விவேக சிந்தாமணி - மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்
நாம் எப்படிப்பட்ட ஆள் ? நம் அறிவின் வீச்சு என்ன? ஆழம் என்ன? நம் திறமை என்ன ? நம் ஆளுமை (personality ) என்ன ?
இதெல்லாம் நாம் எப்படி அறிந்து கொள்கிறோம். நம்மைச் சுற்றி உள்ளவர்கள் சொல்வதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம். நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மைப் பற்றி புகழ்ந்து சொன்னால், நாம் அது சரிதான் என்று மகிழ்ச்சி அடைகிறோம். நம்மை இகழ்ந்தால், அது சரி அல்ல என்று நினைத்து, சொன்னவர் மேல் கோபம் கொள்கிறோம்.
சொல்பவர் யார் என்று பார்க வேண்டும். நம்மை விட அறிவில் தாழ்ந்தவன் நம்மை அதி புத்திசாலி என்றுதான் சொல்லுவான். அவன் சொன்னதால், அது சரி என்று ஆகி விடுமா?
ஒரு காட்டில் ஒரு கழுதை இருந்தது. அது இரவு நேரங்களில் பெரிய குரலில் கனைக்கும். அதே காட்டில் ஒரு பேய் வசித்து வந்தது. அதற்கும் பொழுது போக வேண்டாமா? அப்பப்ப இந்த கழுதை கத்துவதை கேட்க வரும். அப்படி வந்த ஒரு நாளில், அந்த பேய் சொன்னது "கழுதையே , உன் குரல் தான் எவ்வளவு இனிமையாக இருக்கிறது...நீ நன்றாகக் பாடுகிறாய் " என்றது. அதைக் கேட்ட கழுதைக்கு ஒரு மகிழ்ச்சி. நம்மை விட சிறந்த பாடகர் இந்த வையகத்தில் கிடையாது என்று எண்ணி மகிழ்ந்தது.
கழுதைக்கு பேய் கொடுத்த பட்டம் போல, நமக்கும் பலர் பட்டம் தரலாம், புகழ்ந்து சொல்லலாம்...அதை எல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டு பெருமை கொள்ளக் கூடாது. உண்மையிலேயே நம்மைவிட உயர்ந்தவர்கள் நம்மை பாராட்டும் படி வாழ வேண்டும்.
பாடல்
கழுதை கா எனக் கண்டு நின்றாடிய அலகை
தொழுது மீண்டும் அக்கழுதையைத் துதித்திட அதுதான்
பழுதிலா நமக்கு ஆர் நிகர் மெனப் பகர்தல்
முழுது மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்
பொருள்
கழுதை = கழுதை
கா எனக் கண்டு = "கா" என்று கத்திய பாடியதைக் கண்டு
நின்றாடிய அலகை = நின்று ஆடிய பேய்
தொழுது = அந்தக் கழுதியை வணங்கி
மீண்டும் = மீண்டும்
அக்கழுதையைத் துதித்திட = அந்தக் கழுதையை போற்றிட
அதுதான் = அந்தக் கழுதையும்
பழுதிலா = குற்றமில்லாத
நமக்கு = நமக்கு
ஆர் நிகர் மெனப் = யார் நிகர் ஆவார்கள் என்று
பகர்தல் = சொல்லுவது
முழுது மூடரை = முழு மூடரை
மூடர் கொண்டாடிய முறைபோல் = இன்னொரு மடையன் பெருமையாக சொன்னது போல
"என் மகனைப் போல உண்டா ?"
"என் மகள் பெரிய திறமைசாலி "
"என் கணவர் சகலகலா வல்லவர் "
"என் மனைவி பேரழகி "
இவற்றை எல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டு திரியக் கூடாது. அவை எல்லாம் அன்பினால் சொல்லப்படுபவை, பலன் கருதி சொல்லப் படுபவை.
பெரியோரின் பாராட்டுதான் முக்கியம்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_19.html
No comments:
Post a Comment