Pages

Tuesday, January 7, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம் 



இன்பம் வருதோ இல்லையோ, துன்பம் வராமல் இருந்தால் போதும் என்று தானே எல்லோரும் நினைப்பார்கள். பல கோடி சொத்து வராட்டாலும் பரவாயில்லை, கையில இருக்குற காசும் பறி போய்விடக் கூடாது என்பதில்தான் எல்லோரும் கவனமாய் இருப்பார்கள்.

பணம் இல்லாமையால் வரும் துன்பம், நோய், உறவுகளில் சிக்கல், எதிர்காலம் பற்றிய பயத்தால் வரும் துன்பம், பிள்ளைகளுக்கு ஒன்றுரம் ஆகி விடக் கூடாதே என்ற பயம்...எல்லாம் விட்டு,கடைசியில் நரகத்துக்குப் போவோமோ என்ற பயம். நரகமும் ஒரு கெடுதல் தானே.

துன்பம் பல வழிகளில் வரும். கணவன்/மனைவியினால், பிள்ளைகளால், பெற்றோர்களால், அரசாங்கத்தால், உயர் அதிகாரிகளால், நாட்டின் பொருளாதார நிலமையால், சுற்றுப் புற சூழ்நிலைகளால்...இப்படி பல இடங்களில் இருந்து துன்பம் வருகிறது.

இம்மையிலும், மறுமையிலும் வரும் துன்பங்களில் இருந்து விடுபட ஒரே ஒரு எளிய வழியைச் சொல்கிறார் நம்மாழவார்.

"கேசவா" என்று சொன்னால் போதும். எல்லா இடர்களும் விலகும். கேசவா என்று சொல்லிக் கொண்டே திருவனந்தபுரம் ஒரு நடை போய் வாருங்கள் என்கிறார்.


பாடல்


கெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே.


பொருள்


கெடுமிட ராயவெல்லாம்  = கெடும் + இடர் + ஆன + எல்லாம். இதை கொஞ்சம் மாற்றி போடுவோம். இடர் ஆன எல்லாம் கெடும். அனைத்து துன்பங்களும் கெட்டுப் போகும். விலகிப் போய் விடும்.


கேசவா வெள்ள  = கேசவா என்று சொல்ல

நாளும் = ஒவ்வொரு நாளும்

கொடுவினை = கொடிய வினை செய்யும்

செய்யும் = செய்யும்

கூற்றின் = எம தர்மனின்

தமர்களும் = கூட்டாளிகளும்

குறுககில்லார் = குறுக்கே வர மாட்டார்கள்

விடமுடை = விஷம் உள்ள

யரவில் = அரவில் , பாம்பில்

பள்ளி விரும்பினான் = பள்ளி கொள்ள விரும்பிய

சுரும்பலற்றும் = சுரும்பு + அலற்றும். சுரும்பு என்றால் வண்டு. வண்டுகள் ஆர்ப்பாராம் செய்யும் ரீங்காரமிடும்

தடமுடை வயல் = தடத்தை உடைய வயல்கள் நிறைந்த

அனந்தபுரநகரிப் = திரு அனந்தபுரம்  என்ற நகரம்

புகுதுமின்றே. = புகுத்தும் + இன்றே .இன்னிக்கே போய் வாருங்கள்


108 திவ்ய தேசங்களில் ஒன்று.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_7.html



2 comments: