Pages

Sunday, August 11, 2019

சிலப்பதிகாரம் - அரும்பெறற் கணவன்

சிலப்பதிகாரம் - அரும்பெறற் கணவன் 


பெண்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்பது சாதாரண ஆண் மகன்களின் அங்காலாய்ப்பாக இருக்கலாம்.

இளங்கோ அடிகள் போன்ற பெரும் புலவர்களுக்கும் அந்த குழப்பம் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

அப்படியும் இருக்கலாம், அல்லது பெண்ணின் இயல்பே அப்படி இருக்கலாம்.

கோவலன் அப்படி ஒன்றும் பெரிய சத்ய சீலன் கிடையாது.

மாசறு பொன்னே, வலம்புரி முத்தே என்று கண்ணகியை கொஞ்சிவிட்டு, மாதவி பின்னால் போனான். பின் மாதவியை விட்டு விட்டு, சொத்தையெல்லாம் தொலைத்து விட்டு, கண்ணகியிடம் வந்தான்.

சிலம்பு இருக்கிறது, அதை வேண்டுமானால் கொண்டு போ என்று கண்ணகி சொல்கிறாள். கோவலன் நாணப்பட்டு, "இல்லை, இந்த சிலம்பை மூலதனமாக வைத்து வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டுவேன்...என்னோடு நீ மதுரைக்கு வா " என்றது கூப்பிட்டான். உடனே கிளம்பி விட்டாள்.

போகிற வழியில், ஒரு வேடர் கூட்டத்தை சந்திக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு பெண், அருள் வந்து, கண்ணகியைப் பற்றி மிக உயர்வாக கூறுகிறாள்.

இங்கே கதையை நிறுத்துவோம்.

தன்னைப் பற்றி புகழ்ந்து பேசியதைக் கேட்ட கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும் ?

சரி என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

அல்லது

அப்படியெல்லாம் இல்லை என்று அடக்கத்தோடு மறுத்து இருக்கலாம்.

கண்ணகி இரண்டையும் செய்யவில்லை.

கோவலன் பின்னால் சென்று மறைந்து நின்று கொண்டு, புன்முறுவல் பூத்தவண்ணம் சொல்ல்கிறாள் "அந்த நிறைந்த அறிவுடைய பெண், மயக்கத்தில் என்னைப் பற்றி ஏதேதோ சொல்கிறாள் " என்கிறாள்.

அந்த இடத்தில், இளங்கோ அடிகள் ஒரு சொல்லை போடுகிறார்.

"அரும் பெறற் கணவன்" என்று கோவலனை கூறுகிறார்.

கோவலன் என்ன அவ்வளவு அருமையான கணவனா ?

கணவன் எப்படி இருந்தாலும், அவனை உயர்ந்தவனாகவே காணும் பண்பு பெண்ணுக்கு இருந்தது என்று சொல்ல வருகிறாரா ? அல்லது அப்படித்தான் இருக்க வேண்டும்  என்று சொல்ல வருகிறாரா?

பாடல்


பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று
அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப


பொருள்

பேதுறவு = பேதைமை உற்று

மொழிந்தனள் = கூறினாள்

மூதறி வாட்டியென்று = மூத்த அறிவுடைய பெண் என்று

அரும்பெறற்  = அருமையாகப் பெற்ற

கணவன் = கணவன் (கோவலன்)

பெரும்புறத் தொடுங்கி = பெரிய முதுகின் பின்னால் ஒடுங்கி

விருந்தின் = புதுமையாக , புதிதாக

மூரல் = புன்னகை

அரும்பினள் நிற்ப = அரும்பு விட நின்றாள்


விருந்து என்றால் புதுமை என்று பெயர். வீட்டுக்கு புதிதாக வந்தவர்களை விருந்தினர் என்று   சொல்வோம். அவர், ரொம்ப நாள் தங்கி விட்டால், அவர் விருந்தினர் அல்லர்.

ஆண் எப்படி இருந்தாலும், அவனை சார்ந்தே பெண் வாழ்ந்து வந்தாள் என்று காட்டுகிறார் இளங்கோ.

அது சரியா அல்லது தவறா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும்.

குடும்பத்தில் தவறு செய்பவர்களை என்ன செய்யலாம் ? குடும்பத்தை விட்டு விலக்கி விடலாமா?

சரி தவறு என்று பார்த்துக் கொண்டிருக்க குடும்பம் என்பது என்ன ஒரு நீதி மன்றமா ?

இல்லை, குடும்பத்தில் ஒருவர் தவறு செய்து கொண்டே இருப்பார், அவரை மன்னித்துக் கொண்டே தான்  இருக்க வேண்டுமா ?

என் சிறிய வாசிப்புக்குத் தெரிந்தவரை, தமிழ் இலக்கியம் மன்னிக்கத்தான்  வேண்டும் என்கிறது.

சகித்துப் போகத்தான் வேண்டும் என்கிறது.

கைகேயி போல் ஒரு மனைவி வாய்த்து விட்டால்,, சகித்துத் தான் போக வேண்டும் என்கிறது  இராமாயணம்.

மனைவியை வைத்து சூதாடி தோற்றாலும், அவனை "தர்மன்" என்றே அவன் மனைவியும் தம்பிகளும்  ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

தயரதன் நினைத்து இருந்தால், கைகேயியை தூக்கி சிறையில் வைத்து இருக்கலாம்.

இராமன் நினைத்து இருந்தால், கைகேயி கேட்ட வரம் என்னைக் கட்டுப் படுத்தாது என்று சொல்லி  கானகம் போகாமல் இருந்திருக்கலாம்.

மனைவி, தாய் எவ்வளவு கொடுமை செய்தாலும், கணவனும் மகனும் சகித்தார்கள் அங்கே.

கோவலன் எவ்வளவு தவறு செய்தாலும், சகித்தாள் கண்ணகி.

பெண் விடுதலை விரும்பிகளுக்கு இரத்தம் கொதிக்கலாம். இப்படி சொல்லி சொல்லியே  பெண்ணை அடிமை படுத்தி விட்டீர்கள் என்று.

அதற்காகத்தான் இராமாயண உதாரணத்தை சொன்னேன். பெண் தவறு செய்தால், ஆண்கள் சகித்தார்கள்.

குடும்பம் என்று இருந்தால், தவறு நிகழத்தான் செய்யும். குற்றம் குறை இருக்கத்தான் செய்யும்.

சகிக்க வேண்டும். கணவன், பரத்தை வீட்டுக்குப் போக கால் சிலம்பை கழட்டிக் கொடுக்கும் வரை  கண்ணகி சகித்தாள்.

பாடம் படிப்பதும், விவாதம் பண்ணுவதும் அவரவர் விருப்பம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_11.html

2 comments:

  1. அந்தக் காலக் கருத்தில் உடன் பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ,நயம் பட விளக்கி உள்ளீர்கள்.

    ReplyDelete
  2. விவாதம் வரப்போகிறது என்று முன்பே தெரிந்து அதற்குப் பதில் கூறிய சாமர்த்தியம் என்னே!

    குடும்பத்தினர் தவறு செய்தாலும் மன்னிக்க வேண்டும் என்பது நல்ல கருத்து. ஆனால் அதற்கு எதிர் உதாரணமும் இருக்கின்றனவே! இராவணன் செய்த தவறைப் பொறுக்க முடியாமல், விபீடணன் அவனை விட்டு விலகி எதிரியுடன் சேரவில்லையா?

    மன்னிப்பு என்ற உணர்ச்சி நம் நெஞ்சை நெகிழ வைப்பதால் இலக்கியங்களில் அதை அதிகமாகக் காணலாம். ஆனால், அளவுக்கு மீறி மன்னித்தலை "enabling" என்று மன நிபுணர்கள் கூறுவார். அது மன்னிக்கப்பட்டவர்க்கும் தவறு செய்வதாகும்.

    ReplyDelete