சகலகலாவல்லி மாலை - சொல்லும், பொருளும், பயனும்
கடந்த சில நாட்களாக பயனில் சொல்லாமை அதிகாரத்தில் உள்ள குறள்களை பற்றி சிந்தித்தோம்.
சொல்லுக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம். சும்மா பேசிவிட்டுப் போக வேண்டியதுதானே என்று நாம் நினைக்கலாம். ஆனால், சொல்லின் பெருமை தெரியாமல் நாம் அதை விரயப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
சிறு பிள்ளைக்கு வைரக் கல்லுக்கும், கூழாங்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாதது போல.
சொல் என்பது பல பரிமாணங்களை கொண்டது.
முதல் பரிமாணம், அதன் வரி வடிவம். ஒரு சொல் இந்த வடிவில் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. சொல்லின் வரி வடிவம் மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் இருந்த தமிழின் வரி வடிவம் வேறு, இப்போது இருக்கும் தமிழின் வரி வடிவம் வேறு.
இப்போது வள்ளுவர் வந்தால், அவரால் நமது திருக்குறளை வாசிக்க முடியாது. வரி வடிவம் மாறி விட்டது.
அடுத்த பரிமாணம், அதன் ஒலி வடிவம். ஓசை வடிவம். ஒரு சொல்லை சொல்லும்போது உண்டாகும் ஓசை. தமிழைப் பொறுத்தவரை அது நிறைய மாறவில்லை.
மூன்றாவது பரிமாணம், அந்த ஒலி குறிப்பிடும் பொருள். ஒவ்வொரு சொல்லும் ஏதோ ஒரு பொருள் பற்றியே பிறக்கிறது.
நான்காவது பரிமாணம், அந்த ஒலியின் உணர்ச்சி வடிவம்.
உதாரணமாக, "அம்மா" என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.
அதன் வரி வடிவம், நாம் எழுதுவது.
அதன் ஒலி வடிவம், அது எழுப்பும் சப்தம்.
அதன் பொருள் வடிவம், அம்மா என்ற அந்தப் பெண்.
நான்காவதாக, அம்மா என்று சொல்லும் போது ஏற்படும் உணர்ச்சி.
ஒலி வந்து விட்டால், வரி வடிவத்தை விட்டு விடலாம்.
பொருள் வந்து விட்டால், ஒலியை விட்டு விடலாம்.
உணர்வு வந்துவிட்டால், பொருளை விட்டுவிடலாம்.
நாம் சொல்லும் சொற்கள் பொருள் உணர்த்தி நிற்கின்றன. உணர்வுகளை கொண்டு வரலாம்.
ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய், சொன்னால் சொன்ன படி நடக்கும் சக்தி சொல்லுக்கு உண்டு.
மந்திரம் என்பது என்ன?
மனதில் நினைப்பதை ஸ்திரமாக நமக்குத் தருவது மந்திரம்.
மந்திரங்களுக்கு அந்த வலிமை உண்டு.
உயர்ந்தவர்கள், சான்றோர்கள், கற்புடைய பெண்களுக்கு அந்த ஆற்றல் உண்டு.
நளாயினி, "சூரியனே உதிக்காதே" என்றாள். உதிக்கின்ற சூரியன் நின்றது என்று வரலாறு சொல்கிறது.
கம்ப இராமாயணத்தில், சீதை கூறுவாள், "இந்த உலகம் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுடுவேன்" என்று.
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ
எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என்
சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன் என்றாள்
சொல்லுக்கு அவ்வளவு வலிமை. சொல்லினால் இல்லை இல்லாத இந்த உலகம் அனைத்தையும் சுட்டு பொசுக்கி விடுவேன் என்கிறாள்.
விவிலியம் (பைபிள்) சொல்கிறது
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; (யோவான் 1:1-18)
என்று.
முதலில் வார்த்தை இருந்தது. அதில் இருந்துதான் அனைத்தும் உண்டானது என்கிறது.
ஓம்
நாராயணாய நம
நமச்சிவாய நம
என்று மந்திரங்களை உச்சாடனம் செய்து பலன் பெற்றவர்கள் பலர்.
சகலகலாவல்லி மாலையில் , குமர குருபரர் சொல்லுவார்
"பாட்டும், பொருளும், அது பொருந்தும் பயனும் எனக்கு வரும்படி உன் கடைக்கண்ணால் அருள் செய்வாய் " என்று.
பாடல்
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும்
பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டு
தொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்
வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகலகலா
வல்லியே.
பொருள்
பாட்டும் = பாட்டு (ஒலி வடிவம்)
பொருளும் = பொருளும்
பொருளாற் = அந்தப் பொருளுக்கு
பொருந்தும் = பொருத்தமாய் இருக்கும்
பயனுமென்பாற் = பயனும் என் பால்
கூட்டும் படி = சேரும்படி
நின் கடைக்கணல் = உன்னுடைய கடைக் கண்ணால்
காயுளங் கொண்டு = தாய் உள்ளம் கொண்டு
தொண்டர் = தொண்டர்கள்
தீட்டுங் = இயற்றும்
கலைத் = கலை நிறைந்த
தமிழ்த் = தமிழ்
தீம்பா லமுதந் தெளிக்கும் = சுவையான பால் அமுதம் தெளிக்கும்
வண்ணம் =படி
காட்டும் = காட்டுகின்ற
வெள் ளோதிமப் பேடே = வெள்ளை நிறத்தில் உள்ள அன்னம் போன்றவளே
சகலகலா வல்லியே. = சகலகலா வல்லியே
பயன் தரும் சொல்லை சொல்ல எனக்கு அருள் புரிவாய் என்கிறார்.
இறைவன் நாத வடிவானவன் என்று நம் இலக்கியம் பேசும்.
இது பற்றி மேலும் சிந்திப்போமா ?
https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_92.html
No comments:
Post a Comment