திருக்குறள் - பொன் போல் பொதிந்து
நமக்கு தீமை செய்தவரை நாம் பொறுத்துக் கொண்டே இருந்தால், உலகம் நம்மை பற்றி என்ன நினைக்கும் என்று வள்ளுவரைக் கேட்டேன். நம்மை இளிச்ச வாயன், ஏமாந்த சோணகிரி, கையாலாகாதவன் என்றல்லவா நகையாடும் என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார்,
"அப்படி அல்ல. ஒருவன் உனக்கு தீங்கு செய்தால், பதிலுக்கு அவனுக்கு நீ தீங்கு செய்தால், சான்றோர் உன்னை ஒரு நிறை மனிதனாக நினைக்க மாட்டார்கள். மாறாக, உனக்கு தீங்கு செய்தவனை நீ மன்னித்தால்,உன்னை பொன்னைப் போல போற்றி பாதுகாப்பார்கள்"
பாடல்
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து
பொருள்
ஒறுத்தாரை = தனக்கு தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களை
ஒன்றாக = சிறப்பாக
வையாரே = (ஆன்றோர்) வைக்க மாட்டார்கள்
வைப்பர் = வைப்பார்கள்
பொறுத்தாரைப் = பொறுத்துக் கொண்டவரை
பொன்போல் = பொன்னைப் போல
பொதிந்து = பாதுகாத்து
இப்படியே நமக்கு தீங்கு செய்பவர்களை எல்லாம் பொறுத்துக் கொண்டே போனால், நாம் அழிந்து போக மாட்டோமா என்பதற்கு மிக நுணுக்கமாக விடை தருகிறார் வள்ளுவப் பேராசான்.
நம்மிடம் தங்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் எப்படி பாதுகாப்போம்? வங்கியில் உள்ள பெட்டகத்தில் வைப்போம். வீட்டில் ல், கனமான பீரோவில் வைத்து பூட்டுவோம். அதற்கு ஒன்றுக்கு நாலு பூட்டு போடுவோம் . அதை நாம் எப்படி பாதுகாப்போமோ, அது போல உலகம் பொறுமை உள்ளவனை பாதுகாக்கும் என்கிறார்.
"பொன் போல பொதிந்து"
பொன்னை எப்படி பொதிந்து பாதுகாப்பார்களோ அப்படி பொறுமை உள்ளவனை உலகம் காக்கும் என்பது ஒரு பொருள்.
இரண்டாவது, பொன்னை நாம் எப்போதாவது காக்காமல் விடுவோமா? இத்தனை காலம் பாது காத்தது போதும். இனி தூக்கில் தெருவில் போட்டு விடுவோம் என்று நினைப்போமா? ஒரு காலும் நினைக்க மாட்டோம் அல்லவா? அது போல, பொறுமை உள்ளவர்களை உலகம் ஒரு போதும் கை விடாது.
மூன்றாவது, பொன் இருக்கிறதே, அது எப்போது சிறப்பு பெறுகிறது? நெருப்பில் சுட்டு, உருக்கி, சுத்தியால் அடித்து, நல்ல ஆபரணம் செய்த பின் அந்த பொன்னுக்கு மதிப்பும் சிறப்பும் கூடுகிறது. அது போல, மனிதன் தனக்கு ஏற்படும் துன்பங்களையும், தாழ்வுகளையும் பொறுத்துக் கொண்டால், பொன் போல் மதிப்பும் சிறப்பும் பெறுவான். பொன் அந்த வலிகளை பொறுத்துக் கொண்டதால் மின்னுமாப் போல்.
நான்காவது, பொன்னை வெறுப்பார் யாரும் இல்லை. தீயவர்கள் கூட பொன்னை போற்றுவார்கள். அது போல, பொறுமை உள்ளவர்களை உலகில் எல்லோரும் போற்றுவார்கள். தீமை செய்தவர்கள் கூட, ஒரு கால கட்டத்தில், "இவன் மிக நல்ல மனிதன். இவனுக்குப் போய் நாம் தீங்கு செய்தோமே" என்று நினைத்து வருந்தி அவனைப் போற்றுவார்கள்.
"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே"
ஒருவன் தீங்கு செய்கிறான். நாம் அவனுக்கு பதிலுக்கு தீங்கு செய்கிறோம். நமக்கும் அவனுக்கும் தீங்கு செய்வதில் என்ன வித்தியாசம்? அவன் முதலில் செய்தான். நாம் இரண்டாவது செய்தோம் என்ற வித்தியாசம் தவிர, வேறு எல்லாம் ஒன்று தான். எனவே தான், இவனுக்கும் அவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இரண்டும் ஒன்று தான். "ஒன்றாக" என்றால் தனியாக, சிறப்பாக என்று அர்த்தம்.
விஸ்வாமித்ரன், தசரதனிடம்
"கரிய செம்மல் ஒருவனைத் தருதி" என்றார்.
இரண்டு பேர் கரிய நிற பிள்ளைகள். இராமனும், பரதனும். யாரைச் சொல்கிறார் விஸ்வாமித்ரர்? ஒருவனை என்றால் சிறந்தவனை என்று அர்த்தம். இராமன் தான் சிறந்தவன்.
"ஒரு திரு முருகன் வந்தான்" என்பார் கச்சியப்பர். இங்கே ஒரு என்றால் சிறந்த, தனித்துவம் வாய்ந்த என்று அர்த்தம்.
ஒறுத்தாரை சிறப்பாக கருத மாட்டார்கள் சான்றோர். எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைதான் என்று நினைத்துக் கொள்வார்கள்.
பொறுமையின் பலன் புரிகிறது அல்லவா?
https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_54.html
அருமையாக உள்ளது.
ReplyDeleteமிகவும் சிறப்பு பாராட்டுகள்
ReplyDelete