Pages

Monday, October 7, 2019

அபிராமி அந்தாதி - அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை

அபிராமி அந்தாதி - அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை


ஒரு குழந்தை இந்த உலகத்தில் வந்தபின் பெறும் முதல் சுகம், தாயின் மார்பில் இருந்து பாலை சுவைப்பதுதான். அது பசியை தணிப்பது மட்டும் அல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை தருவது மட்டும் அல்ல, அன்பை, காதலை , பாசத்தையும் தருகிறது. தாயின் பாலை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொடுத்தால் பிள்ளை அவ்வளவு நன்றாக வளராது. பால் தரும் போது அந்தத் தாயின் அரவணைப்பு வேண்டும். அவள் உடல் சூடு வேண்டும்.

ஆண்கள் கொஞ்சம் வேகம் கொண்டவர்கள். உணர்ச்சி வேகம், உடல் தரும் வேகம் இவற்றால் எதையாவது செய்து விடுவார்கள். பின்னால், அப்படி செய்து இருக்கக் கூடாதோ, அப்படி சொல்லி இருக்கக் கூடாதோ  என்று யோசிப்பார்கள். என்ன செய்வது. செய்தாகி விட்டது. சொல்லியாகி விட்டது. அதன் வேண்டாத விளைவுகளை சரிப்படுத்த வேண்டும். அங்குதான் பெண் வருகிறாள். தன்னுடைய சாமர்த்தியத்தால் ஆணுக்கு வரும் துன்பங்களை நீக்குகிறாள்.

ஆணின் வேகமும் வேண்டும். பெண்ணின் நிதானமும் வேண்டும்.

பாடல்


பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.


பொருள்

பொருந்திய = பொருத்தமான

முப்புரை = மூன்று சொல்லப்படக் கூடிய உரை. படைத்தல், காத்தல், மறைத்தல் என்ற செயல்கள்

செப்பு  = செப்பு கலசம் போல

உரை  செய்யும்  = சொல்லக் கூடிய

புணர் முலையாள் = ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்கும் தனங்களை உடையவள்

வருந்திய = அதனால், அந்த பாரத்தால் வருந்தும்

வஞ்சி = வஞ்சிக் கொடி போன்ற

மருங்குல் = இடை, இடுப்பு

மனோன்மணி = மனோன்மணியைப் போன்ற சிறந்தவள்

வார் சடையோன் = சடை முடி நிறைந்த சிவன்

அருந்திய = குடித்த

நஞ்சு = ஆலகால விஷத்தை

அமுது ஆக்கிய = அமுது ஆக்கிய

அம்பிகை = அம்பிகை, அபிராமி

அம்புயமேல் = தாமரை மலரின் மேல்

திருந்திய சுந்தரி = அமர்ந்து இருக்கும் சுந்தரி

அந்தரி = அந்தரத்தில் இருப்பவள்

பாதம் = பாதம்

என் சென்னியதே. = எங்கு இருக்கிறது என்றால் என் தலை மேல்

நஞ்சை அமுதம் ஆக்கியவள்.

நமக்கு வரும் பெரிய பெரிய துன்பங்களை நீக்குவது மட்டும் அல்ல, அவற்றையே இன்பமாக  மாற்றித் தருபவள்.

நாம் செய்த வினை காரணமாக துன்பம் வந்து சேரும். அதில் இருந்து தப்ப முடியாது.  ஆனால், அபிராமி அந்த துன்பங்களை இன்பங்களாக மாற்றி விடுவாள்.

ஆலகால விஷத்தை அமுதமாக மாற்றியவளுக்கு நம் துன்பங்கள் எம்மாத்திரம்.

என்னடா இது ஒரு பக்தனாக இருந்து கொண்டு, கடவுளின் மார்பகங்களை இப்படி கொஞ்சம் கூட  கூச்சம் இல்லமால் பேசுகிறாரே என்று சிலர் நினைக்கலாம்.

ஒரு தாயின் மார்பகத்தை ஒரு குழந்தை பார்க்கும் பார்வை வேறு, கணவனோ மற்றவர்களோ  பார்க்கும் பார்வை வேறு.

பட்டர் குழந்தையாகி விடுகிறார். கொஞ்சம் கூட  விகல்பம் இல்லை. கூச்சம் இல்லை.

அபிராமி அந்தாதி புரிய வேண்டும் என்றால், பட்டரின் மனநிலைக்கு போய் விட வேண்டும். ஒரு குழந்தையின் மன நிலையில் இருந்தால்தான் அது புரியும்.

சொல்லுக்கு பொருள் தேடும் கவிதை விளையாட்டு அல்ல இது.

சொல்லைக் கடந்து, காதலில் கரையும் இரசவாதம் இது.

அந்த சித்தி உங்களுக்கும் வாய்க்கட்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_9.html

6 comments:

  1. தயவு செய்து தவறாய் நினைக்கவேண்டாம். வாதம் செய்ய இல்லை, நீண்ட நாள் சந்தேகத்தை கேட்கிறேன். அபிராமி அந்தாதியில் தனங்களைப் பற்றிய வர்ணனை காம நோக்கிலும் இருக்கிறது. தனங்களின் அழகை இடங்கொண்டு விம்மி என்கிற பாடலில் வர்ணிக்கும்பொது “மோகத்தால் நாயகரின் வலிய நெஞ்சை நடங்கொண்ட” என்கிறார் பட்டர். மேலும் பாம்பைப் போன்ற அல்குல் ( நலரவின் படம் கொண்ட அலகுல்) என்கிறார். ஆண்டாள் பாசுரங்களிலும் “புற்றரவன்ன அல்குல்” என்ரு வருகிறது. இதை எப்படி புரிந்து கொள்வது ?

    ReplyDelete
  2. மேலோட்டமாக பார்த்தால் திரு விவேக் கூறுவதில் ஒரு க்ஷணம் மனம் சஞ்சலப்படுகிறது.ஆனால் வார்த்தைகளிலோ அல்லது பொருட்களிலோ முழு அர்த்தம் வெளிப்படுவதில்லை.நம் கண்ணோட்டம்தான் பல வித எண்ணங்களை உண்டுபண்ணுகிறது.ஆசிரியர் கூறியது போல் குழந்தையின் பார்வையும்,மருத்துவரின் பரிசீலிப்பதிலும்,தெருவில் போகிற ஒரு கெட்ட எண்ணம் உள்ளவனின் மனப்பாங்கும் வேறுபட்டது.
    பட்டரும் ஆண்டாளும் தெய்வங்களின் எண்ணத்திலேயே சர்வ காலமும் மனதை திளைக்க விட்டவர்கள்.அவர்கள் எழுதுவது ஒரு மன ப்ரவாகமே தவிர அழகுக்காகவோ படிப்பவர்களின் மனதை தூண்டுபவையாகவோ இல்லை என்று என் எண்ணம்.. ஆசிரியர் என்ன கூறுகிறார் என்பதை பொறுத்து பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தெரியுமா தெரியவில்லை அல்குல் என்றால் vagina. ஆண்டாள் பாடல்களில் கண்ணன்மேல் விரகதாபம் இருக்கிறது. ... "கற்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ செம்பவள வாய்தான் தித்திருக்குமோ? " ... என்று ஆண்டாள் கண்ணனின் இதழ்சுவையை பற்றி சங்கிடம் கேட்கிறார். ஆழ்வார்கள் (ஆண்கள்தான்) தங்களை நாயகியாக பாவித்து கண்ணனை நாயகனாக பாவித்து பாடும் பாடல்களைப் பாருங்கள்.

      Delete
    2. அல்கு-தல் = குறுகு-தல் என்று பொருள்!

      தோய்ப்பதால்=தோசை, வடுப்பதால்=வடை
      செல்வதால்=செல்வம், கொள்வதால்=கோள்...etc etc
      அதே போல அல்கு-வதால் (குறுகு) = அல்குல்!!

      இதையொட்டிப் பலப்பல காரணப் பெயர்கள், தமிழில் பிறக்கும்!
      * அல்கு = இருள்/ இரவு! (ஒரு நாளின் "கீழ்ப்" பகுதி)
      * அல்கு = சேர்தல் ("கீழான" பகுதியில் அல்லவா நீர் சேரும்)

      ஆக, அல்கு-தல் = குறுகு-தல்/ கீழே!
      பெண்ணின் உடம்பிலே, கீழான, அல்கிய (குறுகிய) இடம் = அல்கு-ல்!
      * இடையாகவும் இருக்கும்!
      * அதற்கும் கீழே, பெண்குறி/ பெண் உறுப்பாகவும் பயின்று வரும்!

      இந்த அல்கு-தல் = அஃகு-தல் என்று கூட குறளில் வரும்!
      "அஃகி" அகன்ற அறிவு என்னாம், யார்மாட்டும்
      வெஃகி வெறிய செயின்

      வள்ளுவர் சொல்வது: "அஃகி அகன்ற அறிவு"- அதாச்சும் நுட்பமாக் "குறுகி", அகன்ற அறிவு!

      இப்போதைக்கு நினைவில் வையுங்கள்!
      அல்குல் = இடை (அ) அதற்கும் கீழே, பெண் உறுப்பு!

      * பாம்பு போன்ற அல்குல் = புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் என்பது தோழி கோதையின் திருப்பாவை! பாம்பு போல வளைவை உடையது அவள் இடுப்பு! Itz all about Curves :)

      * பொற்காசு, மணிகளைக் கோர்த்துக் கட்டிய அல்குல் = எத்தனை குழந்தைகளுக்கு, "அது" மறைப்பா, இடுப்புக் கயிறில் கட்டுவாங்க! நாம தான் பார்த்திருக்கோமே!:)

      அதே போல், அன்றைய செழிப்பான பெண்களும், இடுப்பிலே ஒயிலாகப் பொன் மணி (மேகலை) கட்டிக் கொண்டு இருந்தனர்!

      * ஆனா, ஒன்னே ஒன்னு இடிக்குது! = "அகல் அல்குல்"!

      கம்பனில் அகன்ற அல்குல்-ன்னும் வருது! நாம அல்குல் = "குறுகிய"-ன்னுல்ல பார்த்தோம்? அப்பறம் எப்படி "அகன்ற"?
      வாம மேகலை இற, வளர்ந்தது அல்குலே! - இது கம்பனின் சித்திரம்!

      இடுப்பில் Belt-ஐ Tightஆ கட்டுங்க! ஒரு நாள் முழுக்க அப்படியே இருங்க!
      வீட்டுக்கு வந்ததும், கண்ணாடி முன்னாடி நின்று, Belt-ஐ, திடுமென்று தளர்த்திப் பாருங்க!
      அப்போ, இடுப்பு கீழே விரிவது தெரியும்! = "வளர்ந்தது அல்குலே!"
      கம்பனும் இதையே காட்டுகிறான்! அவள் இடுப்பில் மேகலை (ஒட்டியாணம்) இறுக்க..... அவள் அல்குல் அகலமானதே!

      அல்குல் பெண்களுக்கு மட்டும் தானா என்றால், அதுவும் இல்லை!
      என் ஆசை முருகனுக்கும் அல்குல் உண்டு! :)
      யாராச்சும் பழனியாண்டியின் குளியலைப் (திருமுழுக்கை) பார்த்து இருக்கீங்களா?

      ஒரு பெண்ணின் இடையை விட, அம்புட்டு வளைவு, அம்புட்டு Curves, என் முருகனோட இடுப்பு!
      கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் = எல்லா வுட்டும் பிச்சை வாங்கணும் அவன் இடுப்பு அழகுக்கு:)

      அவன் முதல்-இடை-கடை என்னும் முச்சங்கத்துக்கும் உரியவன் என்றாலும்...
      எனக்குப் பிடித்தது முருகனின் "இடைச்" சங்கம் மட்டுமே! :))
      ஆனா, இலக்கியத்தில் ஆணின் இடுப்பை, அல்குல்-ன்னு யாரும் எழுதி வைக்கவில்லை!:)

      முடிப்பாக...
      * அல்கு-தல் = குறுகு-தல்/ கீழே
      * அல்குல் = இடை (Waist)/ அதுக்கும் கீழே பெண்ணுறுப்பு!

      அதில் இருந்து தானே பிறக்கிறோம்? இத்தனை "Stigma" (கறையுணர்ச்சி) வேண்டாம்!

      Finally, all the above from the website http://madhavipanthal.blogspot.com/2011/10/alkul.html

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஒரு பெண்ணின் உடல் அழகை வருணிப்பதில் இந்தத் தவறும் இல்லை என்று எண்ணுகிறேன். காளிதாசரும், கம்பரும் இன்னும் பலரும் இப்படி வருணித்திருக்கிறார்களே. அதை ஏன் தவறு என்று எண்ண வேண்டும்?

    அந்தப் பாடல்களில் அத்தகைய வருணனைகள் "காம நோக்குடன்" இருக்கின்றனவா என்பதே கேள்வி. படிக்கும்போது அப்படித் தோன்றவில்லை.

    ReplyDelete