திருக்குறள் - நன்றி மறப்பது நன்றன்று
தமிழ் பாடல்களை படித்து புரிந்து கொள்வது என்ன பெரிய கடினமான காரியமா என்று நான் நினைத்தது உண்டு.
எந்தப் பாடலிலும் ஒரு சில கடினமான சொற்கள் இருக்கும். அகராதியில் தேடினால் தெரியாத சொற்களுக்கு பொருள் விளங்கிவிட்டுப் போகிறது.
இதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று நினைத்தேன்.
அது எவ்வளவு தவறு என்று பரிமேலழகரின் உரையைப் படிக்கும் போது தெரிகிறது.
நாம் சொல்லில் இருந்து பொருளை பிடிக்க நினைக்கிறோம். அவர் பொருளில் இருந்து சொல்லுக்கு வருகிறார்.
பாடல்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
பொருள்
(to continue reading, please click the link below)
interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_50.html
இது என்ன பெரிய சிக்கலான குறளா ? வார்த்தைக்கு வார்த்தை பொருள் சொல்வதானால் இப்படி சொல்லி விடலாம்
நன்றி = ஒருவன் நமக்குச் செய்த நல்லவைகளை
மறப்பது நன்றன்று = மறப்பது நல்லது அல்ல
நன்றல்லது = நன்மை தராதவற்றை
அன்றே மறப்பது நன்று = அன்றே மறப்பது நல்லது
அவ்வளவுதானே. பொதுவான அர்த்தம் அப்படித்தான் என்று நினைப்போம். இதில் என்ன நுணுக்கமான பொருள் இருந்து விடப் போகிறது என்று நினைத்து இதை அலட்சியம் செய்து விட்டு அடுத்து குறளுக்கு தாவி விடுவோம்.
பரிமேலழகர் ஒரு உரை சொல்கிறார். எத்தனை ஆயிரம் வருடம் படித்தாலும் அது என் மர மண்டைக்கு எட்டி இருக்காது.
அது என்ன தெரியுமா?
நமக்கு நல்லது செய்வதும், அல்லாதன செய்வதும் வேறு வேறு ஆள் என்று நினைத்துக் கொண்டு நாம் பொருள் சொல்கிறோம்.
ஒரே ஆள் இரண்டையும் செய்தால்?
இப்படி யோசிக்க முடியுமா நம்மால்?
ஒருவன் நமக்கு நன்மையையும் செய்து இருக்கிறான், தீமையும் செய்து இருக்கிறான். அப்படி இருந்தால், அவன் செய்த நல்லவைகளை மனதில் வைத்துக் கொள் . அவன் செய்த தீமைகளை உடனேயே மறந்து விடு என்கிறார்.
நம்மில் பலருக்கு சிக்கல் என்ன என்றால், நல்லதை மறந்து விடுகிறோம். தீயவற்றை நினைவில் வைத்துக் கொள்கிறோம்.
பெரும்பாலான கணவன் மனைவி சிக்கல் ஏன் வருகிறது.
என்றோ எப்போதோ நடந்த ஒன்றை ஞாபகம் வைத்துக் கொண்டு, நீங்கள் அன்று அப்படி சொன்னீர்களே, அப்படிச் செய்தீர்களே என்று அந்த ஒரு நல்லன அல்லாதாதை ஆயுள் முடியும் வரை மனதில் வைத்து கொண்டு சொல்லிக் சொல்லி காட்டிக் கொண்டே இருப்பது.
கணவன் எவ்வளவு நல்லது செய்து இருந்தாலும், எல்லாவற்றையும் மறந்து விட்டு, என்றோ சொன்ன ஒன்றை ஞாபகம் வைத்து மறக்காமல் சொல்வது.
நம்மை சுற்றி உள்ள ஒவ்வொருவரும் நமக்கு ஏதோ ஒரு நன்மை செய்து இருப்பார்கள். அறிந்தோ அறியாமலோ சில தீமைகளும் செய்து இருக்கலாம்.
தீமையை மறந்து, நல்லதை மட்டும் மனதில் வைத்து இருந்தால் வாழ்க்கை எவ்வளவு சுகமாக இருக்கும்? உறவுகள் எவ்வளவு இனிமையாக இருக்கும்.
ஒருவன் நமக்கு ஒரு தீமை செய்தால், அதை எப்படி மறக்க முடியும்? வள்ளுவர் சொல்லுவார். அவருக்கு என்ன.
இன்னும் சொல்லப் போனால், தீமை மட்டும் தான் ஆழமாக ஞாபகம் இருக்கிறது.
இந்த மனுஷன் திருவள்ளுவர், இப்படி ஒரு கேள்வி வரும் என்று நினைத்து, அதற்கும் பதில் சொல்லிவிட்டு போய் இருக்கிறார்.
மறப்பது எப்படி என்று தெரியுமா உங்களுக்கு?
எவ்வளவு யோசித்தாலும் கண்டு பிடிக்க முடியாது. திருவள்ளுவர் ஒருவரால் தான் அப்படி யோசித்து சொல்ல முடியும்.
மறப்பது எப்படி என்று வள்ளுவர் சொன்னதை நாளை சிந்திப்போமா ...
நல்ல சரியான செய்திதான்.
ReplyDelete