Pages

Thursday, August 22, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பாரித்து உரைக்கும் உரை

திருக்குறள் - சொற்குற்றம் - பாரித்து உரைக்கும் உரை 


சிலபேர் ஒண்ணும் இல்லாததை ஏதோ பெரிய விஷயம் போல விரித்து விலாவாரியாக சொல்லுவார்கள்.

முதலில், பயனில்லாத சொல்லை சொல்லவே கூடாது.  அதையும், விரித்து, பெரிதாக்கி சொல்லுவது அதனினும் கொடுமை.

இப்போது வரும் டிவி சேரியல்களைப் பார்த்தால் தெரியும்.

முதலில் அதில் ஒரு கருத்தும் இருக்காது. ஒன்றும் இல்லாத அந்த கருத்தை 300 அல்லது 400 வாரமாக இழுத்துக் கொண்டே போவார்கள். கொடுமையான விஷயம்.

செய்தித்தாள்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவன் ஒரு கெடுதல் செய்தான் என்றால் அதை விலாவாரியாக விளக்குகிறார்கள்.

ஒரு பெண்ணை சிலர் கெடுத்து விட்டார்கள் என்றால், அதை பக்கம் பக்கமாக விளக்குகிறார்கள்.

எதற்கு?

பெண்ணின் மேல் அமிலம் வீசிவிட்டார்கள், வெட்டி விட்டார்கள், யாரையோ யாரோ கொலை செய்து விட்டார்கள் என்றால் எப்படி செய்தார்கள் என்று தத்ரூபகமாக விளக்குகிறார்கள்.

இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்கிறது குறள்.

ஒருவன் பேசுவதை வைத்து ஒருவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்று அறிந்து கொள்ளலாம் என்கிறார்.

யாராவது உங்களிடம் எதையாவது பேசுகிறார்கள் என்றால் கூர்ந்து கவனியுங்கள். அது எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தரும் என்றும் அதை அவர்கள் எவ்வளவு விரிவாக சொல்கிறார்கள் என்று.

வள வள என்று சொல்லிக் கொண்டே போனால், சொல்பவர் சரி இல்லை என்று குறித்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக இந்த புரணி பேசுபவர்கள், புறம் சொல்லுபவர்கள், போட்டுக் கொடுப்பவர்கள், வஞ்சனை செய்பவர்கள், பொய் சொல்பவர்கள் போன்றவர்கள்தான்  பெரிதாக பேசிக் கொண்டே போவார்கள்.


மௌனம் , ஞான வரம்பு  என்பது தமிழ் கோட்பாடு.

சில அரசியல்வாதிகள் பேசுவதைக் கேட்டால் இது புரியும். ஒன்றும் இல்லாததை ஒரு மணி நேரம்  பேசிக் கொண்டு இருப்பார்கள். அப்படி பேசுபவர்கள்  நல்லவர்கள் இல்லை என்பதை அவர்கள் பேச்சே காட்டிக் கொடுத்துவிடும்  என்கிறார் வள்ளுவர்.


பாடல்

நயனிலன் என்பது சொல்லும் பயனில 
பாரித்து உரைக்கும் உரை


பொருள்


நயனிலன் = நயன் +  இலன். நயன் என்ற சொல்லுக்கு நீதி, நேர்மை, தர்மம், அறம் என்று பல பொருள் உள்ளது. இங்கே நல்லவன் இல்லை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

 என்பது = என்பது

சொல்லும் = நமக்கு எடுத்துச் சொல்லும். எது எடுத்துச் சொல்லும் என்றால்

பயனில = பயன் இல்லாதவற்றை

பாரித்து = விரிவாக்கி

உரைக்கும்  = சொல்லும்

உரை = பேச்சு  (எழுத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்).

எவன் ஒருவன் பயனில்லாதவற்றை விரித்துச் சொல்லுகிறானோ, அவன் ஏதோ கெடுதல் செய்யப் போகிறான்   என்று அறிந்து கொள்ளவேண்டும்.

நாமும், பயனில்லாதவற்றை பேசுவதை தவிர்ப்பது நலம். முடியாவிட்டால், சுருக்கமாக சொல்லிவிட்டு நகர்ந்து விட வேண்டும்.


அடுத்தமுறை யாராவது, அல்லது ஊடகங்கள் டிவி, whatsapp , youtube , facebook , செய்தித்தாள்கள், தேவையில்லாதவற்றை விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தால், சட்டென்று அந்த இடத்தை விட்டு விலகுங்கள்.

அது மட்டும் அல்ல, நீங்களும், பயனில்லாதவற்றை நீட்டி முழக்கி பேசாதீர்கள்.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_22.html

2 comments:

  1. யோசித்து பார்த்தால் நாம் பயனில்லாத பேச்சைத் தான் அதிகம் பேசி கொண்டிருக்கிறோம் என புரிகிறது.அரசியல்,விளையாட்டு,சினிமா,மீடியாவில் வேண்டாத அக்கப்போர் அதை விடுத்தால் மௌனம் தான் மிஞ்சுகிறது.மனதில் வஞ்சனை இல்லாமல் சள சள வென்று வாய் போனபடி பேசினால் நல்லவர் இல்லை என கொள்ளக் கூடாது. ஆனால் இது பண்பான நல்ல வழக்கம் இல்லை தான்

    ReplyDelete
  2. வேண்டாதவைகளைச் சொல்லாமல் இருந்தால், நம் மனதுக்குள்ளேயே ஒரு அமைதி பிறக்கிறது!

    ReplyDelete