நாலாயிர திவ்ய பிரபந்தம் - 100 திவ்ய தேசம் - திருநீர் மலை
இடமும் இலக்கியமும் பக்தியும் கலந்த ஒரு பிரமிப்பூட்டும் ஒரு இலக்கியம் நம் பக்தி இலக்கியம்.
ஒவ்வொரு இடத்திலும் ஒரு கோவில். அந்த கோவிலுக்குப் பின்னால் ஒரு கதை. அந்த ஊர்களுக்கு சென்ற சமய பெரியவர்கள். அவர்கள் அந்த ஊரையும், அந்த தலத்தில் உள்ள இறைவனையும் போற்றி பாடிய பக்திப் பாடல்கள்.
ஆச்சரியம் என்ன என்றால், அந்த ஊர்களும், அந்த கோவில்களும் இன்றும் அப்படியே இருக்கின்றன. இன்றும் அந்த ஊர்களுக்குப் போனால், அந்த கோவில், அந்த கதைகள், அந்த பாசுரங்கள் நம் முன்னால் நிழலாடுவதை நாம் உணர முடியும்..
பெருமாளை நின்ற கோலத்தில் சில திருத்தலங்களில் காணலாம்.
இருந்த கோலத்தில் சில தலங்களில்.
கிடந்த கோலத்தில் சில தலங்களில்.
நடந்த கோலம் கூட உண்டு.
ஆனால், நான்கு கோலத்திலும் இருக்கும் ஒரு தலம் உண்டு என்றால், அது திருநீர் மலை தான்.
திருநீர் மலை.
சென்னையில், பல்லாவரத்தில் இருந்து 5 கி மீ தொலைவில் உள்ளது. சிறிய கிராமம்.
அதற்கு ஏன் திருநீர் மலை என்று பெயர் வந்தது?
ஒரு முறை திருமங்கை ஆழ்வார், அந்த கோவிலில் உள்ள பெருமாளை தரிசனம் செய்ய வந்திருந்தார். பயங்கர மழை. கோவில் இருப்பதோ மலை மேல். மலையைச் சுற்றி மழை.
நெருங்க முடியவில்லை. மழை நின்றால் நீர் வடியும். வடிந்த பின் பெருமாளை தரிசனம் பண்ணலாம் என்று அங்கு தங்கி இருந்தார். மழை நின்றபாடில்லை.
இன்று நாளை என்று நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன.
என்ன ஆனாலும் சரி, பெருமாளை தரிசனம் செய்யாமல் போவதில்லை என்ற முடிவோடு அங்கேயே தங்கி விட்டார் திருமங்கை.
ஆறு மாதம் ஆனது - மழை நின்று நீர் வடிய.
மழை நீர் சூழ்ந்த மலை என்பதால், திருநீர் மலை என்று அழைக்கப் பட்டது.
பாடல்
அன்றாயர் குலக்கொடி யோடனிமா
மலர் மங்கை யொடன்பளாவி, அவுணர்க்
கென்றானு மிரக்க மில்லாதவனுக்
குறையு மிடமாவது, இரும்பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவா
லிகுடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற்
கிடம் மாமலையாவது நீர்மலையே (1078)
பொருள்
அன்றாயர் = அன்று ஆயர்
குலக் கொடியோடு = குலத்தில் பிறந்த கொடி போன்ற பெண்ணோடு
அணி மாமலர் மங்கையோடு = சிறந்த தாமரை மலரில் உள்ள திருமகளோடு
அன்பளாவி = அன்புடன் பேசி
அவுணர்க் கென்றானு மிரக்க மில்லாதவனுக் = அவுணர்க்கு ஒன்றானும் இரக்கம் இல்லாதவனுக்கு (பக்தர்கள் மேல் இரக்கம். இராக்கதர்கள் மேல் இரக்கம் இல்லை)
குறையு மிடமாவது = உறையும் (இருக்கும்) இடம் எது என்றால்
இரும்பொழில் சூழ் = பெரிய சோலைகள் சூழ்ந்த
நன்றாய புனல் = நன்று ஆராய்ந்து செம்மையாக்கப்பட்ட தீர்த்தங்கள் உள்ள
நறையூர் = நறையூர்
திருவாலி = திருவாலி
குடந்தை = குடந்தை என்ற கும்பகோணம்
தடந்திகழ் கோவல் நகர் = பெருமை கொண்ட கோவல் நகர்
நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற் = நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்
கிடம் = இடம்
மாமலையாவது = மாமலை ஆவது
நீர்மலையே = திருநீர் மலையே
கொஞ்சம் சீர் சேர்க்க வேண்டும்.
நான்கு திருத்தலங்கள். - நறையூர், திருவாலி, குடந்தை, கோவல் நகர்
நான்கு கோலங்கள் - நின்றது, இருந்தது, கிடந்தது, நடந்தது
இப்போது ஒன்றோடு ஒன்றை பொருத்திப் பார்க்க வேண்டும்.
நின்றது, நறையூரில்
இருந்தது, திருவாலியிலே
கிடந்தது, குடந்தையிலே
நடந்தது, கோவல் நகரிலே
இந்த நான்கு கோலங்களிலும் இருப்பது திருநீர் மலையிலே.
இந்தா இருக்கு சென்னை. சென்னைக்குப் பக்கத்தில் பல்லாவரம். பல்லாவரத்தில் ஒரு எட்டு எடுத்து வைத்தால் திருநீர் மலை.
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் அருள் தரும் பெருமாளை ஒரு நடை போய் பார்த்துவிட்டு வாருங்கள்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/03/100.html
வேங்கடமும் விண்ணகரும் வெஃக்காவும் அஃகாத
ReplyDeleteபூங்கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும்- நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர் ---முதல் திருவந்தாதி- பொய்கை ஆழ்வார்