Pages

Friday, June 26, 2020

அபிராமி அந்தாதி - எழுதா மறை

அபிராமி அந்தாதி - எழுதா மறை 


தமிழை தாய் மொழியாகக் கொண்ட யாரிடமாவது அவர்களுக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டால் சண்டைக்கு வருவார்கள். "என் தாய் மொழி தமிழ். எனக்குத் தமிழ் தெரியாதா?" என்பார்கள்.

தமிழ் மொழி மூன்று பிரிவுகள் உடையது.

இயல், இசை மற்றும் நாடகம்.

மூன்றும் தெரிந்தால் தான் தமிழ் தெரிந்ததாக அர்த்தம்.

இப்போது மீண்டும் அதே கேள்வியை கேட்டுப் பாருங்கள். "வந்து, அது என்னன்னா ..." என்று இழுப்பார்கள்.

ஏன் இசையும், நாடகமும் தெரிந்து இருக்க வேண்டும்? அது ஏன் மொழியின் ஒரு கூறாக இருக்கிறது?

சொல்லுகின்ற தொனியிலும், சொல்லும் போது காட்டும் முக பாவத்திலும் சொல்லின் பொருள் மாறிப் போய் விடும்.

"உடம்பு எப்படி இருக்கிறது" என்ற கேள்வியை கேட்கும் விதத்திலும், காட்டும் முக பாவத்திலும் இருக்கிறது அதன் உண்மையான அர்த்தம். உண்டா ? இல்லையா?

எனவே, உச்சரிப்பும், பாவமும் முக்கியம் என்று வரையறை செய்தார்கள்.

சில ஆழ்ந்த அர்த்தங்களை எழுத்தில் கொண்டு வரவே முடியாது.

அவனும் அவளும் காதலிக்கிறார்கள்.  அவர்கள் பார்வையில் ஆயிரம் அர்த்தம். அதை எழுதிக் காட்ட முடியுமா?

கண்ணோடு கண்ணினை நோக்கின் வாய் சொற்கள் என்ன பயத்ததோ சால்பு.

தாய்க்கு பிள்ளை மேல் உள்ள பரிவு...அதை வார்த்தையில் வடிக்க முடியுமா?

உணர்ச்சிகளை  எழுத்தில் கொண்டு வர முடியாது. அப்படியே கொண்டு வந்தாலும்  அது தவறாகிப் போய் விடும்.

சொல்லிக் காட்டலாம். சொல்லும் போது முகம்  அந்த உணர்ச்சியை பிரதி பலிக்கும்.  அதில் ஆயிரம் அர்த்தங்கள் தோன்றும்.

I Love you என்று எழுதி காண்பிப்பதற்கும் , காதலியின் கையை பிடித்துக் கொண்டு , அவள் கண்களை பார்த்து சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா?

அது போல்,  ஆழ்ந்த உண்மைகளை ஒருவன் ஆசிரியரிடம் இருந்து நேரடியாக கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அதை எழுத்தில் கொண்டு வர முடியாது  என்று நம்பினார்கள் நம் முன்னவர்கள்.

வேதத்தை எழுதக் கூடாது. அதன் அர்த்தம் அதன் உச்சரிப்பில் இருக்கிறது என்பதனால்  கேட்டு பெற வேண்டும் என்று வைத்தார்கள்.

நாம் பல பாடல்களை படிக்கும் போது, அவற்றின் சொற்கள் எளிமையாக இருந்தால்,  "இது தான் எனக்குத் தெரியுமே" என்று சொல்லி விட்டு மேலே போய் விடுகிறோம்.

அதன் ஆழ்ந்த அர்த்தங்களை நாம் அறிந்து கொள்ள சில நேரம் தவறி விடுகிறோம்.

பாடல்



நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின் 
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து 
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

பொருள்



நின்றும் = நின்றும்

இருந்தும் = ஓரிடத்தில் இருந்தும்

கிடந்தும் = கிடந்தும்

நடந்தும் = தேடி நடந்தும்

 நினைப்பது உன்னை = நினைப்பது உன்னை

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் = நான் எப்போதும் வணங்குவது உன் மலர் போன்ற பாதங்களை .

எழுதாமறையின் = எழுதப் படாத மறையின் (வேதத்தின், மறை பொருளின்)

ஒன்றும் அரும்பொருளே = அறிய ஒரு பொருளே

அருளே = அருளே வடிவானவளே

உமையே = ஒளி வடிவானவளே

இமயத்து அன்றும் பிறந்தவளே = என்று என்று அறியமுடியாத அன்று தோன்றியவளே

 அழியா முத்தி ஆனந்தமே = அழியாத முத்தியும், ஆனந்தமும் தருபவளே

உமா என்றால் ஒளி  என்று பொருள். ஒளி  அநாதியானது. என்று பிறந்தவள் என்று அறிய முடியாத அன்று பிறந்தவள் அவள்..

அது என்ன "எழுதா மறை" ?

வேதத்திற்கு இன்னொரு பெயர் "எழுதா மறை"

எழுத்துக்கும் சொல்லுக்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கும். உண்மையான அர்த்தம்  அதன் உச்சரிப்பில் இருக்கிறது. எனவே தான் அதை "எழுதா மறை  " என்றார்கள்.

பின்னால் வந்தவர்கள், "அது உயர் குலத்தவர் செய்த சதி. மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்று எழுதாமல் வைத்தார்கள் " என்று கூறினார்கள்.

எழுதாமல் இருந்ததற்கு காரணம், எழுதினால் பொருள் பழுது பட்டுவிடும்  என்பதால்.

"எழுதா மறையின் அரும் பொருள்"  அவள்.

ஒவ்வொரு பாடலுக்குள்ளும் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்து , புதைந்து கிடக்கின்றன.

என்று, எப்படி வெளிப்படுமோ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_26.html

1 comment:

  1. அபிராமி அந்தாதி போல அன்னியோன்னியமாக இலக்கியம் என்று சொல்லலாம் போல இருக்கிறது.

    ReplyDelete