திருக்குறள் - பழியஞ்சிப் பாத்தூண்
திருமணம் செய்து கொள்வது பதினோரு கடமைகளை செய்வதற்காக என்று பார்த்தோம்.
பதினோரு பேருக்கு உதவி செய்ய வேண்டும். அவ்வளவுதானே. செஞ்சுட்டாப் போகுது என்று தவறான வழியில் பணம் சம்பாதித்து எல்லோருக்கும் உதவி செய்து விட்டால் போகுது என்று சிலர் நினைக்கலாம். அப்படி யாராவது நினைத்தால் என்ன செய்வது என்று யோசித்து, அதற்கும் ஒரு குறள் எழுதி இருக்கிறார்.
பாடல்
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
பொருள்
பழியஞ்சிப் = பழிக்கு அஞ்சி
பாத்தூண் = பகுத்து ஊண் (உணவு)
உடைத்தாயின் = உள்ளது என்றால்
வாழ்க்கை = வாழ்க்கை
வழியெஞ்சல் = வழி முடிதல்
எஞ்ஞான்றும் இல் = எப்போதும் இல்லை
பழிக்கு அஞ்சி பொருள் சேர்க்க வேண்டும்.
சட்டத்துக்கு அஞ்சி, தர்மத்துக்கு அஞ்சி என்று சொல்லவில்லை. பழிக்கு அஞ்ச வேண்டும்.
ஊருக்குள் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் எவ்வளவோ தவறுகள் செய்கிறார்கள். சட்டத்தால் அவர்களை தொட முடிவதில்லை. சாட்சி இல்லை, திறமையான வக்கீல், சட்டத்தில் உள்ள ஓட்டைகள், சாட்சிகளை விலைக்கு வாங்குவது அல்லது மிரட்டுவது என்று பல வழிகளில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடுகிறார்கள்.
ஆனால், ஊராரின் பழி சொல்லுக்கு தப்ப முடியாது. அந்த பழிக்கு பயந்து நேர்மையான வழியில் பொருள் சேர்க்க வேண்டும்.
அப்படி சேர்த்த பொருளை,
பாத்தூண் = பகுத்து உண்ண வேண்டும்.
முதலில் கூறிய பதினோரு பேருடன் பகுத்து உண்ண வேண்டும்.
அப்படி செய்தால் என்ன கிடைக்கும்?
அப்படி செய்தால் ஒருவன் செல்லும் வழி எப்போதும் முடிவு அடையாது.
அது என்ன வழி முடிவு அடையாது?
அற வழியில் பொருள் சேர்த்து அதை எல்லோருடனும் சேர்ந்து உண்பவனுக்கு பகைவராலோ, அல்லது மற்ற யார் மூலமாவதோ தடை வந்து சேராது. அவன் தன் வழியில் சென்று கொண்டே இருக்கலாம். ஒரு பயமும் இல்லாமல் , தடை வந்து விடுமோ என்ற பயம் இல்லமால் செல்லலாம்.
இன்னொரு பொருள், அவன் வழியை பின் பற்றி அவன் சந்ததியினரும் மற்றவர்களும் நடப்பார்கள். எனவே, அவனுக்குப் பின்னும், அவன் சென்ற நல்வழி தொடர்ந்து நடக்கும்.
மற்றும் ஒரு பொருள், வழி என்பதற்கு வம்சா வழி என்று ஒரு பொருளும் உண்டு. அதாவது, அவன் சந்ததி செழித்து நிற்கும். இப்ப கூட, ஏதாவது ஆபத்தில் இருந்து நாம் தப்பினால் "எதோ உன் முன்னோர் செய்த புண்ணியம், அவங்க செய்த தான தர்மம் உன்னை இன்னிக்கு காப்பாத்தியது" என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா?
அற வழியில் பொருள் சேர்த்து பகுத்து உண்டால், அது நம் சந்ததியினரை காக்கும்.
இது என்ன பெரிய அக்கிரமமா இருக்கே. கல்யாணம் பண்ணி மனைவி பிள்ளைகளோடு சந்தோஷமா இருக்கலாம் என்றால், இந்த வள்ளுவர் ஊரில் உள்ளவருக்கெல்லாம் உதவி செய் , அதற்குத்தான் கல்யாணம் என்கிறார். அப்படி எல்லாம் இருக்க முடியுமா ? நடக்கிற காரியமா? இதுக்கா திருமணம் செய்வது?
அவசரப் படாமல், வள்ளுவர் மேலும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_15.html
நல்ல குறள். அற வழியில் செல்பவருக்கு முடிவே கிடையாது என்பது நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி.