திருக்குறள் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
இல் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று சொன்னார். இல் வாழ்வின் கடமைகள் பற்றிச் சொன்னார். பின், அதன் பயன் பற்றிச் சொன்னார். அதன் உயர்வு பற்றி சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர், இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறார்.
இல்வாழ்வில், அதற்கு விதிக்கப்பட்ட முறையில் வாழ்பவன், வானில் உள்ள தெய்வங்களுக்கு இணையாக வைக்கப்படும் என்கிறார்.
பாடல்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
பொருள்
வையத்துள் = இந்த உலகில்
வாழ்வாங்கு வாழ்பவன் = இல்லற தர்மத்தின் படி வாழ்பவன்
வானுறையும் = வானில் வசிக்கும்
தெய்வத்துள் = தெய்வங்களுள் ஒன்றாக
வைக்கப் படும். = வைத்து எண்ணப் படுவான்
இது கொஞ்சம் ஓவரா தெரியல? என்னதான் இல்லறம் சிறந்தது என்றாலும், அதற்காக தெய்வத்துக்கு இணையாக சொல்ல முடியுமா?
பின் ஏன் வள்ளுவர் அவ்வாறு சொல்கிறார்?
வள்ளுவர் எந்த ஒன்றை செய்தாலும் அதற்கு இம்மை மற்றும் மறுமை பயன்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
ஏதோ இந்த வாழ்வில் கொஞ்சம் பயன் கிடைத்தால் போதும் என்று நினைக்க மாட்டார். மறுமைக்கும் பலன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்.
இல்லற தர்மத்தில் இருந்து வாழ்பவன், இந்த வாழ்க்கை முடிந்த பின் கட்டாயம் மேலுலகம் சென்று அங்குள்ள தேவர்கள், தெய்வங்களோடு இருப்பான் என்பது திண்ணம் என்பதால், அவன் "வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்றார்.
வானுறையும் தெய்வம் என்று சொல்லவில்லை.
மக்கள் அவனை தெய்வத்துக்கு இணையாக வைப்பார்கள் என்று கூறுகிறார்.
ஏன்?
தெய்வம் என்ன செய்யும்?
உதவி செய்யும். நல்லது செய்யும். துன்பம் துடைக்கும். அருள் செய்யும். ஆபத்தில் இருந்து காக்கும்.
இல்லறத்தில் உள்ளவனும் இவற்றை எல்லாம் செய்ய வேண்டும். செய்வான். செய்ய வேண்டியது கடமை.
இவற்றை எல்லாம் ஒருவன் செய்வதால், அவன் தெய்வத்துள் ஒன்றாக கருதப்படுவான் என்கிறார்.
"எப்படிடா இந்த சிக்கல் இருந்து தப்பிப்பது என்று தவித்துக் கொண்டிருந்தேன். தெய்வம் போல வந்து உதவி செஞ்சீங்க" என்று கூற கேட்டு இருக்கிறோம் அல்லவா?
அப்படி உதவி செய்பவர்களை, உலகத்தில் உள்ளவர்கள் தெய்வம் போல போற்றுவார்கள் என்பது கருத்து.
இல்லறத்தின் பெருமையை இதைவிட உயர்வாகச் சொல்ல முடியாது.
மீண்டும் ஒரு முறை பத்து குறளையும் படித்துப் பாருங்கள்.
குடும்பம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரியும்.
ஏதோ ஒரு ஆணும் பெண்ணும் கூடி, சுகம் அனுபவிப்பது என்பது அல்ல இல்லறம். அது ஒரு பகுதிதான்.
கோவிலுக்குப் போனால் சுண்டல் கிடைக்கும். சுண்டலுக்காக கோவிலுக்குப் போக முடியுமா ? அது போல, ஆண் பெண் சுகம் என்பது ஒரு சிறிய பகுதி அவ்வளவுதான்.
இல்லறம் என்பது மிகப் பெரிய விஷயம். நாம் அதை நீர்த்துப் போக வைத்து விட்டோம். அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று ஆக்கி விட்டோம்.
திருக்குறள் மனிதனை குடும்பத்தோடு பிணைக்கிறது.
குடும்பத்தை சமுதாயத்தோடு இணைக்கிறது.
மனிதன் , தான் என்ற வட்டத்தை விட்டு, குடும்பம் என்ற பெரிய வட்டத்துக்குள் வருகிறான். பின், சமுதாயம் என்ற இன்னும் பெரிய வட்டத்துக்குள் வருகிறான். பின், ஒட்டு மொத்த மனித சமுதாயத்தை நேசிக்கத் தலைப்படுகிறான். அங்கிருந்து வானுலகம், வீடு பேறு என்பதெல்லாம் வரும்.
வள்ளுவர் சொர்க்கத்துக்கு எட்டு வழி சாலை போட்டுத் தருகிறார்.
அதில் அப்படியே போய் கொண்டே இருந்தால், இறைவன் திருவடி அல்லது சுவர்க்கம் சென்று விடலாம்.
மேப் போட்டுத் தருகிறார்.
போக வேண்டியது மட்டும் தான் பாக்கி.
சரி, இத்தனை வேலை சொல்கிறார். இதை எல்லாம் ஒருவன் எப்படி செய்வது? அதற்கு ஒரு வழி சொல்ல வேண்டாமா?
வள்ளுவர் அப்படி விட்டு விடுவாரா?
இதை எப்படி செய்வது என்றும் சொல்லித் தருகிறார்.
கேட்போமா?
https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_20.html
எப்படி இவ்வளவு அழகாக மனதில் பதியும் வண்ணம் எழுதுகிறீர்கள்.
ReplyDeleteரொம்ப ஆச்சரியமாக உள்ளது.
இல்லறம் பற்றிய பத்து குறள்களையும் ஒன்று சேரப் படித்தால் அவற்றின் பொருளே வேறாக விளங்குகிறது. இந்தப் பயணத்தில் எங்களை அழைத்துச் சென்றதற்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி.. மகிழ்ச்சி..
Delete