கம்ப இராமாயணம் - கடலை கடத்தல்
எதையாவது விட முடிகிறதா ?
நல்லதை விடுங்கள், கெட்ட பழக்கத்தைக் கூட விட முடிவதில்லை.
மருத்துவர் சொல்கிறார், அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே என்று, சரி என்று நாமும் தலையை ஆட்டி விட்டு வருகிறோம்...சிறிது நாள் கழித்து எதை சாப்பிடக் கூடாது என்று சொன்னாரோ அதைக் கண்டால் உடனே சாப்பிட்டு விடுகிறோம்.
இந்த whatsapp , youtube , facebook, எதையாவது விட முடிகிறதா?
பிறந்தது முதல் சாப்பிடும் சில உணவு வகைகள்...அதை இன்றும் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறுகிறதா இல்லையா?
இன்னும் ஒரு படி மேலே போவோம்...உறவுகள். விட முடிகிறதா? சங்கிலி போல் கட்டிப் போடுகிறதா இல்லையா?
இன்னும் கொஞ்சம் மேலே போவோம்...பொதுவாகவே எந்த அனுபவத்தையும் நம்மால் விட முடிவதில்லை.
ஏன்?
எதையும் நாம் முழுவதுமாக அனுபவிப்பது கிடையாது. அரைகுறையாக அனுபவிக்கிறோம். அனுபவம் நிகழும் போது மனம் அங்கே இருப்பது இல்லை.
காப்பி குடிக்கும் போது செய்தித் தாள் வாசிப்பது; மனம் செய்தியில் போகிறது.
சிற்றுண்டி சாப்பிடும் போது , மனம் அலுவலகம், போக்குவரத்து நெரிச்சல் என்று அலை பாய்கிறது.
அலுவகம் போனால், வீட்டு நினைப்பு.
மனமும், புத்தியும், உடம்பும் ஒன்றாக இருப்பதே இல்லை.
ஒன்றை முழுவதுமாக அனுபவித்து விட்டால், பின் மனம் அதற்காக ஏங்காது. பின்னும் கிடைத்தால் அனுபவிக்கலாம். ஆனால், அது இல்லையே என்று மனம் ஏங்காது. அதை எண்ணி அதிலியே மனம் செல்லாது.
இலயிக்க வேண்டும். மனம் ஒன்ற வேண்டும். அனுபவம் முழுமையாக வேண்டும்.
அப்படி நிகழ்ந்தால், அந்த அனுபவத்தை நாம் கடந்து மேலே போய் விடலாம். இல்லை என்றால், மீண்டும் மீண்டும் செக்கு மாடு போல அதையே சுற்றி சுற்றி வர வேண்டி இருக்கும்.
கம்பன் சொல்கிறான், தசரதன் அனுபவித்தே கடந்து விட்டான் என்று. அதைத் தாண்டி போய் விட்டான்.
எவற்றை தாண்டிப் போனான்?
"தானம் கொடுத்து கொடுத்தே தன்னிடம் உதவி என்று வந்தவர்களின் கூட்டத்தை கடந்தான். நாம் ஒரு உரூபாய் , அல்லது ஐந்து உரூபாய் பிச்சை போடுவோம். அது அவனுக்கு எத்தனை நாள் வரும்? மீண்டும் பிச்சை கேட்டு வருவான். தசரன் கொடுத்தால், அந்த பிச்சைக் காரனின் வறுமையே தீர்ந்து விடும். அவன் மீண்டும் உதவி கேட்டு வரமாட்டான். இப்படி தன்னிடம் உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு கொடுத்து கொடுத்து இனி அப்படி ஒரு வர வழி இல்லாமல் செய்து விட்டான்....ஈகை என்ற கடலை தர்மம் செய்தே கடந்தான்.
அது மட்டும் அல்ல
எதைப் படித்தாலும் அரைகுறையாக குறையாக படிப்பது இல்லை. முழுவதுமாக, ஆராய்ந்து , அதன் ஆழம் வரை சென்று, இனி இதில் படிக்க மேலும் ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு படிப்பான். அறிவு என்ற கடலை படித்தே கடந்து விட்டான்.
அது மட்டும் அல்ல
பகைவர்கள் என்ற கடலை தன் வாளால் கடந்தான். என்ன அர்த்தம்? பகைவர்களே இல்லை. பகையை சுத்தமாக ஒழித்து விடுவான்.
அது மட்டும் அல்ல
பிறவி என்ற கடலை முழுவதும் அனுபவித்தே கடந்து விட்டான். ஒன்றும் மிச்சம் வைக்கவில்லை. ஒரு அனுபவமும் பாக்கி இல்லை.
"
பாடல்
ஈய்ந்தே கடந்தான் இரப்போர் கடல்;எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான் பகை வேலை; கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பௌவம்.
பொருள்
ஈய்ந்தே கடந்தான் = கொடுத்தே கடந்தான்
இரப்போர் கடல் = உதவி என்று கடல் போல் வந்த கூட்டத்தை
எண் இல் = கணக்கில் இல்லாத
நுண் நூல் = நுண்மையான நூல்களை
ஆய்ந்தே கடந்தான் = ஆராய்ச்சி செய்தே கடந்தான்
அறிவு என்னும் அளக்கர்; = அறிவு என்ற கடலை
வாளால் = வாளால்
காய்ந்தே கடந்தான் = சண்டை இட்டே கடந்தான்
பகை வேலை = பகைவர்கள் என்ற கடலை
கருத்து முற்றத் = மனம் முழுவதும்
தோய்ந்தே கடந்தான் = தோய்ந்து அனுபவித்தே கடந்தான்
திருவின் = செல்வத்தின்
தொடர் போக பௌவம். = தொடர்ந்து வரும் பிறவி என்ற கடலை
அளக்கர் , வேலை, பௌவம் என்றால் கடல் என்று அர்த்தம்.
எதை எடுத்தாலும், அதன் உச்சி தொட்டு அதை தாண்டி போய் விட வேண்டும். சிக்கிக் கொண்டு உழன்று கொண்டே இருக்கக் கூடாது.
எல்லாவற்றையும் அனுபவித்து விட்டால், மரண பயம் ஏன் வருகிறது.
இதையெல்லாம் விட்டு விட்டு போக வேண்டுமே என்ற ஏக்கமும் பயமும் ஏன் வருகிறது. அனுபவம் இன்னும் மிச்சம் இருப்பதால்.
கணவனோ/மனைவியோ/ பிள்ளைகளோ/ உடன் பிறப்போ/ நட்போ...மூச்சு முட்ட அன்பு செய்யுங்கள். நாளையே அவர்களை விட்டு விட்டு போவது என்றாலும் ஒரு ஏக்கம் இருக்கக் கூடாது.
கிராமத்துப் பக்கம் இன்றும் சொல்வார்கள் "அவருக்கு என்ன மகராசன், ஆண்டு அனுபவிச்சிட்டு போய் சேர்ந்துட்டாருனு"
நாளைக்கு என்று மிச்சம் வைக்காமல் அனுபவிக்க வேண்டும்.
ஒவ்வொன்றை அனுபவிக்கும் போதும், இதுவே கடைசி என்று நினைத்து அனுபவித்துப் பாருங்கள். என்று ஒரு நாள் அது கடைசி அனுபவமாகத்தத்தான் போகிறது.
யோசியுங்கள்.
சரி அது ஒரு புறம் இருக்கட்டும்.
இன்னொன்றை கவனித்தீர்களா?
"எண் இல் நுண் நூல் ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர்"
அளக்கர் என்றால் கடல்.
அது அல்ல நான் சொல்ல வந்தது.
கணக்கில் அடங்காத நுண்மையான நூல்களை ஆய்ந்து கடந்தான் என்கிறான் கம்பன்.
என்ன அர்த்தம்.
தசரதன் காலத்திலேயே, கணக்கில் அடங்காத நுண்மையான நூல்கள் இருந்திருக்கின்றன. நுண்மையில்லாத நூல்கள் எத்தனையோ.
அதாவது, ஆராய்ச்சி செய்யத் தக்க நூல்கள் கணக்கில் அடங்காத அளவு இருந்ததாம்.
அவ்வளவு நூல்கள் இருந்தது என்றால், நம் முன்னவர்கள் அறிவின் முதிர்ச்சி எவ்வளவு இருந்திருக்க வேண்டும்.
நுண் நூல் எழுதும் அளவுக்கு அறிவு இருந்தது என்றால், நம் மொழி எவ்வளவு தொன்மையானதாக இருந்திருக்க வேண்டும்?
மொழி தோன்றி, அறிவு தோன்றி, ஆராய்ச்சிகள் செய்து, நுண் நூல் எழுதி இருக்கிறார்கள்.
எப்பேர்ப்பட்ட ஒரு பெரிய பாரம்பரியத்தின் வாரிசுதாரர்கள் நாம்.
நடுவில் எங்கேயோ தடம் புரண்டு விட்டோம் .வழி கண்டு பிடித்து மீண்டும் வந்து சேர வேண்டும்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_12.html
"ஆண்டு அனுபவிச்சிட்டு போய் சேர்ந்துட்டாரு" என்ற வாசகத்தின் முழுப் பொருளும் இந்தப் பாடலில் பொதிந்து கிடப்பது அருமை. நன்றி.
ReplyDelete