திருவாசகம் - இமைப்பொழுதும்
திருவாசகத்தை மற்றவர்களும் எளிதில் புரிந்து கொண்டு, அவர்கள் திருவாசகத்தின் மேல் ஆர்வம் கொண்டு மேலும் படிக்க வழி கோல முன்பு திருவாசகம் பற்றி சில பிளாகுகள் எழுதி இருந்தேன்.
மீண்டும் மீண்டும் படிக்கும் போது, முன்பு எழுதியது எவ்வளவு ஒரு புரிதல் இல்லாமல் எழுதி இருக்கிறேன் என்று கூச்சம் வருகிறது. அவற்றை எல்லாம் நீக்கி விடலாமா என்றும் தோன்றுகிறது.
திருவாசகத்தின் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு சொல்லும் அவ்வளவு பொருள் ஆழம் நிறைந்ததாக இருக்கிறது. வாசிக்க வாசிக்க அதன் எல்லைகள் விரிந்து கொண்டே போகிறது.
நீங்களே அதை படித்து நேரடியாக உணர்வதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
திருவாசகத்தில், முதலில் வருவது சிவபுராணம்.
அதில் முதல் பத்தி, கீழே உள்ள ஐந்து வரிகள்.
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க
அதில் இரண்டாவது வரி
"இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க"
இமைப் பொழுது கூட என் மனதை விட்டு நீங்காதான் திருவடிகள் வாழ்க என்பது நேரடிப் பொருள்.
இதில் என்ன பெரிய ஆழம் இருந்து விடப் போகிறது என்று தான் நினைத்தேன்.
அது எப்படி ஒரு இமைப் பொழுது கூட நீங்காமல் இருக்க முடியும்? மற்ற வேலைகள் இருக்காதா? சாப்பிடுவது, தூங்குவது, குளிப்பது, வேலைக்குப் போவது, மனைவி/கணவன் உறவு, பிள்ளைகளோடு நேரம் செலவிட வேண்டும்....இது எல்லாம் இருக்கும் போது எப்படி இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் என்று மணிவாசகர் சொல்ல முடியும்.
மணி வாசகருக்கே கூட இது சாத்தியமா? அவரும் மனிதர் தானே. அவருக்கும் பசி, தாகம், தூக்கம் என்பதெல்லாம் இருக்கும் தானே?
அது ஒரு புறம் இருக்கட்டும்.
நீங்கள் கார் ஓட்டும் பழக்கம் உண்டா? கார் இல்லாவிட்டால், ஸ்கூட்டர், மிதிவண்டி என்று ஏதாவது ஓட்டிய அனுபவம் இருக்கும் தானே?
முதலில் எந்த வண்டியை ஓட்ட ஆரம்பித்தாலும், மனம் , மூளை, உடல் அனைத்தும் அந்த ஓட்டுகின்ற செயலிலேயே ஒரு புள்ளியில் நிற்கும். கவண் அங்கு இங்கு சிதறாது.
Accelerator ஐ அமுக்க வேண்டும், steering ஐ சரியாக பிடிக்க வேண்டும், கிளட்ச் போட வேண்டும், கியர் ஐ மாற்ற வேண்டும், இண்டிகேட்டர் போட வேண்டும், ஹார்ன் அடிக்க வேண்டும், தேவையான சமயத்தில் பிரேக் போட வேண்டும்...இப்படி அத்தனை வேலையும் செய்ய வேண்டி இருக்கிறது.
அதுவே நாளடைவில், நம்மை அறியாமலேயே இவற்றை நாம் செய்வோம்.
வண்டி ஓட்டிக் கொண்டே, செல் போனில் பேசுவோம், CD மாத்துவோம், நீர் குடிப்போம், பாட்டு நல்லா இல்லை என்றால் அடுத்த பாட்டுக்கு செல்லுவோம், கூட வரும் நபர்களோடு பேசிச் சிரிப்போம். இதற்கு இடையில் யாராவது நெருங்கி வந்தால் ஹார்ன் அடிப்போம். சிக்னல் மாறினால் வண்டியை நிறுத்துவோம்.
எப்படி முடிகிறது. ஒரு நொடி கூட வண்டியை செலுத்துகிறோம் என்று அறியாமலேயே வண்டியை செலுத்துகிறோம்.
எந்த வண்டியையும் ஓட்டாதவர்கள் கூட வேறு விடயத்தில் இது பற்றி சிந்திக்கலாம்.
சமையல் செய்து கொண்டே போனில் பேசுவார்கள் சிலர். டிவி பார்த்துக் கொண்டே காய் நறுக்குவார்கள்.
எப்படி முடிகிறது?
முன்ன பின்ன பழக்கம் இல்லாதவர்கள் கையில் கொடுத்தால், டிவி பார்த்துக் கொண்டே கையை நறுக்கிக் கொள்வார்கள். இரத்தம் வரும்.
இது எப்படி சாத்தியமாகிறது?
பழக்கம்.
மீண்டும் மீண்டும் செய்தால் பழகி விடும். அப்புறம், நம்மை அறியாமலேயே நாம் அவற்றை செய்ய முடியும்.
இறைவன் மேல் அன்பு, பக்தி, காதல் என்பதை பழக்கப் படுத்தி விட்டால், மற்ற வேலைகள் செய்து கொண்டே இருந்தாலும், அந்த பக்தி பாட்டுக்கு நடந்து கொண்டே இருக்கும்.
மனைவியுடன் இருக்கும் போதும், பிள்ளைகளோடு விளையாடும் போதும், சமையல் செய்யும் போதும், அலுவலகத்தில் வேலை செய்யும் போதும் பக்தி பாட்டுக்கு நடந்து கொண்டே இருக்கும்.
பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவது போல.
ஒளவையார் ஒரு படி மேலே போகிறார்....
கனவிலும் அந்த பழக்கம் தொடரும் என்கிறார். அது எந்தப் பாடல் என்று தேடி கண்டு பிடியுங்கள்.
"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க "
புரிகிறதா?
இப்படி ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும், வாழ்கை அனுபவத்தின் தொகுப்பு இருக்கும் என்றால், என்று நாம் இதை எல்லாம் அறிந்து கொள்வது?
மலைப்பாக இருக்கிறது.
https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_5.html
பொருத்தமான உதாரணத்துடன் இமைப்பொழுதின் உள்ளர்த்ததை நன்றாக விளக்கி உள்ளீரகள்.உங்கள் உதவி இல்லாமல் இவ்வளவு புரியாது.அது திண்ணம்.
ReplyDeleteஅருமையான உதாரணம்,நமது பக்திக்கு ஏற்ப , கடவுள் நமக்கு உள்இருந்து விளக்குவார் எனக் கருதுகிறேன்.
ReplyDeleteசங்கீதத்துக்குப் பின்னால் எப்போதும் சுருதி இருப்பது போல...
ReplyDelete