திருப்புகழ் - இரகு நாயக வருக - பாகம் 2
இதன் முதல் பாகத்தை இங்கே காணலாம்
https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_24.html
இராமனின் குழந்தைப் பருவத்தை மூல நூல் எழுதிய வால் மீகியும் சரி, வழி நூல் எழுதிய கம்பரும் சரி, பாடாமலேயே விட்டு விட்டார்கள். எதை எதையோ விரிவாக எழுதியவர்கள், கதாநாயகனின் இளமை பருவத்தை பாடாமல் விட்டு விட்டார்கள்.
அந்த குறை தீர்க்க ஆழ்வார்களும் , அருணகிரிநாதரும் நிறைய பாடி இருக்கிறார்கள்.
ஒரு தாய், பிள்ளையை பாராட்டி, சீராட்டி, பாலூட்டி வளர்ப்பது என்பது பெரிய அதிசயம் அல்ல.
தன்னை ஒரு தாயக நினைத்துக் கொண்டு, கோசாலையாக நினைத்துக் கொண்டு பாடுகிறார்.
பாடல் (இரண்டாம் பகுதி)
எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
சிந்தை மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
திங்க ளரவு நதிசூ டியபரமர்
தந்த குமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.
பொருள் (சீர் பிரித்தாலே பொருள் விளங்கி விடும்)
எந்தை வருக = என் தந்தை போன்றவனே வருக
ரகு நாயக வருக = ரகு நாயகனே வருக
மைந்த வருக = மைந்தனே வருக
மகனே யினிவருக = மகனே வருக
என் கண் வருக = என் கண்ணே வருக
என தாருயிர் வருக = எனது உயிரே வருக
அபிராம இங்கு வருக = அழகிய இராமா வருக
அரசே வருக = என் இராசா வருக
முலை யுண்க வருக = என்னிடம் பால் அருந்த வா
மலர் சூடிட வருக = பூ சூடிக்கொள்ள வருக
என்று = என்று
பரிவினொடு = பாசத்தோடு
கோசலை புகல = கோசலை அழைக்க
வருமாயன் = வரும் மாயன் அவன்
சிந்தை மகிழு மருகா = அப்படிப்பட்ட திருமாலின் மனம் மகிழும் மருமகனே
குறவரிள = இளமையான குற மகள்
வஞ்சி = பெண்
மருவு மழகா = அணைக்கும் அழகா
அமரர் சிறை சிந்த = தேவர்களின் சிறை பொடி பொடியாக
அசுரர் கிளை வேரொடு மடிய = அசுரர் குலம் வேரோடு மடிய
அடுதீரா = போர் செய்யும் தீரனே
திங்க ளரவு = திங்கள், பாம்பு (அரவு = பாம்பு)
நதி சூடிய பரமர் = கங்கை இவற்றை சூடிய சிவன்
தந்த குமர = தந்த குமரனே
அலையே கரைபொருத = (கடல்) அலை கரையோடு மோத
செந்தி னகரி லினிதே = (திரு) செந்தில் நகரில் இனிதே
மருவிவளர் = சேர்ந்து வளரும்
பெருமாளே. = பெருமாளே
என்ன ஒரு இனிமையான பாடல்.
இப்படி எவ்வளவு இருக்கிறது திருப்புகழில்.
டும்முறு டுப்புறு கேட்க நேரம் இருக்கு. இதை வாசிக்க நேரம் இல்லை.
https://interestingtamilpoems.blogspot.com/2020/02/2.html
படிக்க ரசிக்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது.நன்றி.
ReplyDelete"டும்முறு டுப்புறு" என்றால் என்ன?
ReplyDelete