திருக்குறள் - மறப்பும், நினைப்பும்
அறம் பற்றி அவ்வளவு ஆழமாக சிந்தித்து எழுதிய வள்ளுவர், காதல் பற்றியும் அந்த அளவுக்கு எழுதி இருப்பதை பார்க்கும் போது நம்மால் வியக்காமல் இருக்க முடியாது.
அவர்கள் காதலர்கள்.
அடிக்கடி அவளை அவன் வந்து சந்தித்து விட்டுப் போகிறான். இது இப்படி கொஞ்ச நாள் நடக்கிறது.
ஒரு நாள், அவளுடைய தோழி, அவனிடம் கேட்டே விட்டாள், "என்ன இப்படி வந்து போய்கிட்டு இருந்தா எப்படி. ஊருக்கு போன பின் எங்களை மறந்து விடுவாயா" என்று.
அதற்கு அவன் பதில் சொல்கிறான்
"உங்களை நான் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன்" என்று.
தோழி பதறிப் போனாள். "என்னது நினைத்துக் கூட பார்க்க மாட்டியா" என்று.
அவன் சிரித்துக் கொண்டே சொல்கிறான் "மறந்தால் அல்லவா நினைக்க. நான் அவளை மறப்பதே இல்லை. பின் எப்படி நினைப்பது" என்று.
பாடல்
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே
னொள்ளமர்க் கண்ணாள் குணம்.
பொருள்
உள்ளுவன் = நினைப்பேன்
மன் = அசைச் சொல்
யான் = நான்
மறப்பின் = மறந்தால்
மறப்பறியேன் = மறத்தல் என்பதை அறியேன்
ஒள் அமர் = ஒளி பொருந்திய
கண்ணாள் = கண்களை உடையவள்
குணம் = குணம்
நினைப்பது, மறப்பது என்று ஏதோ சொல் விளையாட்டில் போய் இருந்தால் வள்ளுவருக்கு என்ன பெருமை.
மனைவியை, அல்லது காதலியை நினைப்பது என்றால் எதை நினைப்பது?
அவளுடைய அழகை, அவளின் கூந்தலை, அழகான சிரிப்பை, முத்துப் போன்ற பற்களை, இவற்றையா?
இல்லை இல்லை....
"ஒள் அமர் கண்ணாள் குணம்"
அவளுடைய குணத்தை எப்படி மறப்பேன் என்கிறான் காதலன்.
அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்ற பெண்ணின் குணங்களை நான் எப்படி மறப்பேன் என்கிறான்.
உடல் அழகு மறைந்து விடும். ஓரிரண்டு பிள்ளைகள் பிறந்து, வயதானால் உடல் அழகு மாறும்.
குணம் என்றும் அப்படியே இருக்கும். இன்னும் சொல்லப் போனால், அது மெருகு ஏறும்.
இந்த பெண்களின் குணம் என்று சொல்லப்படுவதில் அச்சம் புரிகிறது, நாணம் புரிகிறது.
அது என்ன மடம் , பயிர்ப்பு?
மடம் என்றால் மடமை இல்லை. தெரிந்தாலும், தெரிந்தது போல காட்டிக் கொள்ளாமல் இருத்தல்.
'கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை'
என்பார்கள்.
எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எனக்கு வேறு ஒன்று தோன்றுகிறது. பெரும்பாலான பெண்கள் அப்படி இருப்பது இல்லை. தங்களுக்குத் தெரிந்ததை தைரியமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். அப்படி என்றால், அவர்கள் பெண்மை குணம் இல்லாதவர்கள் என்று சொல்ல முடியுமா?
முல்லைக்கு தேர் கொடுத்தான் ஒரு மன்னன்.
மயிலுக்கு போர்வை கொடுத்தான் ஒரு மன்னன்.
தன் சதையையே அறுத்துக் கொடுத்தான் ஒரு மன்னன்.
ஒரு மன்னனுக்குத் தெரியாதா? கொடி, கொழு கொம்பு இல்லாமல் வாடினால் ஒரு குச்சியை ஊன்றி வைத்தால் போதாதா? இல்லை, அதை தூக்கி ஒரு மரத்தின் மேல் படர விட்டால் போதாதா? தேரையா கொடுக்க வேண்டும்?
அதற்கு கொடைமடம் என்று பெயர்.
மனதில் அன்பு அளவுக்கு அதிகமாக இருந்தால், என்ன செய்கிறோம் என்று தெரியாது.
மற்றவர்களின் துன்பம் மட்டுமே தெரியும். சிந்திப்பது எல்லாம் இல்லை. மனதில் பட்டதை , அறிவை கொண்டு சிந்திக்காமல் செய்து விடுவது.
கழுகுக்கு வேண்டுமானால் ஒரு கிலோ மாமிசம் வாங்கித் தரலாமே. அதற்கெல்லாம் நேரம் இல்லை. தன் தொடையை அறுத்துக் கொடுத்தான்.
அது மடமை தான். அதற்குப் பெயர் கொடைமடம்.
பெண்களும் அப்படித்தான். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒரு துன்பம் என்றால், தாங்க மாட்டார்கள். எதையோ, சிந்திக்காமல் செய்து விடுவார்கள். சரியா தப்பா என்றெல்லாம் யோசிப்பது கிடையாது.
அன்பின் மிகுதியால் வரும் மடமை. கொடைமடம் போல.
ஆண்கள் அப்படி அல்ல. ஆயிரம் யோசிப்பார்கள்.
அன்புக்காக எதையும் செய்வார்கள். காதலன் கேட்டான் என்பதற்காக, தங்களையே கொடுத்து விட்டு, பின்னால் கையை பிசைந்து கொண்டிருக்கும் பெண்கள் எவ்வளவு பேர்? அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. அந்த நேரத்தில், இவ்வளவு அன்பாக இருக்கிறானே, இவ்வளவு ஆசையாக கேட்கிறானே என்று கொடுத்து விடுகிறார்கள்.
அது மடமை என்றால் மடமை தான். முல்லைக்கு தேர் கொடுத்ததைப் போல.
பயிர்ப்பு என்றால், பிற ஆடவர்கள் தங்களை கூர்ந்து பார்க்கும் போதோ, தொடும் போதோ உண்டாகும் ஒரு வித அருவெறுப்பு என்று சொல்லலாம்.
பயிர்ப்பு என்ற சொல், தொல்காப்பியத்தில் இல்லை. பின்னால் வந்து சேர்ந்து கொண்டது.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
பெண்ணின் குணங்களே மனதில் தங்கி நிற்கும் என்கிறார் வள்ளுவர்.
பட்டுப் புடவை, தங்க நகை, facial , லிப் stick , மனதில் நின்றது என்று சொல்லவில்லை.
அவளுடைய நிறம், உயரம், உடல் வண்ணம் இவை எல்லாம் மனதில் நின்றது என்று சொல்லவிலை.
குணம். அது மட்டும்தான் நினைவில் நின்றது என்கிறார்.
சரியா இருக்குமோ?
https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_64.html
"அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு" என்று நான்கே குணங்கள்தானா? வேறு எல்லாம் இல்லையா? மிகவும் sexist ஆக இருக்கிறதே!
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete