கம்ப இராமாயாணம் - அங்கி புக்கிடு
அசோகவனத்தில் இருந்து வந்த சீதையை இராமன் சந்தேகக் கண் கொண்டு பார்த்தான். அவள் மேல் சுடு சொற்களை வீசினான். அது பொறுக்க மாட்டாமல், சீதை தீயில் இறங்கி தன் கற்பை நிரூபித்தாள் என்று பார்த்தோம்.
கேள்வி என்ன என்றால் தீயில் இருந்து வந்த பின் சீதை என்ன சொன்னாள் ? என்பதுதான்.
அங்கு வந்த சிவன், சொர்க்கத்தில் இருந்து தயயரதனை வரவழைக்கிறான் .
சீதை, தயரதனின் கால்களில் விழுந்து ஆசி பெறுகிறாள்.
அப்போது தயரதன் சொல்லுவான்
" சீதையே, மற்றபடி உன் கற்பினை உலகுக்கு காட்டவே உன்னை தீயில் இறங்கிடு என்று இராமன் உணர்த்தினான். அதை நீ மனதில் வைத்துக் கொள்ளாதே. சந்தேகம் கொண்டவர்கள், இது போலச் செய்யச் சொல்லி நிரூபனங்களை பெறுவது உண்டு. அது உலக இயற்கை. உன் கணவன் மேல் கொள்ளாதே "
இது தயரதன் கூற்று.
பாடல்
''நங்கை! மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட,
அங்கி புக்கிடு'' என்று உணர்த்திய அது மனத்து அடையேல்;
சங்கை உற்றவர் பெறுவதும் உண்டு; அது சரதம்;
கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல்.
பொருள்
''நங்கை! = பெண்ணே
மற்று = மற்றபடி
நின் கற்பினை = உனது கற்பை
உலகுக்கு நாட்ட, = உலகுக்கு நிலை நிறுத்தவே
அங்கி புக்கிடு' ' = தீயில் புகுந்திடு
என்று உணர்த்திய அது = என்று உணர்த்தியது
மனத்து அடையேல்; = அதை மனதில் வைத்துக் கொள்ளாதே
சங்கை = சந்தேகம்
உற்றவர் = கொண்டவர்கள்
பெறுவதும் உண்டு = இது போல நிரூபணங்களை கேட்டுப் பெறுவது உண்டு
; அது சரதம்; = அது உலக இயற்கை
கங்கை நாடுடைக் கணவனை = கங்கை நாட்டின் கணவனை
முனிவுறக் கருதேல். = கோபம் கொள்ளாதே
இந்தப் பாடலில் சில முக்கிய குறிப்புகளை நாம் கவனிக்க வேண்டும்.
முதலாவது, பெரும்பாலான இராம பக்தர்கள் கூறுவது என்ன என்றால் " இராமன் கோபித்து பேசினான். ஆனால், அவன் சீதையை தீயில் இறங்கச் சொல்லவில்லை. முன்னர் இலக்குவன் மேல் சந்தேகம் கொண்டதால், அதற்கு பரிகாரமாக, சீதையே இலக்குவனை தீ வளர்க்கச் சொல்லி, அதில் இறங்கினாள் "
இது, பழியை சீதை மேல் போடும் உபாயம். இராமனை காப்பாற்ற வேண்டி, சீதையை காவு கொடுத்து விடுகிறார்கள்.
தயரதன் அதை மறுக்கிறான். சீதையை தீயில் இறங்க உணர்த்தியது இராமன் தான் என்று தெளிவாகச் சொல்லுகிறான்.
இரண்டாவது, இராமனுக்கு சீதை மேல் சந்தேகம் இல்லை , உலகுக்கு அவள் கற்பை நிலை நாட்டவே, அப்படிச் செய்தான் என்று தயரதன் , இராமனின் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறான்.
அது சரி என்று வைத்துக் கொள்வோம். நாளை ஒவ்வொரு பக்தர்களும், அப்படிச் செய்ய தொடங்கி விட்டால்?
ஒவ்வொரு கணவனும், தங்கள் மனைவியை ஊர் அறிய தீயில் இறங்கி அவர்கள் கற்பை நிலை நாட்டச் சொன்னால் , அது ஏற்றுக்க்கொள்ளக் கூடியதா? எத்தனை பெண்கள், தீயில் இறங்க சம்மதிப்பார்கள் ?\\\\
மூன்றாவது, உலகுக்கு கற்பை நிலை நாட்டவே இந்த தீக்குளிப்பு நாடகம் என்று சொன்ன தயரதன், அடுத்த வரியிலேயே அதை மாற்றுகிறான். "சந்தேகம் கொண்டவர்கள், இப்படி நிரூபணம் கேட்பது உலக இயற்கை" என்று இராமனின் செயலை மேலும் நியாயப் படுத்த முயலுகிறான். இராமனுக்கு , சீதை மேல் சந்தேகம், என்று தெள்ளத் தெளிவாக கூறி விடுகிறான்.
நான்காவது, அப்படி எல்லாம், இராமனுக்கு சந்தேகம் எல்லாம் இல்லை என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு, தயரதன் கடைசியாக ஒரு அடி அடிக்கிறான். "நீ இதை மனதில் வைத்துக் கொள்ளாதே. அவன் மேல் கோபப் படாதே" என்று.
தயாரதனுக்குத் தெரிகிறது. சீதை இதை ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்று. எனவே, அவளிடம் வேண்டுகிறான் "கண்டுக்காதே, கோவிச்சுக்காதே" என்று.
செய்றதையும் செய்திட்டு...
இப்போதாவது சீதை பேசினாளா என்றால், இல்லை.
இப்பவும் பேசவில்லை.
சரி என்றும் சொல்லவில்லை. மாட்டேன் என்றும் சொல்லவில்லை.
என்னடா இது...இவ எப்பதான் பேசுவாள். என்னதான் சொல்லினாள் ?
உங்களைப் போலவே நானும் ஆவலாய் இருக்கிறேன் தெரிந்து கொள்ள....
மேலும் காவியத்தை தேடுவோம். எப்போதாவது பேசி இருக்க வேண்டுமே?
கடைசி வரை பேசாமலேயா இருந்து விடுவாள்?
பட்டாபிஷேகம் வரை போயாவது இதை கண்டு பிடிக்காமல் விடுவது இல்லை.
வாருங்கள், தேடுவோம்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_6.html
ராமன் மனதில் சீதையை சந்தேகித்ததாக சொல்லும் கம்பராமாணப் பாடலோ வால்மீகி ராமயண வரிகளோ உண்டா ?
ReplyDelete