Pages

Saturday, April 11, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உனக்கும் தூக்கம் வரலியா ?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உனக்கும் தூக்கம் வரலியா ?



அது கடற்கரை ஓரம் உள்ள ஒரு சின்ன கிராமம். அதில் ஒரு வீடு. வீட்டில் இருந்து பார்த்தால் கடல் தெரியும். வீட்டை சுற்றி கொஞ்சம் கடல் மணலில் வளரும் சில குறுஞ்செடிகள்.

இரவு நேரம். நிலா வெளிச்சத்தில் கடல் பளபளக்கிறது. தூரத்தில் அலை அடிக்கும் சத்தம். கடற்காற்று, மணலை மெல்ல புரட்டிப் போட்டுக் கொண்டு போகிறது.

ஊரே தூங்கி விட்டது.

அவள் மட்டும் தூங்கவில்லை. தூக்கம் வரவில்லை.  அவன் நினைவு. ஜன்னல் வெளியே பார்க்கிறாள். அங்கிருந்த குறு மரத்தில் ஒரு நாரை உட்கார்ந்து இருக்கிறது. அதுவும் தூங்காமல் கண்ணை உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டு இருக்கிறது. அடிக்கிற காற்று அந்த நாரையை தள்ளுகிறது. அது விழாமல் அந்த மரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

"எனக்குத்தான் தூக்கம் வரவில்லை. அவனை நினைத்து, தூக்கம் வராமல் தவிக்கிறேன். உனக்கும் தூக்கம் வரலியா? நீயும் அவன் மேல் காதல் கொண்டாயோ ?"

என்று அந்தப் பெண், நாரையிடம் கேட்கிறாள்.

பாடல்

வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே.


பொருள்


வாயுந்  = மேலும் மேலும்

திரை = அலை, கடல் அலை

உகளும் = உருளும், அடிக்கும்

கானல் = கடற்கரை

மட நாராய், = நாரையே

ஆயும் = தாயும்

அமருலகும்  = அமரர் + உலகும் = தேவ லோகமும்

துஞ்சிலும்  = தூங்கினாலும்

நீ துஞ்சாயால், = நீ தூங்க மாட்டாயா ?

நோயும்  = (காதல்) நோயும்

பயலைமையும் = அதனால் வரும் பசலை நிறமும்

மீதூர = உன் மேல் வர

வெம்மே போல், = என்னைப் போலவே

நீயும் = நீயும்

திருமாலால் = திருமாலால்

நெஞ்சம் = மனம்

கோட் பட்டாயே. = பறித்துக் கொள்ளப் பட்டாயோ?

அவன், என் மனதைத்தான் கொண்டு சென்றான் என்று நினைத்தேன். உன் மனதையும்  கொண்டு சென்று விட்டானா ?

நம்மாழ்வார் பாசுரம்.

நாலாயிர திவ்ய பிரபந்தம்.

பிரபந்தத்தை புரட்டிப் பாருங்கள். இப்படி எத்தனையோ பாடல்கள்.

எதெதற்கோ நேரம் ஒதுக்குகிறோம். இதுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கிப் படித்தால்  என்ன ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_11.html

2 comments:

  1. காதல் வயப்பட்டு ஏங்குகிற பெண்மணி போல் ,திருமாலிடம் நெஞ்சை பறிகொடுத்து தான் பார்க்கிற எல்லாம் தன்னை போல் தவிக்கறதோ என்பது போல் நாரையை பார்த்து பாடும் இந்த பாடல் ஆழ்வாரின் மன நிலையை நன்றாக எடுத்து காட்டுகிறது.

    ReplyDelete
  2. நம்மாழ்வார் இப்படியும் அந்நியோன்னியமாய் பாடி இருக்கிறாரா! அமோகம்.

    ReplyDelete