Pages

Thursday, January 30, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம் பையல்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம் பையல் 


நாலாயிர திவ்ய பிரபந்தம் போல எளிய தமிழ் பாடல்கள் கிடையாது. அவ்வளவு எளிமை. ஆழ்வார்கள் பெருமாளோடு கொஞ்சுகிறார்கள். அவ்வளவு அன்யோன்யம்.


"நமக்கு தெரிஞ்ச பையன்...கொஞ்சம் பாத்துக்குங்க" என்று நமக்கு தெரிந்த பையனை மற்றவர்களிடம் அறிமுகம் செய்வது வழக்கம் தானே.

"யார்ரா அவன்...எப்படி பாத்ததாலும் நம்ம பய டா அவன்" என்று நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுவதை கேட்டு இருக்கிறோம்.

"நம்ம பையன்" என்று ஒருவர் நம் மீது உரிமை கொண்டாடினால் நமக்கு சந்தோஷம் தானே?

தொண்டரடிப் பொடி ஆழ்வார் கூறுகிறார், "பெருமாளே நீ எனக்கு பெரிய உதவி ஒன்றும் செய்ய வேண்டாம்...இவன் நம்ம பையன் என்று மத்தவங்க கிட்ட சொல்லு போதும்...அதுவே எனக்கு பெரிய அருள் ...அது கூட சொல்ல முடியாதா உனக்கு..என்ன கல் நெஞ்சு உனக்கு " என்று ஆதங்கப் படுகிறார்.

பாடல்


"தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும்
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார்
எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார்
அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே"

பொருள்


"தெளிவிலாக் = தெளிவு இல்லாத

கலங்கல் = கலங்கிய

நீர் சூழ் = நீர் சூழ்ந்த (காவிரி, கொள்ளிடம் என்ற இரண்டு ஆற்றின் நீரும் கலங்கி செல்லும்)

திருவரங்கங் கத்துள் ளோங்கும் = திருவரங்கத்து உள் ஓங்கும்

ஒளியுளார் தாமே = ஒளி உளார் தாமே

யன்றே =அன்றே

தந்தையும் தாயு மாவார் = தந்தையும் தாயும் ஆவார்

எளியதோ ரருளு மன்றே  = எளியது ஓர் அருளும் அன்றே

எந்திறத் தெம்பி ரானார் = எம் திறத்து எம்பிரானார்

அளியன் = அன்பு கொண்டவன்

நம் பையல் = நம்ம பயல்

என்னார் = என்று சொல்ல மாட்டார்

அம்மவோ  = அம்மாடி

கொடிய வாறே = எவ்வளவு கொடிய நெஞ்சம் கொண்டவர் அவர்

என்னை உன் அடியான் என்று சொல்ல வேண்டாம். என்னை உன் ஆழ்வார்களில் ஒருவனாகச் சொல்ல வேண்டாம். "நம்ம பயல்" என்று சொல்லு. அப்படி சொல்ல உனக்கு என்ன தயக்கம் என்று கேட்கிறார்.

ஆழ்வார்கள், ஆண்டவனை அனுபவித்தது ஒரு மாதிரி என்றால், வைணவ உரை ஆசிரியர்கள் அதற்கு மேல்  சென்று அனுபவிக்கிறார்கள். உரை என்றால் வைணவ உரை தான்   என்று சொல்லும் அளவுக்கு அப்படி ஒரு உருக்கம்.

ஏன், அப்படி சொல்கிறேன் என்று கேளுங்கள்.


"தெளிவிலாக் கலங்கல் நீர்"

ஆற்று நீர் கலங்கித்தான் இருக்கும். ணுப்பும் நுரையுமாகத்தான் இருக்கும். அதில் ஒன்றும் விசேடம் இல்லை.

ஆனால், இந்த பாடலுக்கு உரை எழுதியவர்கள் சொல்கிறார்கள் , ஏன் காவிரியும், கொள்ளிடமும் கலங்கி இருந்தது தெரியுமா "பாற் கடல் போல நாம் தினமும்  பெருமாளை சேவிக்க முடியவில்லையே. ஆண்டில் பல நாள் நீர் இல்லாமல் போய் விடுகிறதே....அவன் பாதம் தொட்டு தடவி அவன் அருகில் இருக்க முடியவில்லையே   என்று கலங்கியதாம்".

பெருமாளை , "அன்றே தாயும் தந்தையும் ஆனார்" என்று சொல்கிறார். ஏன்?

நாம் நம் பெற்றோரை தாய், தந்தையர் என்று அழைக்கிறோம்.

தமிழ் ஆழமான மொழி.

தாயார், தந்தையார் என்ற சொல்லில் தாய் + யார்? தந்தை + யார்? என்ற கேள்வி நிற்கிறது அல்லவா?

இந்தப் பிறவியில், இந்த உடம்புக்கு இவர்கள் தாய், தந்தையர். இதற்கு முன்னால் ? இதற்குப் பின்னால் ? யார் தந்தையோ, யார் தாயோ?

இப்படியே முன்னோக்கிப் போனால், முதல் தாய் தந்தை என்று ஒருவர் இருக்க வேண்டும் அல்லவா?  ஆதி மூலம், அவர் தான் நம் பெருமாள் என்கிறார்.

"போற்றி என் வாழ் முதலாகிய பொருளே" என்பார் மணிவாசகர்.

இறைவன் ஆணா, பெண்ணா?

தாயா? தந்தையா?

தந்தைதான். தாயும் ஆனவர். தாயுமானவர்.

அவன் தாயும், தந்தையாக இருக்கிறான் என்கிறார் ஆழ் வார்.

"அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ" என்பார் திருநாவுக்கரசர்.

ஆணாகி, பெண்ணாகி ...என்பது மணிவாசகம்.

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.  


படித்து படித்து உருகும் பாசுரங்கள். தினம் ஒரு பாசுரமாவது படிக்க வேண்டும். படித்தால் மட்டும் போதாது, பொருள் தெரிந்து, உணர்வு தெரிந்து அதில் மனம் கரைய வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_30.html

3 comments:

  1. பிரதி தினமும் பாசுரங்களை படித்து அனுபவிக்க ஆசைதான். இருப்பினும் படித்து உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள உங்களுடைய உதவி மிகவும் தேவை.

    ReplyDelete
  2. "நம்ம பயல்" என்பது மிக இனிமையாக இருக்கிறது.

    "பெண்ணாகி ஆணாய் அலியாய்" ஆனது இறைவன் என்றால், அலிகளையும், ஓரினச் சேர்க்கையையும் தந்ததும் இறைவன்தானே?

    ReplyDelete
    Replies
    1. நான் மிகவும் விரும்பும் பாசுரம். உரை உள்ளத்தை உருக்குகின்றது.
      தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்!

      Delete