வில்லி பாரதம் - சிகண்டி - 4 - கையில் மாலை இவற்கு
ஏதோ அந்தக் காலம் முதல் இன்று வரை பெண்களை அடக்கியே வைத்து இருந்தார்கள் என்று இன்றைய பெண்களில் பெரும்பாலோனோர் நினைக்கிறார்கள். பெண்களுக்கு ஒரு சுதந்திரமும் இல்லை. பெண் விடுதலை வேண்டும். பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள்.
உண்மை அதுவா என்று வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்க வேண்டும்.
அந்தக் காலத்தில், பெண்களுக்கு சுயம்வரம் என்று வைத்திருந்தார்கள். இராஜா வீட்டில். பெரிய பெரிய நாட்டின் அரசர்கள் எல்லோரும் வந்திருப்பார்கள். பெண்ணின் கையில் மாலையைக் கொடுத்து, உனக்கு யாரைப் பிடித்து இருக்கிறதோ, அவரை தேர்ந்து எடுத்துக் கொள் என்ற உரிமையை தந்து இருந்தார்கள். பெண்ணின் தந்தை நினைத்து இருந்தால், அந்தப் பெண்ணை யாராவது ஒரு அரசனுக்கு மணமுடித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், மணமகனை தேர்ந்து எடுக்கும் உரிமையை பெண்ணுக்கு கொடுத்து இருந்தார்கள்.
"ஹா...அதெல்லாம் இராஜா வீட்டு பெண்களுக்கு...சாதாரண பெண்களுக்கு அப்படியெல்லாம் உரிமை இருந்ததா ?" என்று கேட்பதற்கு முன், மீண்டும் ஒரு முறை நம் இலக்கியங்களை, வரலாற்றினை வாசியுங்கள்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
காசி இராஜன் பெண்கள் மூவரும் சுயம்வர மண்டபத்துக்கு மாலையும் கையுமாக வருகிறார்கள்.
அங்கே பல மன்னர்கள் காத்து இருந்தார்கள். அவர்களோடு பீஷ்மரும் இருந்தார். அவரைப் பார்த்ததும், அந்தப் பெண்களுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்னடா இது, இந்த வயதான தாத்தா எதுக்கு இங்க வந்து உட்காந்து இருக்காருன்னு ...
பாடல்
'கையில் மாலை இவற்கு' எனக் கன்னியர்
வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர்,
வைய மன்னன் வய நிலை நோக்கியே,
ஐயம் உற்றனர், அன்புறு காதலார்.
பொருள்
'கையில் மாலை இவற்கு' எனக் = கையில் உள்ள மாலை இவருக்கு என்று
கன்னியர் = அந்த கன்னிப் பெண்கள்
வெய்ய = ஆசை கொண்ட
நெஞ்சொடு = மனதோடு
மின் என வந்தவர், = மின்னலைப் போல் வந்தனர் (வாம்மா மின்னல்)
வைய = உலகுக்கே
மன்னன் = அரசனான (பீஷ்மரின்)
வய நிலை = வயதின் நிலை
நோக்கியே, = நோக்கி
ஐயம் உற்றனர் = சந்தேகப் பட்டனர்
அன்புறு காதலார் = அன்பும் காதலும் கொண்ட அந்தப் பெண்கள்
ஒரு புறம் வெவ்வேறு நாட்டின் அரசர்கள்.
இன்னொரு புறம் பீஷ்மர்
மற்றொரு புறம் கையில் மாலையுடன் காசி இராஜாவின் மூன்று பெண்கள்.
அந்த சூழ்நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அடுத்து என்ன நடக்கும்?
அந்தப் பெண்கள் மற்ற அரசர்கள் கழுத்தில் மாலையை போடுவார்களா?
அல்லது பீஷ்மர் கழுத்தில் மாலையைப் போடுவார்களா?
அல்லது பீஷ்மர் அந்த மூன்று பெண்களையும் கவர்ந்து செல்வாரா? அப்படிப் போனால் மற்ற அரசர்கள் சும்மா இருப்பார்களா?
கதை சூடு பிடிக்கிறதா?
https://interestingtamilpoems.blogspot.com/2020/01/4.html
Thanks for amazing article This is really appriciative Keep Sharing more and more really nice blog Proper professional blog keep it up
ReplyDeleteசுயம்வரம்தானே? பெண்களினிஷ்டம்தானே முக்கியம்..எதற்கு கவலைப் படவேண்டும்?
ReplyDelete