பாறை போல கடினமாக இருப்பேன்  என்று மல்லிகை நினைக்கத் தலைப்பட்டால், யாரும் அதை குறை கூற முடியாது...ஆனால், பாறை போன்ற ஒரு பூவை, யார் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். வீடு கட்டவும், ரோடு போடவும் வேண்டுமானால் அதை  பயன் படுத்திக் கொள்ளலாம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஆண் பெண் உறவு சிக்கலானதுதான். அதில் ஒரு பகுதியை தொட்டு காட்டி விட்டுப் போகிறான் கம்பன்.

படிப்பதும், படிக்காமல் இருப்பதும் நம் விருப்பம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post.html

3 comments:

  1. //வாதத்தில் வென்று, உறவில் தோற்பதாகவே// அருமை.

    ReplyDelete
  2. Pyrrhic victory என்போமே அது மாதிரிதான்..வெற்றியில் இழப்பு அதிகம்.
    பாடலில் கம்பன் அழகாகவும் மறைமுகமாகவும் பெண்களிடம் ஆண்கள் ஜெயிப்பது ராவணனின் விட்டு கொடுக்காத குணம் போல என கூறுகிறான்.
    அதற்கு மேல் உங்கள் விளக்கம் ரசிக்கும்படியாக இருந்தது.

    ReplyDelete
  3. இராவணன் தன்னை யாருக்கும் வணங்காதவன் என்று எண்ணி, பெண்களிடம் கூட வணங்காமல் இருப்பது நல்ல கற்பனை. அதனால் இழப்பை உற்றவர் யார் என்றால் அவனே ஆவார்!

    நமக்கு நல்ல பாடம் தான் !

    ReplyDelete