Pages

Thursday, May 21, 2020

சிவ ஞான போதம் - உலகின் தன்மை

சிவ ஞான போதம் - உலகின் தன்மை 


மெய்கண்ட தேவர் அருளியது சிவஞான போதம் என்ற நூல். பன்னிரண்டே சூத்திரங்கள். சைவ சித்தாந்தத்தின் சாரம் அனைத்தும் உள்ளடக்கியது.

விளையாட்டாக சொல்லுவார்கள், அது சிவஞான போதம் அல்ல சிவஞான பூதம் என்று.

சிந்திக்க சிந்திக்க விரிந்து கொண்டே போகும். இந்த நூலுக்கு பலர் உரை எழுதி இருக்கிறார்கள்.

சூத்திரம் என்னவோ மூன்று வரிகள் தான். உரைகள் விரிந்து கொண்டே போகும். உரைகளை படிப்பதற்கு முன்னால், சைவ சித்தாந்தத்தில் கொஞ்சம் பரிச்சயம் வேண்டும். இல்லை என்றால் தலையும் புரியாது காலும் புரியாது.

என்னால் முடிந்தவரை எளிய தமிழில் தர முயற்சிக்கிறேன்.

இந்த உலகில் உள்ள அனைத்தையும் மூன்றே மூன்று தொகுப்பில் அடக்கி விடலாம்.

மக்கள், கார், பஸ், மின்சாரம், கணனி, வீடு, மாடு, புகைவண்டி, பணம், தாவரங்கள், மலை, மேகம், காடு, கடல், கரை, நண்பன், மனைவி, உணவு..இப்படி உலகில் என்னென்ன இருக்கிறது இவை அனைத்தும் மூன்று தொகுதியில் அடங்கிவிடும். அதற்கு வெளியே ஒன்றும் இல்லை.

அவை என்ன மூன்று தொகுதி? எப்படி இந்த பிரபஞ்சம் அனைத்தையும் மூன்று சொற்களுக்குள் அடக்க முடியும்?

முடியும். அந்த சொற்கள்.

"அவன், அவள், அது"

அவ்வளவுதான் இந்த உலகம். எதை எடுத்தாலும் இந்த மூன்றுக்குள் இருந்தாக வேண்டும்.

சரி.  உலகம் அனைத்தையும் மூன்று சொற்களுக்குள் அடக்கியாகி விட்டது.

அதனால் என்ன இப்ப?

அடுத்தது, இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.

எந்த ஒன்றாக இருந்தாலும், அவற்றிற்கு மொத்தம் மூன்று வேலை தான் உண்டு.

அது கொரான வைரஸ் ஆக இருந்தாலும் சரி, சூரியன், சந்திரன், விண்மீன், நம்ம வீட்டு  டிவி, குளிர்சாதனப் பெட்டி , அடுப்பு, காய் கறி என்று எதுவாக இருந்தாலும், அனைத்துக்கும் மூன்றே தொழில் தான் உண்டு.

அவை

தோன்றுதல், நிலைத்தல் , அழிதல்

உலகில் உள்ள எந்த ஒன்றும் இந்த மூன்று நிலைகளை அடைந்தே தீர வேண்டும்.

நான் தோன்றுகிறேன், இருக்கிறேன் ஆனால் அழிய விரும்பவில்லை என்று  யாரும், எதுவும் கூற முடியாது.   தோன்றியது, இருந்தே ஆக வேண்டும். இருந்தது அழிந்தே  ஆக வேண்டும். யாராலும் மாற்ற முடியாத விதி.

நான் பிறக்க மாட்டேன், ஆனால் இறக்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது.

சரி, இறக்கிறேன், ஆனால் பிறக்க மாட்டேன் என்று யாரும் சொல்ல முடியாது.

தோன்றிய ஒன்று அழிந்தே ஆக வேண்டும்.

பிறப்பு இருந்தால் இறப்பு இருந்தே ஆக வேண்டும்.

இறப்பு வேண்டாம் என்றால், பிறக்காமல் இருக்க வேண்டும்.

இறைவன் பிறப்பது இல்லை. எனவே அவன் இறப்பதும் இல்லை.

செம்மான் மகளை திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்

என்பார் அருணகிரி.

உயிர்களும், பொருள்களும் தோன்றி, இருந்து பின் மறைகின்றன.

ஒரு பொருள் தன்னைத்தானே தோற்றிக் கொள்ள முடியுமா?

என் பிள்ளைகள் தோன்ற நான்  ஒரு காரணம்.

என்னை நானே தோற்றிக் கொள்ள முடியுமா?

நான் தோன்ற என் பெற்றோர் வேண்டும் அல்லவா?

நான் இருக்கிறேன் என்றால், எனக்கு ஒரு பெற்றோர் இருக்க வேண்டும் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?

என்ன இப்போதே கொஞ்சம் தலை சுற்றுகிறதா?

யோசித்துக் கொண்டு இருங்கள்.  இது எல்லாம் முதல் சூத்திரத்துக்கு விரிவுரை.

மேலும் சிந்திக்க இருக்கிறோம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_72.html

No comments:

Post a Comment