கம்ப இராமாயணம் - பெண்ணுக்கொரு வாசம்
இந்த கொரானா வைரஸ் வந்தாலும் வந்தது, வீட்டுக்குளேயே அடை பட்டு கிடப்பது, மூச்சு முட்டுவது போல இருக்கிறது அல்லவா.
இது மட்டும் அல்ல, வாழ்வில் பல சமயங்களில் துன்பம் வரலாம். வேலை போய் விடலாம். கையில் உள்ள செல்வம் கரைந்து போய் விடலாம். எதிர் காலம் பற்றிய பயம் தொற்றிக் கொள்ளலாம். என்ன செய்வது என்று தவித்துப் போவோம்.
கவலையே வேண்டாம். தேவைகளை குறைத்துக் கொண்டால், எல்லாம் சரியாகப் போய் விடும்.
"ஆமா...சொல்றது ரொம்ப எளிது. மின்சார விசிறி இல்லாம, செல் போன் இல்லாம, குளிர் சாதன பெட்டி இல்லாமல், கார் இல்லாமல் எப்படி இருப்பது...பழகிப் போச்சே ...விட முடியுமா "
என்று கேட்கலாம்.
விடை கம்பர் தருகிறார்.
இராமன் எத்தனை செல்வச் செழிப்பில் வாழ்ந்து இருப்பான்? அவன் வாழ்ந்த செல்வ நிலை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. எல்லாவற்றையும் விட்டு விட்டு காட்டுக்குப் போனான்.
ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம்.
நாமாக இருந்தால் என்ன செய்வோம்? அழுது புலம்புவோம். எல்லாரையும் திட்டி தீர்ப்போம். எப்படா இது முடியும் என்று வெறுத்துப் போய் இருப்போம்.
ஆனால், இராமன் என்ன செய்தான் தெரியுமா?
சீதையோடு மிக மகிழ்ச்சியாக, இயற்கையை இரசித்துக் கொண்டு செல்கிறான். காட்டில், சீதைக்கு ஒவ்வொன்றாக காட்டி காட்டி, இதைப், அதைப் பார் என்று சின்ன பிள்ளை மாதிரி சந்தோஷப் படுகிறான்.
அது மட்டும் அல்ல, இடை இடையிடையே சீதையின் அழகை வர்ணிக்க வேறு செய்கிறான்.
சீதைக்கு பெருமையாகவும் இருக்கும், சந்தோஷமாகவும் இருக்கும், கொஞ்சம் வெட்கமும் வந்திருக்கும்.
"காந்தள் மலரில் இருக்கும் அந்த கிளியைப் பார். மாந்தளிர் போல மணம் வீசும் மேனியைக் கொண்ட சீதையே, அது உன் கையில் அமர்ந்து இருப்பதைப் போல இருக்கிறது"
என்கிறான்.
சீதையின் கை வருணனை. அவள் மேனியின் வாசம். என்று இராமன் மிக மகிழ்வுடனேயே காணப் படுகிறான். ஐயோ, இராஜ்யம் போய் விட்டதே என்று இடிந்து போய் விடவில்லை. எது கிடைக்கிறதோ, அதில் சந்தோஷமாக இருக்க பழக வேண்டும்.
பாடல்
‘சேந்து ஒளி விரி செவ் வாய்ப்
பைங் கிளி, செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிக்
கோதுவ, - கவின் ஆரும்
மாந் தளிர் நறு மேனி
மங்கை! - நின் மணி முன்கை
ஏந்தின எனல் ஆகும்
இயல்பின; இவை காணாய்!
பொருள்
‘சேந்து = சிவந்த
ஒளி விரி = விரிந்த ஒளி வீசும்
செவ் வாய்ப் = சிவந்த அலகைக் கொண்ட
பைங் கிளி = அந்தப் பச்சைக் கிளி
செறி கோலக் = சிறந்த அழகைக் கண்டால்
காந்தளின் மலர் ஏறிக் = காந்தள் மலரில் ஏறி
கோதுவ, = அந்த மலரைக் கோதி
கவின் ஆரும் = அழகு உடைய
மாந் தளிர் = மா மரத்தின் தளிரின்
நறு மேனி = வாசம் கொண்ட மேனியை உடைய
மங்கை! = பெண்ணே
நின் = உன்
மணி முன்கை = அழகிய முன் கையில்
ஏந்தின எனல் ஆகும் இயல்பின; = ஏந்தியது போல இருக்கிறது
இவை காணாய்! = இவற்றைக் காண்பாய்
காந்தள் மலர் மென்மையானது. அதை பெண்களின் கைகளுக்கு உவமையாக கூறுவது மரபு.
இராஜ்யம் போனால் என்ன. வேலை போனால் என்ன. அன்புக்கு உரியவர்கள் பக்கத்தில் இருந்தால் வேறு ஒன்றும் வேண்டாம்.
போனதை நினைத்து புலம்பிக் கொண்டு இருக்கக் கூடாது. இருப்பதில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று பார்க்க வேண்டும்.
அழுது புலம்புவது என்றால் இராமனுக்கும், சீதைக்கும் எவ்வளவு நேரம் இருந்தாலும் போதாது. அவர்கள் அதைச் செய்ய வில்லை.
இயற்கையை இரசித்துக் கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள்.
யோசியுங்கள்.
எப்பப் பார்த்தாலும் புலம்பிக் கொண்டே இருப்பதா அல்லது என்ன நடந்தாலும் சரி, சந்தோஷமாக இருப்பேன் என்று வாழ்க்கையை நடத்துவதா என்று.
இரண்டும் உங்கள் கையில்.
கம்ப இராமாயணம் படிப்பதில் இப்படி சில வழி காட்டுதல்களும் கிடைக்கும்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_4.html
No comments:
Post a Comment