கம்ப இராமாயணம் - காதலால் உரைத்தேன்
நம்மிடம் உள்ள ஒரு குறை, உணர்ச்சிகளை பொதுவாக வெளிப்படுத்தாமல் இருப்பது.
ஒருவர் மேல் அன்பு, நன்றி, காதல், அருள் என்று இருந்தால் அதை வெளிப்படையாக சொல்வது கிடையாது. கோபம் வந்தால் காட்டி விடுகிறோம். வெறுப்பு வந்தால் பேசாமல் இருந்து அதையும் காட்டுகிறோம். எதிர்மறை உணர்வுகளை காட்டும் அளவுக்கு நேர்மறை உணர்வுகளை காட்டுவதில்லை.
எத்தனை மனைவி அல்லது கணவனுக்கு நன்றி சொல்லி இருக்கிறோம். மனதுக்குள் இருக்கும். வெளியே சொல்வது இல்லை.
"எனக்கும் இந்த குடும்பத்துக்கும் நீ எவ்வளவு பாடு படுகிறாய்...நீ இல்லாமல் நான் என்ன செய்து விட முடியும்..."
என்று சொல்லி இருக்கிறோமா?
எத்தனை பேர் பெற்றோருக்கு நன்றி சொல்லி இருக்கிறோம்? மனதில் நன்றி உணர்வு இல்லாவிட்டால் அது வேறு விடயம். மனம் முழுவதும் அன்பும் நன்றியும் இருக்கும். இருந்தும் சொல்வது கிடையாது.
எவ்வளவோ செய்யும் அம்மா, கடினமான உழைப்பைத் தரும் அப்பா...ஒரு நாளாவது அவர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறோமா?
அலுவலகத்தில், நமது கை குட்டை கீழே விழுந்து விட்டால் அதை செல்பவருக்கு நன்றி சொல்கிறோம். நம் கை குட்டை, அது கீழே விழுந்து விட்டது. அதை எடுத்துக் கூட தரவில்லை....கீழே விழுந்து கிடக்கிறது என்று சுட்டி காட்டியவருக்கு நன்றி சொல்கிறோம்.
வீட்டில், அடுப்பில் வெந்து சமைக்கும் அம்மாவுக்கு, மனைவிக்கு ஒரு நன்றி கிடையாது.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
இந்திரசித்து செய்த இருந்த யாகத்தை இலக்குவன் அழிதது விட்டான். அடி பட்டு இராவணனிடம் வந்த இந்திரா சித்து சொல்கிறான்
"சீதை மேல் உள்ள ஆசையை விட்டு விடு. அப்படி ஆசையை விட்டு, சீதையை நீ விடுதலை செய்தால், இராம இலக்குவனர்களுக்கு உன் மேல் உள்ள கோபம் தணியும். போர் செய்யும் எண்ணத்தை கை விடுவார்கள். இலக்குவன் ஆற்றல் மேல் உள்ள பயத்தால் இதை நான் கூறவில்லை. உன் மேல் உள்ள காதலால் கூறுகிறேன் " என்றான்.
தந்தையின் மேல் "காதல்".
பெண்ணின் மேல் காதல் வரும். கடவுள் மேல் கூட காதல் வரும்.
"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி" என்பார் ஞானசம்பந்தர்.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே
ஆனால், தந்தை மேல் காதல்?
எவ்வளவு இனிமையான விஷயம்?
"அப்பா , உன் மேல் உள்ள காதலால் சொல்கிறேன், சீதையை விட்டு விடு"
பாடல்
‘ஆதலால், “அஞ்சினேன்“ என்று அருளலை; ஆசைதான்
அச்
சீதைபால் விடுதிஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்;
போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல்
காதலால் உரைத்தேன்’ என்றான்-உலகு எலாம் கலக்கி
வென்றான்.
பொருள்
‘ஆதலால், = எனவே
“அஞ்சினேன்“ என்று அருளலை = அச்சத்தினால் சொல்லவில்லை
ஆசைதான் = நீ கொண்ட அந்த ஆசை
அச் சீதைபால் = அந்த சீதையின் மேல்
விடுதிஆயின் = விட்டு விடுவாய் என்றால்
அனையவர் = அவர்கள், இராம இலக்குவனர்கள்
சீற்றம் தீர்வர் = கோபம் இல்லாமல் மாறுவார்கள்
போதலும் புரிவர் = உன்னை விட்டு விட்டு போய் விடுவார்கள்
செய்த தீமையும் பொறுப்பர் = நீ செய்த தீமைகளையும் பொறுத்துக் கொள்வார்கள்
உன்மேல் = உன்மேல்
காதலால் உரைத்தேன் = உள்ள காதலால் சொல்லுகின்றேன்
என்றான்- = எண்டான்
உலகு எலாம் கலக்கி = உலகம் அனைத்தையும் கலக்கி
வென்றான். = வெற்றி பெற்ற இந்திரசித்து
உணர்ச்சிகளை மென்மையாக, அழகாக வெளிப்படுத்திப் பாருங்கள்.
வாழ்க்கை அவ்வளவு அழகாக, இனிமையாக இருக்கும்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_3.html
தகப்பனே தப்பு செய்தது தெரிந்தும் அவனுக்காக போராடி அடிபட்ட பிறகும்,"நீ செய்வது தப்பு,இப்பொழுதாவது திருந்து " என நயம் பட கூறுவது இந்திரஜித்தின் மேல் நமக்கு மதிப்பு உயர்கிறது.
ReplyDelete