Pages

Wednesday, June 24, 2020

கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி - பாகம் 2

கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி  - பாகம் 2


என்னமோ இந்த பாடல் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது. எழுதிய அர்த்தம் சரிதானா என்று என்ற கேள்வி விடை காணாமல் நடுவில் நிற்கிறது.

"பயந்த தனி வழி"

என்று மட்டும் தான் அருணகிரிநாதர் சொல்லி இருக்கிறார்.

அந்த வழி ஏன், உயிர் பிரிந்த பின், ஆன்மா செல்லும் வழியாக இருக்க வேண்டும்? அவர் அப்படி ஒன்றும் சொல்லவில்லையே. நானாக அப்படி ஒரு அர்த்தத்தை வலிந்து கொண்டு வந்த மாதிரி இருக்கிறது.

சரி, அது இல்லை என்றால், பின் எது "பயந்த தனி வழி"?

உண்மையை தேடும் எல்லா வழியும் தனி வழிதான். அந்த உண்மையை கடவுள் என்று சொல்லலாம், சத்யம் என்று சொல்லலாம், இயற்கை என்று சொல்லலாம்...எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.

அதை தேடி கண்டடையும் வழி தனி வழிதான். அங்கே கும்பல் கும்பலாக போக முடியாது.

பின் எல்லோரும் பெரிய கும்பலாக கோவிலுக்குப் போகிறார்களே, இரத யாத்திரை, கும்பாபிஷேகம்,  போன்ற விசேடங்களுக்கு பெரும் திரளாக போகிறார்களே அது தவறா என்றால், இல்லை.

பாதையின் தொடக்கத்தில் எல்லோரும் இருப்பார்கள். அது நீண்ட வழி என்பதால், முடிவு வரை எல்லோரும் வரமாட்டார்கள்.

மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின் தொடக்கத்தில் பார்த்தால் பெரிய கும்பல் இருக்கும். முடிவில் ஓரிரண்டு பேர்கள் இருப்பார்கள்.

இறைவன் ஒருவன் தானே? எல்லோரும் போய் சேரும் இடம் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். பின் ஏன் தனி வழி என்றால்...சேரும் இடம் ஒன்றுதான், புறப்படும் இடங்கள் வேறு வேறு.

எனவே, வழிகள் தனியாகத்தான் இருக்க முடியும்.

தனியாக இருப்பதால் பயம்.

அந்த பயத்தைப் போக்க வேலும் மயிலும் துணை.

சரி, இந்த விளக்கம் சரியாக இருக்குமா ? அருணகிரி நாதர் சொன்னது இறப்புக்குப் பின் உள்ள  வழியை அல்ல, வாழும் போதே இறைவனை தேடி அடையும் வழியை என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது?

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர். அவனை வணங்கவும் அவன் அருள் இல்லாமல் முடியாது.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்பார் அருணகிரி. அவன் அருளினால்தான் உண்டு.

முருகன் தனிவேல் முநிநம் குருவென்
   றருள்கொண் டறியார் அறியுந் தரமோ
      உருவன் றருவன் றுளதன் றிலதன்
         திருளன் றொளியன் றெனநின் றதுவே!

"அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ" என்பதும் அவர் வாக்கு.

எனவே, பயந்த தனி வழி என்பது இறைவனை இந்தப் பிறவியிலேயே தேடிச் செல்லும் வழி என்று கொள்ளுவதே சாலச் சிறந்தது.

அது அப்படி என்றால், நீங்கள் இறைவனைத் தனியாகத்தான் போய் சந்திக்க வேண்டி இருக்கும்.  மற்றவர்களோடு, சேர்ந்து பயணம் ஆரம்பித்தாலும் ஏதோ ஒரு இடத்தில், நீங்கள் உங்களுக்கு என்று ஒரு பாதையை தேர்ந்து எடுக்கத்தான் வேண்டும். பயமாக இருக்கிறது என்று கும்பலோடு சேர்ந்து போனால், போய் சேர வேண்டிய இடம் வராது.

உங்கள் பாதை, உங்கள் ஆத்ம பக்குவத்தைப் பொறுத்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு வழி.

"தனி வழி" என்பதால் அதில் இதற்கு முன் போனவர்கள் யாரும் இல்லை.  போகிற வழியிலும் யாரிடமும்   வழி கேட்க முடியாது. map , கைகாட்டி, பெயர் பலகை ஒன்றும் இருக்காது.  எனவே அது "பயந்த தனி வழி".

யாரோ சொன்ன பாதையில் போக முடியாது...அது அவர் கண்ட வழி. அவருக்கு அந்த  வழி. நீங்கள் புத்தகங்கள், சொற்பொழிவு இவற்றைக் கேட்டு விட்டு நான் அந்த   வழியில் சென்று இறைவனை அடைவேன் என்றால் முடியாது.

எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு, உங்கள் வழியை நீங்கள் தேர்ந்து எடுங்கள்.

அதுவே இறை தரிசனம் காண வழி வகுக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/2.html


இந்த முதல் பாகத்தை கீழே காணலாம்


பாகம் 1


கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி

இந்தப் பாடலை முன்பே ஒரு தரம் சிந்தித்தோம்.

இன்னும் ஒரு முறை சிந்தித்தால் என்ன.

அந்த சோறு, சாம்பார், இட்லி, தோசை, பொங்கல், வடை, பூரி, சப்பாத்தி என்று எத்தனை தரம் சாப்பிடுகிறோம். கேட்ட சினிமா பாட்டையே எத்தனை தரம் கேட்கிறோம். பார்த்த நகைச்சுவை காட்சிகளை எத்தனை தரம் பார்க்கிறோம். சலித்தா போகிறது?

நல்ல விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு தரம் படித்தால் என்ன ஆகி விடும்.

இல்லை, முன்னமே ஒரு தரம் படித்து விட்டேன், மீண்டும் ஒரு முறை படிக்க முடியாது என்று நினைத்தால், விட்டு விடலாம்.  இதை மூடி வைத்து விட்டு இது வரை செய்யாத ஒன்றை செய்ய முற்படலாம்.

மேலும், ஒவ்வொரு பாடல் பற்றி எழுதும் போதும் ஏதோ ஒரு சிந்தனை மேலோங்கி நிற்கும். அப்போது, பாடலில் உள்ள மற்ற விடயங்கள் சரியாக எடுத்துச் சொல்லாமல் விடுபட்டுப் போய் இருக்கலாம். அதை மீண்டும் கொண்டு வரவே இந்த முயற்சி.

அது ஒரு முன்ன பின்ன தெரியாத ஒரு ஊர். நேரமோ இரவு நேரம். சாலையில் ஒரு ஆள் அரவம் இல்லை. போகும் இடம் உங்களுக்கு சரியாகத் தெரியாது. விலாசம் தொலைந்து போய் விட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

தனியே நடந்து போகிறீர்கள். பயமாக இருக்குமா இல்லையா?

அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது. எதுக்காக முன்ன பின்ன தெரியாத ஊருக்குப் போகப் போகிறோம்? வேற வேலை இல்லையா?  என்று நீங்கள் நினைக்கலாம்.

அப்படி ஒரு  நேரம் எல்லோருக்கும் கட்டாயம் வரும். யாரும் இல்லாத தனி வழியில், போகும் இடம் தெரியாமல் போக வேண்டி வரும் என்கிறார் அருணகிரிநாதர்.

இறப்புக்குப் பின், இந்த ஆத்மா தனியாகத்தான் போக வேண்டும்.

எவ்வளவுதான் அன்பு செலுத்தும் நட்பும் உறவும் இருந்தாலும், யாரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போக முடியாது.   யார் வருவார்கள் கூட?

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை.

கொட்டி முழக்கி அழுதிடுவார், மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ இறைவா கச்சி ஏகம்பனே  என்று ஓலமிடுவார் பட்டினத்தடிகள்.

மனைவி, மகன், மகள் , அம்மா, அப்பா, அண்ணன் , தம்பி, தங்கை, பேரன் , பேத்தி ஒருத்தரும் கூட வர மாட்டார்கள்.

தனியாகத்தான் போக வேண்டும். அது மட்டும் அல்ல, போகும் இடமும் தெரியாது.  அந்த வழியில் வேலும் மயிலும் துணை என்கிறார்.


பாடல்


விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

பொருள்

விழிக்குத் துணை  = விழிக்குத் துணை

திரு மென்மலர்ப் பாதங்கள் = உயர்ந்த மென்மையான மலர் போன்ற பாதங்கள்

மெய்ம்மை குன்றா = உண்மை குறையாத

மொழிக்குத் துணை = மொழிக்குத் துணை

முரு காவெனு நாமங்கள் = முருகா, முருகா, முருகா என்ற நாமங்கள்

 முன்புசெய்த = முற்பிறவியில் செய்த

பழிக்குத் துணை  = பழிகளுக்கு துணை

யவன் பன்னிரு தோளும் = அவன் பன்னிரு தோள்களும்

பயந்த தனி வழிக்குத் துணை = பயந்த தனி வழிக்குத் துணை

வடி வேலுஞ் = வடிவான வேலும்

செங் கோடன் மயூரமுமே. = செங்கோடன் மயிலும்

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_22.html

No comments:

Post a Comment