அபிராமி அந்தாதி - உள்ளத்தே விளைந்த கள்ளே
உணர்ச்சி வருவதற்கு காரணம் சொல்லலாம். ஆனால், ஒரு உணர்ச்சி எப்படி இருக்கிறது என்று விளக்கிச் சொல்ல முடியாது.
காதல் வந்தால், அதற்கு காரணம் சொல்ல முடியும். காதல் என்ற அந்த உணர்வு எப்படி இருக்கிறது என்று எப்படி விளக்கிச் சொல்வது?
இறை அனுபவம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்று கேட்டால் எப்படி அதை விளக்கிச் சொல்வது என்று தவிக்கிறார் பட்டர்.
எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது. நான் அதை அனுபவிக்கிறேன். ஆனால், அது எப்படி இருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது ?
ஒரு கள் குடித்து இருக்கிறான். போதையில் தடுமாறுகிறான். உளறுகிறான். ஆடுகிறான். தன்னை மறந்து நடந்து கொள்கிறான். அக்கம் பக்கம் இருப்பவர்களை பற்றி ஒரு கவலையும் இல்லை. தான் யார், சமுதாயத்தில் தன் நிலை என்ன, ஒரு தகப்பன், கணவன், பிள்ளை, சகோதரன், ஒரு அலுவலகத்தில் ஒரு பொறுப்புள்ள வேலையில் இருப்பவன் என்பதெல்லாம் மறந்து விடுகிறது. போதையில் இலயித்துக் கிடக்கிறான்.
அது போன்றது பக்தி என்கிறார் பட்டர்.
கள் தான். ஆனால் வெளியே வாங்கி வந்து அடித்த சரக்கு அல்ல. உள்ளுக்குள்ளேயே உருவான கள் என்கிறார். உள்ளத்தே விளைந்த கள்ளே என்கிறார்
வெளியில் வாங்கி வந்தால், ஏதோ ஒரு பாட்டில், இரண்டு பாட்டில் வாங்கி வரலாம். போதை தலைக்கு ஏறிவிட்டால் எப்போது வேண்டுமானாலும் குடிப்பதை நிறுத்தி விடலாம். இதுவோ உள்ளே விளைந்த கள். எப்படி நிறுத்துவது? அது பாட்டுக்கு ஊற்று எடுத்துக் கொண்டே இருக்கிறது.
வேறு வழியில்லை. போதையில் தன் நிலை தடுமாற வேண்டியதுதான்.
அபிராமியைப் பார்க்கிறார்.
அவள் யார்? தாயா? தாரமா? சகோதரியா? நண்பியா? காதலியா ? ஒன்றும் புரியவில்லை.
என்னை காப்பாற்று என்று பக்தனாக வேண்டுகிறார்.
உன் மார்பகங்கள் அப்படி இருக்கிறது , இப்படி இருக்கிறது என்று குழந்தையாக அவள் மடியில் கிடக்கிறார்.
உன்னுடைய மற்ற அவயங்கள் இப்படி இருக்கின்றன என்று வர்ணிக்கிறார். இப்படி செய்யலாமா? இது சரியா ? இதுவா பக்தியா, பட்டர் போன்றவர்கள் இப்படி சொல்லலாமா ? ஒரு பெண்ணின் அந்தரங்க அவயங்களை பற்றி பேசுவது நாகரீகமா என்று கேட்டால் கள் குடித்தவனுக்கு என்ன தெரியும்?
ஆண்டாளும் அப்படித்தான். பக்தி என்ற போதை. கள்.
பாடல்
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே
பொருள்
கொள்ளேன் மனத்தில் = என மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன்
நின் கோலம் அல்லாது = உன் உருவத்தை அன்றி மற்ற எதையும்
அன்பர் கூட்டம் தன்னை = உன்னுடைய அன்பர்கள் கூட்டம்
விள்ளேன் = விட மாட்டேன்
பரசமயம் விரும்பேன் = மற்ற சமயங்களை விரும்ப மாட்டேன்
வியன் = வியக்கத்தக்க
மூவுலகுக்கு = மூன்று உலகங்களுக்கு
உள்ளே =உள்ளே
அனைத்தினுக்கும் புறம்பே = எல்லாவற்றிற்கும் வெளியே
உள்ளத்தே = மனதினில்
விளைந்த = தோன்றிய
கள்ளே = கள்ளே
களிக்கும் களியே = அனுபவிக்கும் இன்பமே
அளிய என் கண்மணியே = அதைத் தரும் என் கண்ணின் மணி போன்றவளே
"அனைத்தினுக்கும் புறம்பே"...எல்லாவற்றிற்கும் வெளியே. ஏதோ ஒன்று இருக்கிறது என்றால் அது ஏதோ ஒன்றினுக்கு உள்ளேதான் இருக்க வேண்டும். அனைத்துக்கும் வெளியே என்றால் அது எங்கே?
பக்தியின் உச்சம். அவருக்குத் தெரிகிறது. சொல்ல முடியவில்லை.
https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_21.html
அபிராமி பட்டர் பரம்பரையில் வந்த ஒருவர், அறுவடையின் பொழுது வந்து நெல் வாங்கிக்கொண்டு செல்வாராம். அவர்களுக்கு நெல் கொடுக்க வேண்டுமென்பது முறை என்று எங்கள் ஊர் பெரியவர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ எங்கள் ஊர்.
ReplyDelete“தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே”
அப்படி உள்ளே ஊறும் பக்தியென்கிற கள்ளை அனுபவித்தால்தான் புரிந்து கொள்ள முடியும் போல.
ReplyDeleteஅபிராமி அந்தாதியில் இருக்கும் ஒரு அன்னியோன்னியம் வேறு எங்கும் இல்லை என்று சொல்லலாம். அந்த அந்நியோன்னிய உணர்வில் எழுதிய கவிதைகளுக்கு வரம்பு ஏது? அபிராமியின் உடல் பற்றி எழுதலாமா என்ற கேள்விக்கு இந்த வரம்பின்மையே விடையாகும்.
ReplyDelete