திருக்குறள் - காதல் சிறப்பு
காதலன் காதலிக்கு இடையே உள்ள உறவை எத்தனையோ கவிஞர்கள் பாடி இருக்கிறார்கள். .
காதலைப் பாடாத கவிஞன் யார்?
வள்ளுவரும் பாடுகிறார்.
இந்த பெண்ணோடு எனக்கு உள்ள உறவு என்பது உயிருக்கும் உடலுக்கும் உள்ள உறவைப் போன்றது என்கிறார்.
பாடல்
உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு
பொருள்
உடம்பொடு = உடம்புக்கு
உயிரிடை = உயிரிடம்
என்ன = எப்படி உள்ளதோ
மற்று = அசைச் சொல்
அன்ன = அது போல
மடந்தையொடு = இந்த பெண்ணோடு
எம்மிடை = எனக்கு உள்ள
நட்பு = உறவு
இந்த உடம்பு, உயிர் உதாரணம் எல்லாம் நம்ம உள்ளூர் கவிஞர்கள் கூட எழுதுவர்களே. எது என்ன அவ்வளவு பெரிய உதாரணமா? இதைச் சொல்ல ஒரு வள்ளுவர் வேண்டுமா?
இருந்தாலும் இது கொஞ்சம் over build up என்று சிலர் நினைக்கலாம்.
ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
காதலன், காதலி உறவு என்றால் காதல் என்று சொல்லி விடலாம்.
கணவன், மனைவி உறவு என்றால் தம்பதிகள், அல்லது தாம்பத்தியம் என்று சொல்லி விடலாம்.
வள்ளுவர் ஆராய்ந்து எடுத்து ஒரு சொல்லைப் போடுகிறார்.
"நட்பு"
எனக்கு அந்த பெண்ணோடு உள்ள உறவு - ஒரு நட்பு
கணவன் மனைவி என்றால் ஏதோ கடமை என்ற உணர்வு வந்து விடும். பிடிக்குதோ இல்லையோ, சில பல நிர்பந்தங்களினால் ஒன்றாக இருந்து தீர வேண்டி இருக்கிறது.
நட்பு என்பது அப்படி அல்ல. மிக மிக உயர்வானது.
உடுக்கை இழந்தவன் கை போல் அங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
ஒருவருக்கு ஒரு தேவை என்றால், கேட்காமலேயே ஓடிப் போய் உதவி செய்வது நட்பு.
அவளோடு எனக்கு உள்ள உறவு - நட்பு என்கிறான் அவன்.
எவ்வளவு இனிமையானது?
சரி, அடுத்தது உடலும், உயிரும் போல.
அதில் என்ன சிறப்பு?
உடலும் உயிரும் ஒன்றாக இருந்தால்தான் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
உயிர் போய் விட்டால், உடம்புக்கு பிணம் என்று பெயர். ஓரிரு நாட்களில் அது அழுகி நாற்றம் எடுக்க ஆரம்பித்து விடும்.
உடல் இல்லாத உயிருக்கு பேய், ஆவி என்று பெயர். எல்லோரும் பயந்து ஓடிவிடுவார்கள்.
இரண்டும் சேர்ந்து இருந்தால், ஒன்றால் மற்றதற்கு பெருமை, சிறப்பு, அர்த்தம்.
இரண்டாவது, உடல் வாடினால் உயிர் வாடும். உடலுக்கு வலித்தால்உயிருக்கு வலிக்கும். தலை வலி வந்தால், "தலை வலி உயிரே போற மாதிரி இருக்கு" என்கிறோம். தலைவலி வந்தால் உயிர் போய் விடுமா? இல்லை. உடம்பு படும் வேதனையை கண்டு உயிர் சகிக்காமல் வரும் பேச்சு அது.
உயிர் வாடினால் உடலும் வாடும்.
அது போல, அவளுக்கு ஒன்று என்றால் நான் வாடிப் போவேன், எனக்கு ஒன்று என்றால் அவள் வாடிப் போவாள்.
மூன்றாவது, ஒரு உடலுக்குள் ஒரு உயிர் தான் இருக்க முடியும். அது போல, ஒரு உயிர் ஒரு உடலில் மட்டும்தான் இருக்க முடியும்.
அவளுக்கு நான் மட்டும் தான். எனக்கு அவள் மட்டும்தான்.
மூன்றாவது, இந்த உடலுக்கும் உயிருக்கும் உள்ள சொந்தம் இன்று நேற்று வந்தது அல்ல. யாராவது வந்து, ஒரு உயிரையும் , உடலையும் சேர்த்து வைப்பது இல்ல. "ஏய் உயிரே, எங்க சும்மா சுத்திக்கிட்டு இருக்க...இங்க வா...இந்த உடம்போடு சேர்ந்து வாழ்" என்று யாரும் சேர்த்து வைப்பது இல்லை. இரண்டும் வேறு வேறுதான். ஆனால், ஒன்றில்லாமல் ஒன்று இல்லை. அவை பிறக்கும் போதே ஒன்றாக பிறக்கின்றன. ஒன்று பிரிந்தால் மற்றதும் அழிந்து போகிறது.
நான்காவது, பிரிவு என்பதே முடியாத ஒன்று. என்றாவது நம் உயிர் நம்மிடம், "ஒரு நாள் வெளியூர் போயிட்டு வர்றேன்..." என்று சொல்லி விட்டு போவது உண்டா? உடலை விட்டு உயிரும் பிரிய முடியாது, உயிரை விட்டு உடலும் பிரிய முடியாது. பிரிந்தால், மீண்டும் சேர முடியாது.
ஐந்தாவது, உயிரை தக்க வைத்துக் கொள்ள உடல் கிடந்து போராடும். மருந்து, மாத்திரை, அறுவைச் சிகிச்சை என்று எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உயிரை தக்கவைத்துக் கொள்ள உடல் தவிக்கும். அப்படி ஒரு பிணைப்பு. எவ்வளவு வயதான ஆளாக இருக்கட்டுமே? உயிரை விட யாருக்கு விருப்பம் இருக்கும்? உடலுக்கு உயிர் மேல் அப்படி ஒரு ஆசை, பற்று.
எவ்வளவு ஒரு இனிமையான குறள்.
அன்யோன்யமான நட்பு. சுகமானது. சுவையானது.
ஏழு வார்த்தைகளுக்குள் ஒரு இலக்கியம்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_30.html
No comments:
Post a Comment