கம்ப இராமாயணம் - தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்
இராவணன் இறந்து கிடக்கிறான். அவனை அருகில் சென்று பார்க்கிறான் இராமன். அவன் முதுகில் புண் இருக்கிறது. "அட சீ இவன் போரில் புறமுதுகு கண்டவனா " என்று இராமன் இகழ்ந்து நோக்குகிறான்.
அப்போது அங்கு வந்த வீடணன் சொல்வான். "இராவணன் முதுகில் உள்ள தழும்புகள், அட்ட திக்கு யானைகளோடு சண்டை போட்டு, அந்த யானைகள் இராவணன் மார்பில் தங்கள் தந்தத்தால் குத்தி அது முதுகின் வழியாக வந்த புண்ணே அன்றி இராவணன் ஒரு போதும் புறமுதுகு கண்டவன் அல்ல" என்று விளக்குகிறான்.
அவன் மேலும் சொல்லுவான்,
"இராமா, ஆயிரம் கைகள் கொண்ட கார்த்த வீரியனும், வாலியும் முன்பு இராவணனை ரொம்ப முயற்சி செய்து வென்றார்கள். இராவணன் தோற்றதற்கு காரணம் அவன் வீரம் இன்மை அன்று. இராவணன் பெற்ற சாபங்கள் அவனை தோல்வி அடைய வைத்தன. இப்போதும், தாயினும் தொழத் தக்க சீதை மேல் வைத்த காதல் என்ற நோயும், உன் சினமும் அவனை வீழ்த்தியதே அன்றி அவன் கோழைத் தனத்தால் அவன் விழவில்லை " என்று.
பாடல்
'ஆயிரம் தோளினாலும், வாலியும், அரிதின், ஐய!
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை;
தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்-தன்மை
நோயும் நின் முனிவும் அல்லால், வெல்வரோ நுவலற்பாலார்?
பொருள்
'ஆயிரம் தோளினாலும் = ஆயிரம் தோள்களைக் கொண்ட கார்த்த வீரியனும்
வாலியும் = வாலியும்
அரிதின் = அரிதாக
ஐய! = இராமா
மேயின வென்றி = பெற்ற வெற்றிகள்
விண்ணோர் = தேவர்கள்
சாபத்தின் விளைந்த = சாபத்தால் விளைந்தவை
மெய்ம்மை; = உண்மை என்ன என்றால்
தாயினும் தொழத் தக்காள்மேல் = தாயை விட தொழுது வணங்கத் தக்க சீதை மேல்
தங்கிய காதல் = தங்கிய காதல்
தன்மை = தன்மை
நோயும் = நோயும்
நின் முனிவும் அல்லால் = உன் கோபமும் அல்லாது
வெல்வரோ = வெல்ல முடியுமா (இராவணனை)
நுவலற்பாலார்? = யார் சொல்ல முடியும்
எவ்வளவு வீரம் இருந்தாலும், அறம் நீங்கி வாழ்ந்தால் , அந்த அறமே அழிக்கும் என்பது நீதி.
நம் இலக்கியங்கள் அறம் அறம் என்று ஓலமிடுகின்றன.
இலக்கியங்களை படிப்பதன் நோக்கம் அவை கூறும் அறங்களை கடை பிடித்து வாழ.
இலக்கியங்கள் நம்மை நல் வழிப் படுத்த வேண்டும்.
இல்லை என்றால் அவை இலக்கியங்கள் அல்ல.
https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_20.html
No comments:
Post a Comment