அபிராமி அந்தாதி - என் புந்தி எந்நாளும் பொருந்துகவே
கால வெள்ளம் அவர்களை ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்துச் சென்றது. அவளுக்கு திருமணம் ஆகி, குழந்தை குட்டி என்று அவள் ஒரு பக்கம். வேலை, குடும்பம் என்று இவன் ஒரு பக்கம் போய் விட்டார்கள்.
எப்போதாவது தனிமையில் இருக்கும் போது அவள் நினைவு வரும். "...ஹ்ம்...அவள் எப்படி இருக்கிறாளோ" என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வான். அவள் கணவன் எப்படி இருப்பான்? அவள் குணத்துக்கு நல்ல கணவன் தான் கிடைத்திருப்பான் அவளுக்கு என்று நினைத்துக் கொள்வான்.
நினைவு வரும்போதெல்லாம், "சே ...இத்தனை நாள் எப்படி அவளை மறந்து இருந்தேன் " என்று அவனுக்குள் ஒரு சின்ன வருத்தம் வரும். என் நினைவை விட்டுப் போனது அவ தப்புத்தான் என்று அவளை செல்லமாக கோபித்துக் கொள்வான்.
"நீயும், உன் husband ம் ஒழுங்கா இனி மேல் என் நினைவில் இருக்க வேண்டும்" என்று அவளிடம் கண்டிப்பாக சொல்லிவிடுவான்....
அது ஒரு புறம் இருக்கட்டும் ....
பட்டர் சொல்லுகிறார்
"மனிதரும், தேவரும், முனிவரும் வந்து உன் சிவந்த திருவடிகளில் வணங்குகிறார்கள். சடை முடி மேல் நிலவையும், பாம்பையும், கங்கையையும் கொண்ட உன் கணவரோடு நீ என் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும் " என்று
பாடல்
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி*
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார் சடைமேல்*
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த*
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!
பொருள்
மனிதரும் = மனிதர்களும்
தேவரும் = தேவர்களும்
மாயா = இறப்பில்லாத
முனிவரும் = முனிவர்களும்
வந்து = உன்னிடம் வந்து
சென்னி = தலை
குனிதரும் = வணக்கம் செய்யும்
சேவடிக் = சிவந்த திருவடிகளை உடைய
கோமளமே! = கோமளமே
கொன்றைவார் = கொன்றை மலர் அணிந்த
சடைமேல் = சடையில்
பனிதரும் திங்களும் = பனி பொழியும் நிலவும்
பாம்பும் = பாம்பும்
பகீரதியும் = ஆகாய கங்கையும்
படைத்த = கொண்ட
புனிதரும் = புனிதரான சிவனும்
நீயும் = நீயும்
என் = என்னுடைய
புந்தி = புத்தியில்
எந்நாளும் = எப்போதும்
பொருந்துகவே! = பொருந்தி இருக்க வேண்டும்.
ஒரு பட்டியல் சொல்லும் போது, ஒரு முறை இருக்கிறது.
முதலில் சிறந்ததைச் சொல்லி, பின் சிறப்பு குறைவானதைச் சொல்ல வேண்டும்.
ஆசிரியரும், மாணவர்களும் வந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.
மாணவர்களும், ஆசிரியரும் வந்தனர் என்று சொல்லக் கூடாது.
ஆசிரியர் உயர்ந்தவர்.
ஒரு மேடையில் வணக்கம் சொல்லும் போது , முதலில் தலைவர், பின் செயலாளர், பொருளாளர், பின் ஏனையோர் என்று ஒரு வரிசை வைத்துச் சொல்ல வேண்டும்.
முதலில் மைக் போட்டவரே , சீரியல் லைட் போட்டவரே , விழாவுக்கு வந்திருக்கும் சிறுவர் சிறுமிகளே , தலைவர் அவர்களே என்று சொல்லக் கூடாது.
இங்கே பட்டர்,
மனிதரும், தேவரும், மாயா முனிவரும் என்று சொல்லுகிறார்.
மனிதர்களுக்கு என்ன அவ்வளவு சிறப்பு?
தேவர்களும், முனிவர்களும் இறைவனை வழிபடுவதையே தொழிலாக கொண்டவர்கள்.
மனிதர்களுக்கு ஆயிரம் வேலைகள். அதற்கு நடுவில் வழிபாடும் செய்கிறார்கள் என்றால் அது சிறப்புத்தானே என்று அவர் நினைத்து இருக்கலாம்.
அபிராமியுடன் ஒரு அன்னியோன்னியம்...."நீ வந்துரு" என்று
.அவளுடய கணவரை பற்றி பேசும்போது "புனிதரும்" என்று அவருக்கு மட்டும் மரியாதை சேர்த்துக் கொள்கிறார்.
"நீ வந்துரு. வரும் போது அவரையும் கூட்டிகிட்டு வா" என்று சொல்லுவது போல.
பட்டர் இப்படி எல்லாம் நினைத்தாரா என்றால்...பாட்டில் கரைந்து பாருங்கள்...புரியும்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_73.html
இந்தப் பாடலை ஏதோ இளமைக்காலத்துக் காதலனும் காதலியும் போல எண்ணிப் பார்ப்பது சுவாரசியமான கற்பனைதான். ஆனாலும் ஏதோ வலிந்து கற்பனையை இந்தப் பாடலின்மேல் புகுத்துவது போல இருக்கிறது. அந்தக் கற்பனை இல்லாமல், சாதாரணமாகப் பாடலைப் படித்தாலே சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
ReplyDelete