கம்ப இராமாயணம் - விழி பொழி மழையன்
கம்ப இராமாயணத்தில் எவ்வளவோ அரிய பெரிய செய்திகள் எல்லாம் இருக்கின்றன.
என்னை மிகவும் ஆச்சரியப் பட வைத்த செய்தி எது என்று கேட்டால், சகோதர வாஞ்சை என்று சொல்வேன்.
அப்படி சொல்லும் பலர் எதை உதாரணம் காட்டுவார்கள் என்றால், இராமன், குகனையும், சுக்ரீவனையும், வீடணனையும் தன் தம்பியாகக் கொண்டான் எனவே இராமாயணத்தில் விஞ்சி நிற்பது சகோதர பாசமே என்று சொல்லுவார்கள்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
என்னை ஆச்சரியப் பட வைத்தது அந்த சகோதர வாஞ்சை அல்ல.
இராமனை காட்டுக்குப் போ என்றாள் கைகேயி.
இலக்குவனை கூடப் போ என்று யாரும் சொல்லவில்லை. அண்ணன் கூட அவனும் கிளம்பி விட்டான்.
சரி, அவர்கள்தான் போனார்கள், பரதன் என்ன செய்தான்?
நமது நெருங்கிய உறவினர் யாரவது இறந்து விட்டால் கூட, ஓரிரண்டு வருடம் துக்கம் காப்போம், அப்புறம் நாளடைவில் அது மறைந்து விடும்.
பரதன், 14 வருடம் அண்ணனை நினைத்து தவம் இருக்கிறான், நந்தியம்பதி என்ற கிராமத்தில். அரண்மனை சுகம் அனைத்தையும் விட்டு விட்டு அண்ணணனை நினைத்து ஏங்கி நிற்கிறான்.
நம்மால், நினைத்துப் பார்க்க முடியுமா ?
அப்படி ஒரு சகோதர பாசமா?
மனைவியை விட்டு விட்டு இலக்குவன் போனான்.
மனைவியை விட்டு விட்டு பரதன் ஊருக்கு வெளியே கிராமத்தில் இருந்தான்.
சரி, இலக்குவன் போனான். பரதன் போனான். சத்ருகன் என்ன செய்தான்?
அவனும் அரண்மனையை துறந்து, பரதன் கூடவே இருந்தான்.
சகோதரர்கள் இடையே இப்படி ஒரு பாசத்தை காண முடியுமா ?
ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் கூட இல்லை. மாற்றாந்தாய் மக்கள். அவர்களுக்குள் இப்படி ஒரு பாசமா?
இராவண வதம் முடிந்து இராமன் அயோத்தி நோக்கி வந்து கொண்டிருக்கிறான். வருகிற வழியில் பரத்துவாஜ முனிவரை சந்திக்கிறான். அவர், பரதன் நிலை பற்றி இராமனுக்கு கூறுகிறார்.
பாடல்
வெயர்த்த மேனியன்; விழி பொழி மழையன்; மூவினையைச்
செயிர்த்த சிந்தையன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான்;
அயிர்த்து நோக்கினும், தென் திசை அன்றி, வேறு அறியான்
பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம் படியான்
பொருள்
வெயர்த்த மேனியன்; = வியர்வை வழியும் மேனியை உடையவன். காரணம், சாமரம் வீசக் கூட ஆள் வைத்துக் கொள்ளவில்லை
விழி பொழி மழையன்; = விழிகள் மழை போல் கண்ணீரை சொரிகின்றன
மூவினையைச் = மூன்று வினைகளை, மூழுகின்ற வினைகளை
செயிர்த்த சிந்தையன்; = கோபித்த சிந்தையன்
தெருமரல் = மன மயக்கத்தால்
உழந்து உழந்து அழிவான்; = உழன்று உழன்று அழிவான்
அயிர்த்து நோக்கினும் = ஐயம் கொண்டு பார்த்தாலும்
தென் திசை அன்றி = தென் திசை அல்லாது
வேறு அறியான் = வேறு திசை ஒன்றையும் அறிய மாட்டான்
பயத்த = பயத்துடன் கூடிய
துன்பமே = துன்பமே
உருவு கொண்டென்னலாம் = உருவமாக உள்ளவன் என்று சொல்லலாம்
படியான் = அப்படி இருந்தான்
சகோதரர்கள் நால்வரும், நாட்டைத் துறந்து, அரண்மனை சுகங்களைத் துறந்து, கட்டிய மனைவியைத் துறந்து 14 வருடங்கள் இருந்திருக்கிறார்கள்.
இதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா இன்று?
ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு ஒருவர் காட்டும் உச்ச பச்ச அன்பு இது.
விட்டுப் போயிருந்தால், இனியேனும், சகோதர சகோதரிகளை கூப்பிடுங்கள், அவர்கள் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். உறவை புதுப்பியுங்கள்.
உடன் பிறந்தார் பாசம், கம்பன் படிப்பிக்கும் பாடம்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_0.html
சகோதர வாஞ்சையை பற்றி நன்றாக எடுத்து சொன்னீர்கள்.நாம் நல்லவை எங்கு உள்ளதோ அதை பின் பற்றவேண்டும். .ஏனென்றால் அதே ராமாயணத்தில் வாலி-சுக்ரீவன்,,ராவணன்-விபீஷணன் சகோதரர்களில் இந்த பாசம் காணப்படுவதில்லை..
ReplyDeleteமிகவும் உணர்ச்சி பதிந்த பாடல்! நன்றி.
ReplyDelete