Pages

Monday, June 8, 2020

திருக்குறள் - ஊறிய நீர்

திருக்குறள் - ஊறிய நீர் 


சோடியம் என்று ஒரு தனிமம் உண்டு. மிகவும் வீரியம் வாய்ந்தது. தண்ணீரில் பட்டால் வெடிக்கும் குணம் உடையது.

குளோரின் என்று ஒரு தனிமம் உண்டு. நச்சுத் தன்மை கொண்டது. லேசாக முகர்ந்து பார்த்தால் மயக்கம் வந்து விடும். அறுவை கிகிச்சை பண்ணுவதற்கு முன் குளிரோபோர்ம் தருவார்கள். அதை லேசாக முகர வைப்பார்கள். முகர்ந்த பின் பத்து எண்ணுவதற்குள் நினைவு தப்பிவிடும். மயக்கம் வந்து விடும்.

இப்படி இரண்டு ஆபத்தான தனிமங்களை சேர்த்தால் கிடைப்பது சோடியம் குளோரைட் என்ற சேர்மம். வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு.

அந்த உப்பு இல்லாவிட்டால் சாப்பாடு வாயில் வைக்க முடியாது. உணவின் சுவையை தருவது, கூட்டுவது இந்த சோடியம் குளோரைடு என்ற உப்பு.

இந்த இரண்டு பொருளும் கலந்தால், இப்படி ஒரு சுவையான பொருள் கிடைக்கும் என்று தெரியுமா? இந்த உப்பு நமக்கு இயற்கையாக கிடைக்கிறது. நாம் ஒன்றும் சோடியத்தையும் , குளோரினையும் சேர்க்க வேண்டியது இல்லை. மேலும், உப்பின் சுவை எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். கரிப்புச் சுவை.

பால் இருக்கிறது. சுவையாக இருக்கும். தேன் இருக்கிறது. அதுவும் சுவையானதுதான்.

இரண்டையும் கலந்தால் அதன் சுவை எப்படி இருக்கும்?

கலந்து பார்த்தால்தான் தெரியும். அப்படி ஒரு கலவை இயற்கையில் கிடையாது. ஒவ்வொரு முறையும் கலந்து எப்படி இருக்கும் என்று சுவைத்துப் பார்க்க வேண்டும். ஒரு நாள் பால் திடமாக இருக்கும், இன்னொரு நாள் பால் தண்ணியாக இருக்கும், ஒரு நாள் பால் கூடி தேன் குறைவாக இருக்கும், இன்னொரு  நாள் தேன் கூடி பால் குறைவாக இருக்கும். ஒவ்வொரு நாளும் அது மாறிக் கொண்டே இருக்கும். பாலை அதிகம் காய்ச்சினால் ஒரு சுவை, குறைவாக காய்ச்சினால் இன்னொரு சுவை .

வள்ளுவர் சொல்கிறார், "என் காதலியின் வாயில் ஊரும் நீர் இந்த தேனும் பாலும்  கலந்தது போன்ற சுவையாக இருக்கிறது" என்று.

பாடல்


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்


பொருள்


பாலொடு = பாலுடன்

தேன்கலந் தற்றே  = தேன் கலந்த மாதிரி

பணிமொழி = மென்மையான மொழி பேசும்

வாலெயிறு = தூய்மையான வெண்மையான பல்லில்

ஊறிய நீர் = தோன்றிய நீர்


அவளுடைய முத்தம் அவ்வளவு சுவையாக இருக்கிறது என்று சொல்கிறார்.

சரி, அது எல்லாருக்கும் தெரிந்தது தானே. காதலியின் முத்தம் சுவையாக இருக்கிறது பாலும், தேனும் கலந்தது மாதிரி சுவையாக இருக்கிறது என்று சொல்லி விட்டுப் போக வேண்டியது தானே.

அப்படி சொல்லி விட்டுப் போயிருந்தால், அவர் வள்ளுவர் இல்லை.

என்னதான் காதலியாக இருந்தாலும், முரட்டுத் தனமாக பேசுவது, குரலை உயர்த்திப் பேசுவது,  கத்திப் பேசுவது என்று இருந்தால், அவளை போய் அன்புடன் முத்தம் குடுக்கத் தோன்றுமா?  எப்ப என்ன கத்துவாளோ என்ற பயம் இருக்கும் தானே?

முத்தம் என்பது உடல் சார்ந்த ஒன்று மட்டும் அல்ல. அது உணர்வு சார்ந்ததும்.

"பணி மொழி" என்கிறார்.

பணிவான மொழி. மென்மையாக பேசுபவள். சாந்தமாக பேசுபவள். அவளின் குரலை பற்றிக் கூறுகிறார். மேன்மை இல்லாத பெண்ணின் முத்தம் இனிக்குமா?

சரி, மென்மைதான் . காதலி தான். குளித்து நாலஞ்சு நாள் ஆச்சு. முடி எல்லாம் சிக்கல் பிடித்து இருக்கிறது. பல் விளக்கி இரண்டு நாள் ஆச்சு. கண்டதையும் சாப்பிட்டு சரியாக  வாய் கழுவாமல் கொஞ்சம் வாடை அடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்....முத்தம் இனிக்குமா?

"வாலெயிறு ஊறிய நீர்" என்கிறார்.

வால் என்றால் தூய்மையான, வெண்மையான. எயிறு என்றால் பல்.

"இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை" , என்பது திருமந்திரம்.

வெண்மையான, தூய்மையான பல்.

பல்லில் இருந்து எப்படி நீர் சுரக்கும்? மலையில் இருந்து அருவி விழுகிறது. அது  அந்தப் பாறையில் இருந்து வருவது போலத்தான் இருக்கும். பல் வெண்மையாக சுத்தமாக இருந்தால், ஈறும் சுத்தமாக இருக்கும், முகமும் சுத்தமாக இருக்கும்,  உடலும் சுத்தமாக இருக்கும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது மனம் (மென்மையான மொழி) மற்றும் உடல் இரண்டும் இனிமையாக இருக்கும் காதலியின் முத்தம்  தேனும் பாலும் கலந்தது போல இருக்கும் என்கிறார்.

ஒவ்வொரு நாளும், இருவரின் உணர்ச்சிகளும் மாறுபடும். எப்போதும் ஒரே மாதிரியா இருக்கும்?

எப்படி தேன் மற்றும் பாலின் கலப்பு விகிதம் மாறும் போது அந்த கலவையின்  சுவை மாறுகிறதோ அது போல ஒவ்வொரு நாளும் அந்த முத்தத்தின் சுவை மாறிக் கொண்டே இருக்கும் என்கிறார்.

இது இன்ன சுவை என்று கூற முடியாது.

இதெல்லாம் சொல்லுவது - நான் அல்ல - வள்ளுவர். அதை மறந்து விடக் கூடாது.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_8.html

1 comment:

  1. இந்த சிறிய இரண்டு வரிகளில் இவ்வளவு சமாச்சாரம் இருக்கா?
    நுணுக்கமாக படித்தால் தான் ரசிக்க முடிகிறது.நன்றி..

    ReplyDelete