நாலாயிர திவ்ய பிரபந்தம் - வைகுந்தம் புகுவது விதியே
நாம் வைகுந்தம் போவோமா அல்லது மாட்டோமா என்ற கேள்வி பக்தர்கள் மனதில் இருப்பது இயற்கை.
நாம் பாவம் செய்கிறோமா? புண்ணியம் செய்கிறோமா ? நல்வினையா அல்லது தீவினையா நாம் செய்வது?
சாத்திரங்களில் சொன்னதை நாம் சரியாக கடை பிடிக்கிறோமா இல்லையா என்ற சந்தேகங்கள் வரமால் இருக்காது.
சாத்திரங்கள் பலவாறாக பிரிந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒன்றைச் சொல்கின்றன. சில ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றன. நாம் எதைச் செய்வது, எதை விடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறோம்.
மேலும், இல்லறத்தில் ஈடுபடும்போது, அனைத்து அறங்களையும் கடை பிடிக்க முடியுமா ? சில பல நிர்பந்தங்களினால் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் நிகழ்ந்து விடலாம்.
அதுக்கெல்லாம் பரிகாரம் உண்டா?
அதுக்கெல்லாம் கவலைப் படாதீர்கள். நீங்கள் வைகுந்தம் போவது என்பது விதி. நீங்கள் கட்டாயம் போவீர்கள். போகாமல் இருக்க வழியே இல்லை. போய் தான் ஆக வேண்டும் ஏன் என்றால் நீங்கள் திருமாலின் உறவினர் என்கிறார் நம்மாழவார்.
வைகுந்த வாசலுக்குப் போனவுடன், அங்குள்ள தேவர்களும் முனிவர்களும் உங்களை வரவேற்று, நீங்கள் எமது சொந்தக் காரர் என்று உறவு கொண்டாடி, அழைத்துக் கொள்வார்களாம்.
இந்த மண்ணுலகில் பிறந்த உங்களின் விதி வைகுந்தம் அடைவதே. அதில் ஒரு சந்தேகமும் வேண்டாம் என்கிறார்.
பாடல்
வைகுந்தம் புகுதலும்* வாசலில் வானவர்*
வைகுந்தன் தமர்எமர்* எமதிடம் புகுதென்று*
வைகுந்தத்து அமரரும்* முனிவரும் வியந்தனர்*
வைகுந்தம் புகுவது* மண்ணவர் விதியே. 10.9.9 (நம்மாழவார்)
பொருள்
வைகுந்தம் புகுதலும் = வைகுந்தத்தில் புகும் பொழுது
வாசலில் = அதன் வாசலில்
வானவர் = வானவர்கள்
வைகுந்தன் = வைகுண்ட வாசன் திருமால்
தமரெமர் = தமர் + எமர் = தமர் என்றால் சொந்தம். திருமால் நம்ம சொந்தக் காரன். அதாவது , உமக்கும் எமக்கும் அவன் பொதுவான சொந்தக்காரன். அவன் மூலம் நீரும் நாமும் சொந்தமாகி விட்டோம்.
எமதிடம் புகுகென்று = எங்கள் இடத்திருக்கு வாருங்கள் என்று
வைகுந்தத் தமரரும் = வைகுந்தத்து + அமரரும். வைகுந்தத்தில் உள்ள அமரர்களும்.
முனிவரும் = அங்குள்ள முனிவர்களும்
வியந்தனர் = ஆச்சரியத்தோடு அழைத்தனர்
வைகுந்தம் புகுவது = வைகுந்தம் செல்வது
மண்ணவர் விதியே = மண்ணில் வாழ்பவர்களின் விதியே
எல்லோரும் வைகுந்தம் போகலாம். அது நமக்கு விதிக்கப்பட்ட விதி என்கிறார்.
பரமபதத்தின் திருவாயிலை அடைந்தபோது, அங்கு நின்ற தேவர்களும் முனிவர்களும், "வைகுந்தனின் அடியார்கள் எங்கள் தலைவர்கள்! உங்களை வரவேற்பதில் எமக்கு பெருமகிழ்ச்சி!" என்று வியந்து போற்றி வரவேற்றார்கள். அத்துடன், "பூவுலக மாந்தர் பரமபதம் அடைவதும் விதிக்கப்பட்ட நற்செயலே!" என்றும் ஆனந்தப்பட்டனர்!
நாம் விரும்பும் ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால் நாம் எப்படி அவரை ஆச்சரியத்தோடு, ஆர்வமாக "வாங்க வாங்க" என்று வரவேற்போம், அது போல திருமாலின் பக்தர்களை முனிவர்களும் தேவர்களும் வரவேற்பார்களாம்.
அது மட்டும் அல்ல, திருமால் தான் பூலோகத்திலே வாசம் செய்கிறாரே, அதை விட்டு விட்டு நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள் என்று "ஆச்சரியத்தோடு வரவேற்பார்களாம்"
அது மட்டும் அல்ல, இந்த மண்ணில் மனிதர்களாக ப் பிறந்து, அவன் அடியார்களாக ஆன பின், வைகுந்தம் போவது என்பது சர்வ நிச்சயம் என்கிறார் ஆழ்வார்.
திருமாலின் பக்தர்கள் என்று கூட சொல்லவில்லை. திருமாலின் உறவினர் என்று அவ்வளவு அன்யோன்யமாக உறவு கொண்டாடுகிறார். நம்ம சொந்தக் காரர் வீட்டுக்கு நாம் செல்ல என்ன தயக்கம். எப்ப வேண்டுமானாலும் போகலாம் என்பது போலச் சொல்கிறார்.
இது போன்ற பாடல்களை வாசிக்கும் போது , வார்த்தைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது. அந்த உணர்ச்சியை, அந்த பாவத்ததை, அந்த அனுபவத்தை உணர வேண்டும்.
கண்மூடி இரசித்துப் பாருங்கள். அந்தப் பாசுரம் அப்படியே மனதுக்குள் இறங்கும். முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டாகும்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_13.html
"இது போன்ற பாடல்களை வாசிக்கும் போது , வார்த்தைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது. அந்த உணர்ச்சியை, அந்த பாவத்தை, அந்த அனுபவத்தை உணர வேண்டும்." சரியான வார்த்தை.
ReplyDeleteநமக்குள் உள்ள சந்தேகத்தையும் பயத்தையும் போக்கி மனோ தைரியத்தை கொடுக்கின்றது.
அருமையான விளக்கம்.
பாசுரத்தை சொல்லும் போது மனம் அமைதி அடைகிறது. விளக்கவுரைக்கு நன்றி.
ReplyDelete