Pages

Friday, January 10, 2020

திருப்புகழ் - அறநாலைப் புகல்வோனே

திருப்புகழ் - அறநாலைப் புகல்வோனே 


மரணத்தை கண்டு அஞ்சாதவர் யார். வாழ்க்கை எவ்வளவுதான் துன்பம் நிறைந்ததாக இருந்தாலும், சாவதற்கு யாருக்கும் மனம் வருவதில்லை. சாகாமல் இருக்க வழி இருக்கிறதா என்றால் இருக்கிறது.

சாகாமல் இருக்க முடியுமா ? முடியும்.

பிறக்காமல் இருந்தால்.

பிறந்தால்தான் சாக முடியும். இறவா வழி வேண்டும் என்றால், பிறவாமல் இருக்க வேண்டும்.

பிறந்தாகி விட்டது. பிறந்த நாள் தொட்டு இறுதி நாள் வரை, அழியக் கூடிய பொருள்களையே தேடி அலைகிறோம். பொம்மை, பென்சில், சாக்லேட், பூ, சைக்கிள், ரிப்பன், கண் மை, சட்டை, பாவாடை,  எதிர் பாலினர்மேல் ஈர்ப்பு, செல்வம், பிள்ளைகள் என்று அனைத்தும் அழியக் கூடியவை. அவை பின்னால் அலைகிறோம். பின் இறுதி நாளில், என்னத்த செய்தோம் இத்தனை நாள் ...வாழ் நாள் எல்லாம் அலைந்து கண்டது என்ன என்று பச்சாதாபம் வருகிறது. அழியாத பொருள் என்ன என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அருணகிரிநாதர் உருகுகிறார்....

"இறவாமல், பிறவாமல் என்னை ஆட்கொள் குருநாதா. என்றும் நிலைத்து நிற்கும் பெருவாழ்வை எனக்கு அருள்வாய். நான்கு விதமான அறத்தை சொல்லுபவனே, அவிநாசியில் காட்சி தரும் பெருமாளே "

என்று.


பாடல்

இறவாமற் பிறவாமல் எனையாள்சற்  குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத்  தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற்  குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே.



பொருள்

இறவாமற் = இறவாமல்

பிறவாமல் = பிறவாமல்

எனையாள் = என்னை ஆட்கொண்ட

சற்குருவாகிப் = சத்குருவாகி

பிறவாகித்  = மற்றவை யாவும் ஆகி

திரமான  = ஸ்திரமான, நிலையான

பெருவாழ்வைத் = பெரு வாழ்வைத்

தருவாயே = தருவாயே

குறமாதைப் புணர்வோனே = குறவள்ளியோடு சேர்பவனே

குகனே = குகனே

சொற் = பெருமை வாய்ந்த

குமரேசா = குமரேசா

அறநாலைப்  = நான்கு அறங்களை

புகல்வோனே  = போதிப்பவனே

அவிநாசிப் = அவிநாசியில் வீற்றிருக்கும்

பெருமாளே. = பெருமாளே

அது என்ன நான்கு அறம் ?

அறம் , பொருள், இன்பம் , வீடு என்ற நான்கையும் அறமாக கொள்கிறார் அருணகிரி நாதர்.


நாலுதரம் வாசித்தால் மனதுக்குள் ஒட்டிக் கொள்ளும் பாடல்.

திரமான பெருவாழ்வு என்ன என்று சிந்திக்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_10.html

1 comment:

  1. அருணகிரிநாதர் நான்கே வரிகளில் பிறப்பிலும் இறப்பிலுமிருந்து விடுபட ஒரே வழியை சொல்லிவிடுகிறார்.வேறு என்ன? எல்லாம் வல்ல ஈசனை சரணமடைவதை தவிர!

    ReplyDelete