நாலாயிர திவ்ய பிரபந்தம் - வான் மறந்த காலத்தும்
எத்தனையோ சோதனைகள், எத்தனையோ சிக்கல்கள், கவலைகள் வருகின்றன. என்ன சாமி கும்பிட்டு என்ன பயன். நடக்கிறது என்னமோ நடந்துக்கிட்டுதான் இருக்கு. இந்த சாமி என்பதெல்லாம் ஒரு வேளை சும்மா கற்பனைதானோ என்ற எண்ணம் அவ்வப்போது எழலாம்.
என்ன செய்வது?
சில சமயம் வானம் பொய்த்துப் போவது உண்டு. மழை பெய்யாமல் போய் விடும். பயிர் பச்சை எல்லாம், "சரி தான், இந்த மேகத்தை நம்பி பயன் இல்லை, நாம் வேறு வழி பார்க்க வேண்டியதுதான்" என்று கிளம்பி விடுவது இல்லை. வானம் என்னதான் பொய்த்தாலும், அந்த மேகத்தை, அது தரும் மழையை எதிர்பார்த்தே பயிர்கள் வாழும்.
வித்துவக்கோட்டம்மானே, நீ எனக்கு எவ்வளவு தான் துயரம் தந்தாலும், என் துயரத்தை போக்கா விட்டாலும், என் மனம் என்னவோ எப்போதும் உன் மேல் தான் இருக்கும்..
என்கிறார் குலா சேகர ஆழ்வார்.
பாடல்
எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்
மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட்
டம்மாஎன் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே
பொருள்
எத்தனையும் = எவ்வளவுதான்
வான் = வானம்
மறந்த காலத்தும் = மழை பெய்ய மறந்த காலத்தும்
பைங்கூழ்கள் = பசுமையான தாவரங்கள்
மைத்தெழுந்த = மை போல கறுத்து எழுந்த
மாமுகிலே = பெரிய மேகங்களையே
பார்த்திருக்கும் = பார்த்து இருக்கும்
மற்றவைப் போல் = அவற்றைப் போல
மெய்த்துயர் = உண்மையான துன்பத்தை
வீட் டாவிடினும் = தீர்க்காவிடினும்
விற்றுவக்கோட் டம்மா = வித்துவக்கோட்டத்தில் உள்ள என் அம்மானே
என் சித்தம் = என் மனம்
மிக வுன்போலே = மிகவும் உன் மேலே
வைப்ப னடியேனே = வைப்பன் அடியேனே
மனதை உருக்கும் பாடல்கள்.
காதலும் பக்தியும் அப்படித்தான். துன்பம் தந்தாலும், யார் மேல் பக்தி உள்ளதோ, அவர்களையே நினைத்து உருகும்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_23.html
பயிர்களுக்கு வேறு வழி இல்லை. மனிதருக்கு?
ReplyDelete