கம்ப இராமாயணம் - அருள் நின் இலையோ?
இராமாயணத்தில் எத்தனையோ பகுதிகள் இருக்கின்ற. இராமனின் வீரம், அவன் நடுவு நிலைமை, பெற்றோர் சொல்லுக்கு கீழ் படிதல், சகோதரத்துவம் என்று எவ்வளவோ இருக்கிறது.
இராமனுக்கும் சீதைக்கும் நடுவில் இருந்த அந்த அன்யோன்ய அன்பு, அவர்கள் நடத்திய இல்லறம், அவர்களின் காதல் காவிய ஓட்டத்தில் நாம் காணாமல் விட்டு விட வாய்ப்பு இருக்கிறது.
கதையின் ஓட்டத்தில், அதில் உள்ள சிக்கல்களில், இந்த அன்பு வெளிப்பாடு மறைந்து போகிறது.
நிஜ வாழ்விலும் அப்படித்தானே ?
குடும்ப வாழ்வில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கும். பணக் கஷ்டம், மனக் கஷ்டம், உறவுகளில் குழப்பம், சிக்கல், வேலை செய்யும் இடத்தில் தோன்றும் பிரச்சனைகள், உடல் நலக் குறைவு, பிள்ளைகள் படிப்பு, அவர்கள் வேலை என்று ஆயிரம் பிரச்சனைகள்.
இதற்கு இடையில் கணவன் மனைவி அன்பு செலுத்த, அதை வெளிப்படுத்த நேரம் கிடைக்காமல் போகலாம். நேரம் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தகுந்த மன நிலை இல்லாமல் போகலாம்.
அப்படிப் போகக் கூடாது.
எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், அன்பை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன் படுத்த வேண்டும். எல்லா பிரச்சனைகளும் தீரட்டும் , அப்புறம் அன்பு செய்யலாம் என்றால், அலை எப்ப ஓய்வது தலை எப்ப முழுகுவது?
கம்ப இராமாயணத்தில் இராமனுக்கும் சீதைக்கும் இடையே இருந்த அந்த அன்பு பரிமாற்றத்தை எடுத்துக் காட்ட ஆசை. இனி வரும் சில நாட்களில் அது பற்றிய பாடல்களை காண இருக்கிறோம்.
படிக்க படிக்க, அவர்கள் இருவர் மேலும் நமக்கு ஒரு பாசம், ஒரு அன்யோன்யம் வந்து விடும். நம்ம வீடு பிள்ளைகள் மாதிரி, நம் மகன்,மருமகன், மகள், மருமகள் போல ஒரு பாசப் பிணிப்பு வரும்.
காதலைச் சொல்ல, பிரிவைத் தவிர வேறு நல்ல இடம் எது? ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்கும் போது தான், அன்பின் ஆழம் புரியும். மற்றவரை காண வேண்டும் என்ற ஏக்கம், தவிப்பு, உருக்கம் எல்லாம் பிரிவில் தான் வரும்.
கிட்கிந்தை. கார்காலம். (மழைக் காலம்). இராமன் தனித்து இருக்கிறான். மனைவி எங்கு இருக்கிறாள் என்று கூடத் தெரியாது. தவிக்கிறான் இராமன்.
மழை பொழிகிறது. கானகம். எங்கும் மரங்கள், செடி கொடிகள், பூக்கள், பறவைகள். ஈரம் படிந்து,எங்கும் உயிர் தழைக்கிறது. தாவரங்கள் தளிர் விட்டு நிமிர்கின்றன. பறவைகள் மழையில் நனைந்து சிறகுகளை அடித்து நீர் தெளிக்கின்றன. வனம் எங்கும் பூக்கள். மழை பெய்யும் மெல்லிய ஓசை.
இராமன் அந்த மழையைப் பார்த்து சொல்கிறான்
" என் சீதை எங்கு இருக்கிறாள் என்று கூடத் தெரியவில்லை. இந்த உயிரைச் சுமந்து கொண்டு திரிகிறேன். தண்ணீரே, உனக்கு அருள் இல்லையா ? கார் காலமே, என் உயிரை நீயும் கலக்குவது ஏன் "
என்று உருகுகிறான்.
பாடல்
வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ்
ஊரே அறியேன்; உயிரோடு உழல்வேன்;
நீரே உடையாய், அருள் நின் இலையோ?
காரே! எனது ஆவி கலக்குதியோ?
பொருள்
(click the following link to continue reading)
https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_14.html
வார் ஏர் முலையாளை = கச்சணிந்த அழகிய மார்பகங்களை உடைய சீதையை
மறைக்குநர் = மறைத்து வைத்து இருப்பவர்கள்
வாழ் = வாழுகின்ற
ஊரே அறியேன்; = ஊரை நான் அறியவில்லை
உயிரோடு உழல்வேன் =என் உயிரோடு இருந்து துன்பப் படுகிறேன்
நீரே உடையாய், = ஏய் கார்காலமே , நீ தண்ணீரை நிறைய வைத்து இருக்கிறாய்.
அருள் நின் இலையோ? = உன்னிடம் அருள் இல்லையா ?
காரே! = கார் காலமே
எனது ஆவி கலக்குதியோ? = என் ஆவியை கலங்க வைப்பாயோ?
நீர் என்றால் அருள், என்று ஒரு அர்த்தம் உண்டும். கடின மனம் உள்ளவர்களை, "உனக்கு நெஞ்சில ஈரமே இல்லையா" என்று சொல்வது இல்லையா.
ஒரு நிமிடம் இராமனின் இடத்தில் இருந்து யோசித்துப் பார்ப்போம் .
மனைவியைக் காணோம். காவல் நிலையத்தில சென்று புகார் கொடுக்கலாமா? செய்தித் தாளில் விளம்பரம் போட முடியுமா? தொலைக் காட்சியில் அறிவிக்க முடியுமா?
அவள் எங்கு இருக்கிறாள் என்று கூடத் தெரியவில்லை. எப்படி இருக்கும்?
அவளுடைய அழகிய உருவம் அவன் கண் முன் தோன்றுகிறது. கண் கலங்குகிறது.
தாடகை என்ற அரக்கியை கொன்றவன், ஏழு மரா மரங்களை ஒரே அம்பில் துளைத்தவன், வாலியின் மார்பில் ஊடுருவ கணை விடுத்தவன், மனைவியைக் காணாமல் தவிக்கிறான்.
அது தான் அன்பு. அது தான் காதல்.
மேலும் சிந்திப்போம்.
கார் காலத்தின் அடை மழை நின்றால் தானே ராமனால் சீதையை தேட முடியும்?விரக தாபத்தில் சீதையை அடைய மரம் செடி கொடி மழை என்று பாகு பாடு மாறாமல் எல்லாவற்றிடமும் கேட்கிறான்.அருமையான விளக்கம்.
ReplyDelete